செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி

செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி (ஆட்சிக் காலம் கி.பி.1748- 1762) என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராவார். இவர் இராக்கத் தேவர் சேதுபதி மன்னரையடுத்து மன்னரானவராவார். இவர் சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் அத்தையின் பேரன் ஆவார். இவர் 14 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.

பதவிக்கு வந்தவிதம்

முன்பு மன்னராக இருந்த சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதிக்கு ஆண்வாரிசு இல்லாததால் குமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் உடன் பிறந்த சகோதரரின் மகனான இராக்கத் தேவரைத் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் சேதுபதியாக நியமனம் செய்தார். இந்த மன்னர் திறமையற்றவராக இருந்ததால் தளவாய் இவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் அத்தையின் பேரனாகிய இவரை கி.பி.1748ல் சேதுபதி மன்னராக்கினார்.

நிகழ்வுகள்

இவரது ஆட்சி காலத்தில் தஞ்சை மராத்தியர் படைகள் சேது நாட்டின் வடபகுதியை ஆக்கிரமித்து இராமநாதபுரம் கோட்டை நோக்கி முன்னேறி வந்தன. இப்படை எடுப்பை சேதுபதியின் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் படுதோல்வி அடையச் செய்து சேதுநாட்டுத் தன்னரசை நிலை நாட்டினார்.

மறைவு

இந்த மன்னர் கி.பி.1762 இல் காலமானார். இவருக்கு ஆண்வாரிசு இல்லாததால் இவரது தங்கை முத்துத் திருவாயி நாச்சியார் மகன் முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி என்ற 11 மாதப் பாலகன் சேதுபதியாகப் பட்டம் சூட்டப்பெற்றார்.[1]

மேற்கோள்கள்

  1. டாக்டர். எஸ். எம். கமால் (2003). சேதுபதி மன்னர் வரலாறு. இராமநாதபுரம்: சர்மிளா பதிப்பகம். pp. 58 -59.