சி. திருநாவுக்கரசு
எஸ். ரி. அரசு என அழைக்கப்படும் சிவக்கொழுந்து திருநாவுக்கரசு (28 ஏப்ரல் 1926 - 17 பெப்ரவரி 2016) இலங்கையின் பிரபலமான நாடகக் கலைஞரும், நாடக இயக்குனரும், ஒப்பனைக் கலைஞரும், ஒளிப்பதிவாளரும், சிற்பக் கலைஞரும், தமிழ்ப் பற்றாளரும் ஆவார்.[1] 75 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.[2]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எஸ். ரி. அரசு |
---|---|
பிறந்ததிகதி | 28 ஏப்ரல் 1926 |
பிறந்தஇடம் | நல்லூர், யாழ்ப்பாணம் |
இறப்பு | பெப்ரவரி 17, 2016 | (அகவை 89)
பணி | நாடகக் கலைஞர் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம் |
அறியப்படுவது | நாடகக் கலைஞர் |
வாழ்க்கைக் குறிப்பு
1926 ஏப்ரல் 28 இல் யாழ்ப்பாணம், நல்லூரில் பிறந்த அரசு பரி. யோவான் கல்லூரியில் கல்வி கற்றார்.[1] இந்தியா சென்று சிற்பக் கலையில் பயிற்சி பெற்றார். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலம். கட்டாய இராணுவ சேவையில் நான்கு ஆண்டுகள் ஈடுபட்டு நாடு திரும்பினார்.[2] தமிழகத்தில் தங்கியிருந்த போது திராவிடர் கழகத்தின் கருத்துகளால் கவரப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இளைஞர் கழகம் ஒன்றை ஆரம்பித்து, அண்ணா, மு. கருணாநிதி ஆகியோரின் நாடகங்களை யாழ்ப்பாணத்தில் மேடையேற்றினார். 1948 ஆம் ஆண்டில் தூக்குமேடை என்ற நாடகத்தில் முதன் முதலில் நடித்தார். ‘திப்புசுல்தான்’, ‘தமிழன் கதை’, ‘வீரமைந்தன்’, ‘வீரத்தாய்’ ஆகிய வரலாற்று நாடகங்களை மேடையேற்றினார்.[2]
காரை சுந்தரம்பிள்ளை, தாசீசியஸ், நா.சுந்தரலிங்கம், சிவானந்தன், வள்ளிநாயகி ராமலிங்கம், குழந்தை ம. சண்முகலிங்கம் ஆகியோருடன் இணைந்து யாழ் நாடக அரங்கக் கல்லூரி என்னும் அமைப்பை உருவாக்கினார். பொறுத்தது போதும், புதியதோர் வீடு, எந்தையும் தாயும் ஆகிய நாடகங்களை தமிழக மேடைகளிலும் மேடையேற்றியுள்ளார்.[2]
திரைப்படங்களில்
எஸ். ரி. அரசு இலங்கையில் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு, டாக்சி டிரைவர் ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடமையின் எல்லை திரைப்படத்தின் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.[2]
விருதுகள்
- 1991 ஆம் ஆண்டில் சாவகச்சேரியில் இடம்பெற்ற முத்தமிழ் விழாவில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அரசுவிற்கு மாமனிதர் விருது வழங்கிக் கௌரவித்தார்.[1]
- கலாபூசணம், இலங்கை அரச விருது[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Veteran drama artist Maamanithar S.T. Arasu passes away". தமிழ்நெட். 21 பெப்ரவரி 2016. http://tamilnet.com/art.html?catid=13&artid=38148. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "நாடகச்செல்வர் எஸ். ரி. அரசு : ஈழத்து நாடக சிற்பிகளில் ஒருவர்". தாய்வீடு. சூலை 2010. http://thaiveedu.com/publications/pdf/artists/29.pdf. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016.