சாந்தி (1954 சிற்றிதழ்)

சாந்தி என்பது 1954 திசம்பர் மாதம் தொ. மு. சி. ரகுநாதனால் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருநெல்வேலியில் துவக்கபட்டு, நடத்தப்பட்ட பொதுவுடமை சார்பு இலக்கிய சிற்றிதழ் ஆகும்.


'சொத்தைக் கருத்துக்களும் சொற்சிலம்பங்களும் மிகுந்த இலக்கியப் போலிகளை இனம் காட்டவும் வெள்ளிக்காசுக்கும் விதேசியச் சிறுமைக்கும் இதயத்தையே எடைபோட்டு விற்றுவிட்ட எழுத்துலகத் துரோகிகளை அம்பலப்படுத்தவும், நமது பண்பாட்டையும் பாஷைவளத்தையும் இழிவுபடுத்தும் நாசக் கற்பனைகளை வேரறுக்கவும், தெம்பும் திராணியும், இளமையும், புதுமையும் நிறைந்த இலக்கிய சிருஷ்டிகளை வரவேற்கவும் வளர்க்கவும் புனித சங்கல்பம் பூண்டு 'சாந்தி' தோன்றுகிறது' என்று முதல் இதழில் அறிவிக்கப்பட்டது.

படைப்புகள்

சாந்தியில் முற்போக்குச் சிறுகதைகளுக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. ரகுநாதன் நெஞ்சிலே இட்ட நெருப்பு என்றொரு தொடர்கதை எழுதினார். புதுமைப்பித்தன் கடிதங்கள் சில வெளியாயின. சாந்தியின் திருநெல்வேலியில் இயங்கிய நெல்லை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் 100 ரூபாய் பரிசு பெற்ற திரு.சுந்தர ராமசாமியின் தண்ணீர் சிறுகதை சாந்தியின் முதல் இதழில் வெளியானது.[1] புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் போட்டி ஒன்றை 'சாந்தி' நடத்தியது. சுந்தர ராமசாமி, ப. சீனிவாசன், டி. செல்வராஜ் ஆகியோர் அடிக்கடி சிறுகதைகள் எழுதினார்கள். மலையாளச் சிறுகதைகள் பலவற்றை சுந்தர ராமசாமி தமிழாக்கமாக வெளிவந்தன. அப்பாஸ், கிருஷ்ணசந்தர், யஷ்பால், முல்கராஜ் ஆனந்த் முதலியோரின் இந்திச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள் பெற்றன. நா. வானமாமலை, சாமி சிதம்பரம், எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள் சாந்தியில் வெளியாயின.[2] கட்டபொம்மு, மருதுபாண்டியர் போன்றோர் குறித்த நாட்டுப் பாடல்கள் குறித்து ரகுநாதன் விரிவான கட்டுரைகள் எழுதினார். தி. க. சி. புத்தக விமர்சனம் எழுதிவந்தார்.

1955 திசம்பரில் 'சாந்தி' யின் பன்னிரண்டாவது இதழ் ஆண்டு மலர் என்று வெளிவந்தது. இந்த மலர் இலக்கியத் தரமான கட்டுரைகள், கவிதைகளைக் கொண்டிருந்தது. ப. ஜீவானந்தம், நா. வானமாமலை, எஸ். ராமகிருஷ்ணன், சாமி சிதம்பரனார், க. கைலாசபதி, எச். எம். பி. மொஹிதீன் கட்டுரைகள்; சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், டி. செல்வராஜ், அகிலன், கி. ரா. ரகுநாதன் கதைகள்; கே. சி. எஸ். அருணாசலம், குயிலன், திருச்சிற்றம் பலக் கவிராயர் கவிதைகள்; தி. க. சி. எழுதிய நாடகம்; இவற்றுடன், கதகளி பற்றி எஸ். சிதம்பரம் எழுதிய நீண்ட கட்டுரை இம்மலரின் உள்ளடக்கமாகத் திகழ்ந்தன.[3]

நிறுத்தம்

இரண்டாவது ஆண்டில் இரண்டே இதழ்கள்தான் வெளிவந்தன. 1965 ஏப்ரலில் சாந்தி நின்றுவிட்டது.

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சாந்தி_(1954_சிற்றிதழ்)&oldid=17623" இருந்து மீள்விக்கப்பட்டது