சீனக் கட்டிடக்கலை
சீனக் கட்டிடக்கலை என்பது, சீனாவில் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்த கட்டிடக்கலையைக் குறிக்கும். இதன் வளர்ச்சியில், கட்டிடங்களின் அமைப்பு முறையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டதாகக் கூற முடியாது எனினும், அழகூட்டல் அம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. சீனாவை ஆண்ட டாங் வம்சக் (Tang Dynasty) காலத்தில் இருந்து, சீனாவின் கட்டிடக்கலை அயல் நாடுகளான, கொரியா, ஜப்பான், தாய்வான், வியட்நாம் முதலிய நாடுகளின் கட்டிடக்கலைகளில் குறிப்பிடத் தக்க செல்வாக்குச் செலுத்தியது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனக் கட்டிடக்கலையில் ஐரோப்பியச் செல்வாக்கு ஏற்படுவதற்கு முன் சீனாவின் மரபுவழிக் கட்டிடக்கலையே பயன்பாட்டில் இருந்தது. 20 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில், மேற்கத்திய முறைக் கல்விகற்ற சீனக் கட்டிடக்கலைஞர்கள் சீனாவின் மரபுவழி அம்சங்களை மேற்கத்திய முறைகளுடன் கலந்து கட்டிடங்களை வடிவமைக்க முயன்றார்கள். எனினும் இது அதிகம் வெற்றி பெற்றதாகக் கூற முடியாது.