சிவயோகமலர் ஜெயக்குமார்

சிவயோகமலர் ஜெயக்குமார்
Sivayogamalar.jpg
முழுப்பெயர் சிவயோகமலர்
ஜெயக்குமார்
பிறப்பு 1950
பிறந்த இடம் அல்வாய் மேற்கு,
யாழ்ப்பாணம்
மறைவு 16-01-2014
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
வகை புதினம், சிறுகதை,
கவிதை,
நகைச்சுவைக்கதை


சிவயோகமலர் ஜெயக்குமார் (இறப்பு: 16 சனவரி 2014) ஈழத்துப் பெண் எழுத்தாளர். அடிமையின் காதலி என்ற சரித்திரப் புதினத்தை எழுதியவர்.

இளமைக் காலமும் பணியும்

அரச அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர் பருத்தித்துறை, அல்வாய் மேற்கு, திக்கம் என்ற ஊரில் சின்னத்தம்பியார் கணேசு, சின்னம்மா ஆகியோருக்கு மூத்த பெண்ணாகப் பிறந்தவர். இவர் திக்கம் மெதடித்த மிசன் பாடசாலையிலும், பின்னர் பருத்தித்துறை மெதடித்த மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றார். பல்கலைக்கழகத்தில் இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்று, ஆசிரியத் தொழிலில் இணைந்தார். பின்னர் தேர்தல் திணைக்களம், யாழ். தேசிய வீடமைப்புத் திணைக்களம் ஆகியவற்றில் பணியாற்றி அரச நிருவாக சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் கணக்காளரும், ஊடகவியலாளருமான எஸ். ஜே. ஜெயக்குமார் என்பவரைத் திருமணம் புரிந்து கொழும்பு, வெள்ளவத்தையில் வசித்து வந்தார்.

எழுத்துலகில்

1984 இல் இவரின் முதல் சிறுகதை 'மகன் தேடிய வீடு' சிந்தாமணி வாரப் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து இவரது சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகள், இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. இவர் எழுதிய அடிமையின் காதலி சரித்திரப் புதினத்தை தினகரன் வாரமஞ்சரியில் 1999 இல் தொடராக வெளியிட்டது. பின்னர் இது நூலாக வெளிவந்தது. இவரது இலக்கியப் படைப்புகள் சப்பிரகமூவ பல்கலைக்கழக சமூக விஞ்ஞானவியல் பீடத்தின் பட்டதாரி (சிறப்பு) மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டு “திக்கம் சிவயோகமலரின் இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வு” என்ற நூலாக வெளியிடப்பட்டது.

விருதுகள்

  • 1998 இல் வீரகேசரியில் வெளியான “பாவத்தின் சுவடுகள்” சிறுகதை கலாசார சமய அலுவல்கள் அமைச்சினால் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்பட்டு, சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருதும், பணப்பரிசும் வழங்கப்பட்டது.
  • மல்லிகை இதழ் 1999 சனவரி மாத இதழ் அட்டைப் படத்தில் இவரது படத்தைப் பிரசுரித்துக் கௌரவித்துள்ளது.
  • 1997 இல் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பிரெஞ்சுக் கிளையினர் நடத்திய பாவலர் தெ.து. துரையப்பாபிள்ளை நினைவு அகில உலக சிறுகதைப் போட்டியில் இவரது “பிறந்த மண்” சிறுகதை முதற் பரிசைப் பெற்றுக்கொண்டது.
  • தினகரன் பத்திரிகையும் “துரைவி” நிறுவனமும் இணைந்து நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய “சாமேளம்” சிறுகதை பரிசைப் பெற்றுக் கொண்டது.
  • சிரித்திரன் இதழ் 1990 இல் நடத்திய சித்திரச் சிறுகதைப் போட்டியில் இவரின் “வானம் பொய்க்கவில்லை” சிறுகதை முதற் பரிசைப் பெற்றது.
  • யாழ். இலக்கிய வட்டமும், முரசொலி பத்திரிகையும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் “கல்லுக்குள் ஈரம்” என்னும் இவரது குறுநாவல் பரிசு பெற்றது.
  • யாழ். இலக்கிய வட்டமும், முரசொலி பத்திரிகையும் இணைந்து நடத்திய குழந்தைப் பாடல் தொகுப்புப் போட்டியில் இவரது “தேட்டம்” குழந்தைக் கவிதைகள் தொகுப்பு பரிசு பெற்றது.
"https://tamilar.wiki/index.php?title=சிவயோகமலர்_ஜெயக்குமார்&oldid=2636" இருந்து மீள்விக்கப்பட்டது