சலகண்டபுரம் ப. கண்ணன்
சலகண்டபுரம் ப. கண்ணன் ஒரு தமிழறிஞர், எழுத்தாளர். சேலம் மாவட்டம் சலகண்டபுரத்தில் பிறந்த ப. கண்ணனின் இயற்பெயர் ஜெ.பி.கிருஷ்ணன்.[1] 1938ஆம் ஆண்டில் நடந்த கட்டாய இந்திக்கல்வி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின்னர் அவர் தன்னுடைய பெயரை சலகண்டபுரம் ப. கண்ணன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார்.
அரசியல் வாழ்க்கை
பெரியார் ஈ. வே. இராமசாமி. தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தில் இவர் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1946ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சி என்ற தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் ஒன்றிணைக்கப்பட்டு திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட பொழுது, அதில் உறுப்பினர் ஆனார். அண்ணாதுரை தலைமையில் திராவிடர் கழகத்தைவிட்டு பிரிந்த பலர் ஒன்றிணைந்து 17.9.1949ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அப்பொழுது கண்ணனும் தி.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
படைப்பும் தொழிலும்
இவர் சிறுகதைகள், வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள், நெடுங்கதைகள், கட்டுரைகள், திரைப்பட உரையாடல்கள், இசைப்பாடல்கள் என பல்வேறு வடிவங்களில் படைப்புகளை உருவாக்கி இருக்கிறார். எழுத்தாளர், நடிகர், அச்சக உரிமையாளர், இதழாளர், பதிப்பக உரிமையாளர் என பல தொழில்களைச் செய்திருக்கிறார்.
படைப்புகள்
வானொலி நாடகங்கள்
- பொன்னப்பன் மகன் (17.1.1949ஆம் நாள் திருச்சி வானொலியில் ஒளிபரப்பானது)
- கன்னியின் சபதம்
- நந்திவர்மன் (26.7.1954ஆம் நாள் திருச்சி வானொலியில் ஒளிபரப்பானது)
மேடை நாடகங்கள்
- புரட்சிப்பாடகன்
- மின்னொளி (நவம்பர் 1949)
- குன்றுடையான் - அண்ணன்மார் கதை (6.3.1968)
- பகைமை வென்றான்
- தமிழ்வாழத் தலைகொடுத்தான்
- பாண்டிய மகுடம்
- மான மறவன்
- வீரவாலி
- நந்திவர்மன் (நவம்பர் 1968)
- பதினாறும் பெறுக!
சிறுகதைகள்
வ.எண் | தொகுப்பின் பெயர் | முதற்பதிப்பு ஆண்டு | இடம்பெற்றுள்ள சிறுகதைகள் |
1 | சிந்தனைச் சித்திரம்[2] | 1949 | 1 அபிராமி 2 யோகி 3 நான்கு வருடங்களுக்கு அப்பால் 4 மந்திரக்கார் 5 வேசியின்மகள் |
2 | பட்டவராயன் | 6.8.1954 | |
3 | காதல்மணம் | சூலை 1955 | 1 குருகுல மகாத்மியம் 2 காதல் மணம் 3 பிச்சைக்காரி |
நெடுங்கதை
- ஜமீன்தார்
இசைப்பாடல்கள்
- குறள்நெறி இசையமுது - முதற் பகுதி (ஏப்ரல் 1967)
- குறள்நெறி இசையமுது - இரண்டாம் பகுதி (டிசம்பர் 1967)
இதழ்
15.1.1951ஆம் நாள் பகுத்தறிவு என்னும் திங்களிதழைத் தொடங்கினார். 13-7-1956 முதல் இவ்விதழை கிழமை இதழாக வெளியிட்டார். 1951-52ஆம் ஆண்டுகளில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் மொழிபெயர்த்த இராபர்ட் இங்கர்சால் ஆங்கிலத்தில் எழுதிய சமுதாய விடுதலை என்னும் நூல் இவ்விதழில் தொடர்கட்டுரையாக வெளிவந்தது.[3] பாவலரேறு பெருஞ்சித்திரனார் தன்னுடைய இயற்பெயரான துரை-மாணிக்கம் என்னும் பெயரில் எழுதிய வெம்புலியே வாளெடு! என்னும் கவிதையும் இவ்விதழில் வெளிவந்திருக்கிறது.[4]
திரைப்பட உரையாடல்
எம். கே. இராதா கதைத் தலைவனாக நடித்து 1956ஆம் ஆண்டில் வெளிவந்த பாசவலை என்னும் திரைப்படத்திற்கான உரையாடல்களை கண்ணன் எழுதியிருக்கிறார்.[5]
பிற
கண்ணன், செந்தமிழ் அச்சுக்கூடம் என்னும் அச்சகத்தையும் தென்றல் நூற்பதிப்புக் கழகம் என்னும் பதிப்பகத்தையும் நடத்தியிருக்கிறார்.
குடும்பம்
இவர் மனைவியின் பெயர் சிவகாமி. இவர்கள் குஞ்சிதம். மங்கையற்கரசி என்னும் பெண்மக்களை ஈன்றனர். மூத்தமகள் ப.க.குஞ்சித்திற்கும் மு.வடிவேலிற்கும் 26-5-1953ஆம் நாள் திருந்திய திருமணம் நடைபெற்றது. [6] மற்றொரு மகளான மங்கையற்கரசிக்கும் மு.பழநியப்பனுக்கும் 21-11-1955ஆம் நாள் சலகண்டபுரத்தில் திருந்திய திருமணம் நடைபெற்றது. [7]
மேற்கோள்கள்
- ↑ சிந்தனைச் சித்திரம் நூலின் முன்னுரை
- ↑ இத்தொகுப்பில் உள்ள ஐந்து கதைகளும் பெரியார் ஈ.வே.இரா. நடத்திய பகுத்தறிவு இதழில் 1935 – 36ஆம் ஆண்டுகளில் ஜே.பி.கிருஷ்ணன் என்னும் பெயரில் ப.கண்ணனால் எழுதப்பட்டவை.
- ↑ 15.1.1951 என நாளிட்ட பகுத்தறிவு திங்கள் இதழ்
- ↑ 7.9.1956 என நாளிட்ட பகுத்தறிவு கிழமை இதழ், பக்கம் 3
- ↑ பாசவலை பட விளம்பரம்
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:5-7-1953, பக்கம் 6
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:27-11-1955, பக்கம் 16