சுப்பையா சர்வானந்தா
தேசமானிய சுப்பையா சர்வானந்தா (Suppiah Sharvananda, 22 பெப்ரவரி 1923 - 10 சனவரி 2007) இலங்கைத் தமிழ் நீதிபதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இலங்கையின் தலைமை நீதிபதியாகவும், மேல் மாகாணத்தின் 1வது ஆளுநராகவும் பணியாற்றினார்.[1]
சுப்பையா சர்வானந்தா Suppiah Sharvananda | |
---|---|
1வது மேல் மாகாண ஆளுநர் | |
பதவியில் 6 சூன் 1988 – 10 சூன் 1994 | |
குடியரசுத் தலைவர் | ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா |
முன்னவர் | எவருமில்லை |
பின்வந்தவர் | தே. ம. சுவாமிநாதன் |
இலங்கையின் 37வது தலைமை நீதிபதி | |
பதவியில் 1984–1988 | |
நியமித்தவர் | ஜே. ஆர். ஜெயவர்தனா |
முன்னவர் | நெவில் சமரக்கூன் |
மீயுயர் நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 1974–1984 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஊர்காவற்துறை, பிரித்தானிய இலங்கை | 22 பெப்ரவரி 1923
இறப்பு | 10 சனவரி 2007 சிட்னி, ஆஸ்திரேலியா | (அகவை 83)
வாழ்க்கை துணைவர்(கள்) | புஷ்பவதி |
பிள்ளைகள் | நந்தகுமார் சந்திரமலர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலங்கை சட்டக் கல்லூரி இலண்டன் பல்கலைக்கழகம் |
சமயம் | இந்து சமயம் |
ஆரம்ப வாழ்க்கை
சர்வானந்தா யாழ்ப்பாண மாவட்டம், ஊர்காவற்துறையில் 1923 பெப்ரவரி 22 இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆங்கிலப் பாடசாலையிலும், பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார். பள்ளிப் படிப்பின் பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து 1946 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். சட்டக் கல்லூரியில் படிக்கும் போது, இலண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1]
சட்டத் தொழில்
சர்வானந்தா பிரபலமான வழக்கறிஞர்களான எச். டபிள்யூ. தம்பையா, சா.ஜே.வே. செல்வநாயகம், எச். வி. பெரேரா ஆகியோரின் கீழ் பணியாற்றினார். 1974 ஆம் ஆண்டில் இலங்கை மீயுயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டில் அன்றைய அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இவரை தலைமை நீதிபதியாக நியமித்தார். தமிழர் ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டது இதுவே முதல் தடவை ஆகும்.[1] மீயுயர் நீதிமன்றப் பணியில் அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் உட்படப் பல புகழ்பெற்ற வழக்குகளில் இவர் நீதிபதியாக இருந்து செயலாற்றினார். 1988 இல் மீயுயர் நீதிமன்றத்தில் இருந்து இளைப்பாறினார்.[1]
இறுதிக் காலம்
நீதிமன்றப் பதவியில் இருந்து இளைப்பாறிய பின்னர், 1988 ஆம் ஆண்டில் அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இவரை மேல் மாகாணத்தின் முதலாவது ஆளுநராக நியமித்தார். 1994 ஆம் ஆண்டு வரை இப்பதவியில் அவர் இருந்தார்.[1] 2001 இல் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா 1981 முதல் 1984 வரை நிகழ்ந்த இனக்கலவரம் பற்றிய அரசுத்தலைவரின் உண்மை ஆராயும் ஆணையத்தின் தலைவராக இவரை நியமித்தார்.[2]
புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வந்த சர்வானந்தா 2007 சனவரி 10 அன்று சிட்னியில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Palakidnar, Ananth (13 சனவரி 2007). "Sharvananda funeral today in Sydney". டெய்லிநியூஸ் இம் மூலத்தில் இருந்து 2011-06-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605003236/http://www.dailynews.lk/2007/01/13/news25.asp. பார்த்த நாள்: 30 ஆகத்து 2009.
- ↑ "Victims of ethnic violence get Rs. 70 m.". சண்டே டைம்சு. 25 சூலை 2004. http://www.sundaytimes.lk/040725/news/6.html. பார்த்த நாள்: 29 சனவரி 2015.