சிதம்பர புராணம்

சிதம்பர புராணம் என்னும் நூலைப் புராணத் திருமலைநாதர் 1508ஆம் ஆண்டு எழுதிமுடித்தார். இந்த நூலைப் பரஞ்சோதி முனிவர் இயற்றினார் எனக் காட்டும் பதிப்புகளும் உள்ளன [1]

இந்த நூலில் 814 பாடல்கள் உள்ளன. காப்புச்செய்யுள், பாயிரம், 9 சருக்கங்கள் என்று இதன் பாகுபாடுகள் அமைந்துள்ளன. இதில் குலோத்துங்க சோழனுக்கும் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது. இந்தச் சோழன் இரண்டாம் குலோத்துங்கன். இவன் ‘பேரம்பலம் பொன்வேய்ந்த திருநீற்றுச் சோழன் என்று முடிபுனைந்த குலோத்துங்க வளவன்’ எனப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளான். இந்த நூல் சைவ மகா புராணத்தின் பகுதி.

சூழல்

14ஆம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பால் சைவத்துக்கு நேர்ந்த இன்னல்களுக்குப் பின்னர் பாடப்பட்ட நூல் இது. மறைஞான சம்பந்தர் இயற்றிய சிவதருமோத்தரம், சிவபுண்ணியத் தெளிவு முதலான நூல்களும் இந்தச் சூழலில் தோன்றியவையே.

சருக்கச் செய்திகள்

  1. சிதம்பர மான்மியச் சருக்கம் – தில்லையில் நடம் புரியும் பெருமான் சிறப்பைப் கூறுகிறது. ஞானாகாயம், தில்லை, சிற்றம்பலம், பிரம்புரம், புண்டரீகபுரம் என்னும் பெயர்கள் சிதம்பரத்துக்கு உண்டு என்று தெரிவிக்கிறது.
  2. துன்மதச் சருக்கம் – துன்மதன் மதுரையில் வாழ்ந்த அந்தணன் ஒருவனின் மகன். அவன் எல்லா வகையான தீய ஒழுக்கங்களையும் உடையவனாயிருந்தான். அரசன் அவனை நாட்டை விட்டே அகற்றினான். துன்மதன் தில்லை வந்து சிவபெருமானின் ஆட்டம் கண்டு மகிழ்ந்தான். பின் தில்லையிலேயே வாழ்ந்தான். அங்கும் அவன் திருந்தவில்லை. காலம் வந்தபோது இறந்துபோனான். எமன் அவன் உயிரைக் கட்டி இழுத்துச் சென்றான். நந்திதேவர் அதனைத் தடுத்து, சிவன் நடனம் கண்ட புண்ணியத்தால் அவன் கட்டை அவிழ்த்து, சிவனடியில் சேர்த்துக்கொண்டார்.
  3. துச்சகன் சருக்கம் – துச்சகன் சேரநாட்டில் வாழ்ந்த கொடியவன். வஞ்சகன். சேரலர் கோன் தில்லைக்கு வந்தபோது, அரசனின் ஏவலர் இவன் பொதி சுமக்கத் தக்கவன் என்று கருதி அவன் தலையில் தன் சுமைகளை ஏற்றி அழைத்துவந்தார். தில்லைக்கு வந்தபின் துச்சகன் வெப்புநோயால் இறந்துபோனான். தில்லை மண்ணை மிதித்த புண்ணியத்தால் இவன் சிவனடி சேர்ந்தான்.
  4. நியமச் சருக்கம் – சிதம்பரத்துக்கு வந்தவர் மேற்கொள்ள வேண்டிய நியமங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.
  5. சோமநாதச் சருக்கம் – சிவசன்மன் என்பவன் சோமநாதம் என்னும் ஊருக்குச் சென்றான். அங்கு, பலர் நெய்விளக்குப் போட வந்தனர். சிவசன்மன் தன்னையறியாமல் அருகிலிருந்த ஒருவரின் நெய்விளக்கைத் தட்டி விட்டுவிட்டான். அதனைக் கண்டுகொள்ளாமலும் சென்றுவிட்டான். இதன் பயனாக இவன் பேயாய்ப் பிறந்து விந்தாடவி என்னும் விந்தியமலைக் காடுகளில் அலைந்தான். அங்குச் சென்ற வாமதேவர் என்னும் முனிவர் அவன் பழம்பிறப்பில் செய்த தவறு இது எனச் சுட்டிக் காட்டினார். அதன் பின் அவன் சிவனையே நினைத்திருந்து, இறந்தபின் சிவனடி சேர்ந்தான்.
  6. தீர்த்தச் சருக்கம் – தில்லையில் உள்ள 10 தீர்த்தங்களின் சிறப்புகள் இதில் கூறப்பட்டுள்ளன.
  7. திருச்சிற்றம்பலச் சருக்கம் – சிவன் ஆடிய ஆனந்த தாண்டவம் வருணிக்கப்பட்டுள்ளது. சிவன் திருமாலுக்குத் தன் தலங்களின் பெருமைகளைக் கூறும் பகுதியும் இதில் உள்ளது.
  8. சமாதிச் சருக்கம் – திருமால் சைமினி முனிவனுக்குத் தில்லையின் பெருமைகளைக் கூறியபின் தவமிருக்கும் செய்தி இதில் கூறப்பட்டுள்ளது.
  9. துற்றெரிசனச் சருக்கம் – துற்றெரிசனன் என்னும் வேடன் வழியில் வந்த மறையவன் ஒருவனைக் கொல்ல முயன்றான். அப்போது மறையவன் கூறிய அறிவுரையைக் கேட்டு அவனுக்குக் குடை ஒன்று கொடுத்து அனுப்பிவைத்தான். மறையவன் அந்தக் குடையைத் தில்லைபெருமானுக்குச் சாத்தினான். இதன் பயனாக இருவரும் சிவனடி நிழல் பெற்றனர்.

பதிப்பு

இந்த நூல் மதுரைத் திருஞான சம்பந்தர் ஆதீனப் பதிப்பாக 1856-ல் வெளிவந்துள்ளது. இந்த ஆதீனத்திடம் அன்பு பூண்டிருந்த சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை இதற்கு அச்சுப்பிழை திருத்தி உதவியிருக்கிறார்.

கருவிநூல்

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

மேற்கோள்

  1. முற்றுமுணர் மெய்கண்ட சந்ததிக்கோர் தீபமென முதன்மை கொண்ட
    கொற்றவன்றன் குடிமருவு குலவு முமா பதிசிவன் பொற்கோயிலுண்மை
    சொற்ற புரானமுமிருக்கப் பின்னுமொரு வகையானுஞ் சொல்வான் புக்கே
    மற்றவன்றன் றிருவடியின் வழி வந்தோர்க் கடியன்எனும் வழக்கான் மன்னோ. இந்த பாடல் சிதம்பர புராணம் இது சைவ பரஞ்சோதி மாமுனிவர் அருளி செய்த மூலமும் துரை மங்கலம் சிவப்பிரகாச அய்யர் அவர்களால் பொழிப்புரை செய்து அருணாச்சல முதலியாரால் பார்வையிடப்பட்டு மாணிக்க முதலியார் அவர்களது மனோன்மணி விலாச அச்சுக் கூடத்திற் பதிப்பிக்க பட்ட நூலில் உள்ளது . ஓலைச் சுவடியிலும் இப்பாடல் உள்ளது . இப்பாடலின் உரையில் பரஞ்சோதி முனி என்னும் அடியன் சிதம்பர புராணம் சொல்லத் தொடங்கினேன் என்று உள்ளது. இந்நூலின் கடைசியில் அருமறையின் சிரத்தொளியாய் ஆனந்த நாட்டியஞ் செய்ய மரர்க் கன்பாய்
    திருவருள் பெற்றுயர் சைவ புராணத்திற் சிதம்பரத்தின் றிகழுமேன்மை
    பொருடெரிய தமிழ் விருத்த யாப்பதனான வரசங்கள் பொழிய மன்னும்
    திருமலைநாதன் புதல்வன் பரஞ்சோதி மாமுனிவன் செப்பினானே என்ற பாடல் உள்ளது. ஆனால் இப்பாடல் ஓலைச் சுவடியில் இல்லை. முனைவர். ந . ஜெயவித்யா
"https://tamilar.wiki/index.php?title=சிதம்பர_புராணம்&oldid=17230" இருந்து மீள்விக்கப்பட்டது