சரஸ்வதி (சிற்றிதழ்)
சரஸ்வதி என்பது 1955 மே மாதம் பொதுவுடமையாளரான வ. விஜயபாஸ்கரனால் துவக்கபட்ட பொதுவுடமை சார்பு இலக்கிய சிற்றிதழ் ஆகும்.[1]
தோற்றம்
பொதுவுடமையாளரான விஜயபாஸ்கரன் நடத்தும் பத்திரிக்கையாக உள்ளதால் சரசுவதிக்கு கம்யூனிச பத்திரிகை என்ற முத்திரை விழக்கூடாது; அரசியல் நிறம் தெரியாத கலை இலக்கியப் பத்திரிகையாகத் தெரியும்படியான- 'கலைமகள்' போன்ற ஒரு பெயராக இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். இந்திய முற்போக்கு எழுத்தாளர்களின் முதல்வரும் முன்னோடியுமான பிரேம்சந்த் நடத்திய 'சரஸ்வதி' யின் பெயரையே அவர் தனது பத்திரிகைக்கும் தேர்ந்தெடுத்தார். மேலும், அது அவருடைய மனைவியின் பெயராகவும் இருந்தது.
மேலை நாட்டில் வளர்ந்து வரும் புத்தம் புதிய கருத்துக்களைத் திரட்டித் தமிழர்களுக்குத் தருவது, மறைந்து வரும் பாரம்பரிய கலைச் செல்வங்களைத் தேடி எடுத்து வெளியிடுவது, தமிழில் சிறந்த சிறுகதைகள், கவிதைகள் வெளிவருவதற்கு ஆவன செய்வது- இவை 'சரஸ்வதி' ஆசிரியரின் நோக்கங்களாக இருந்தன. 'சரஸ்வதி' இவற்றை நிறைவேற்றவும் செய்தது.
ஆக்கங்கள்
அயல்நாட்டுச் சிறுகதைகளின் தமிழாக்கம், சிறந்த உலக புதினங்கள் பலவற்றின் சுருக்கம், சுயமாக எழுதப்பெற்ற சிறுகதைகள், கருத்துச் செறிவுள்ள கட்டுரைகள், மெய்யியல், பண்பாடு, அறிவியல், பொருளாதாரம் சம்பந்தமான பலப்பல கட்டுரைகள், நல்ல கவிதைகள் இப்படி எவ்வளவோ விஷயங்களை 'சரஸ்வதி' அதன் காலத்தில் வழங்கியிருக்கிறது.
தலைசிறந்த ஒலிப்பதிவாளர்களில் ஒருவரான நிமாய் கோஷ் திரைப்படத் தொழில் பற்றிக் கட்டுரைகள் எழுதினார். சதுரங்கம் குறித்தும், ஒளிப்படக் கலை பற்றியும் விளக்கக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஜெயகாந்தன் வளர்ச்சிக்கு 'சரஸ்வதி' பெரிதும் உதவியது. சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், கிருஷ்ணன் நம்பி மற்றும் இலங்கை எழுத்தாளர்களான டொமினிக் ஜீவா, கே. டானியல், காவலூர் ராசதுரை முதலியோரின் சிறந்த கதைகள் பலவற்றை 'சரஸ்வதி' பிரசுரித்தது.
தகழி சிவசங்கரப் பிள்ளையின் 'தோட்டியுட மகன்' புதினம் சுந்தர ராமசாமியின் தமிழாக்கமாகத் இந்த இதழில் தொடர்ந்து வந்தது. சுந்தர ராமசாமியின் 'புளியமரம்' புதினத்தின் முதல் பாதி வெளிவந்தது. வல்லிக்கண்ணன் எழுதிய ‘அடிவானம்' புதினத்தின் ஒரு பகுதி வெளியிடபட்டது.
க. நா. சுப்ரமண்யம், சி. சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், ரகு நாதன், ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், ஆர். கே. கண்ணன், சாமி சிதம்பரனார் ஆகியோர் 'சரஸ்வதி'க்காக உற்சாகத்துடன் எழுதினர்.
ஆர்வமூட்டிய விவாதங்களை சரஸ்வதி அவ்வப்போது வளர்த்தது. புதுமைப்பித்தன் இலக்கியம் பற்றி ஒரு விவாதம் சாகித்திய அகாடமி பரிசு அளிக்கிற போக்கு பற்றிய காரசாரமான கருத்துக்கள், மொழி வெறியர்கள் மற்றும் குறுகிய நோக்குடைய பண்டிதர்கள் போக்கை எதிர்த்து சூடான கட்டுரைகள், 'சென்னைக்கு வந்தேன்’ என்ற தலைப்பில் பல எழுத்தாளர்களது அனுபவங்கள், ‘நானும் என் எழுத்தும்' என்று பலரது எண்ணங்கள், இலக்கியத்தில் ஆபாசம் என்பது குறித்துக் கண்டனங்களும் மறுமொழிகளும்- இவ்வாறு பல விசயங்களை அலசியது. சிறந்த 'ஆண்டு மலர்' களைத் தயாரித்து இலக்கியப் பணி புரிந்துள்ளது. 'புத்தக மதிப்புரை'ப் பகுதி மூலம் வாசகர்களுக்கு பலப்பல புத்தகங்களை அறிமுகப்படுத்தியது.
‘நமது எழுத்தாளர் வரிசை' என்று எழுத்தாளர்களின் படத்தை அட்டையில் வெளியிட்டு, அவர்களைப் பற்றிய கட்டுரையை உள்ளே பிரசுரித்தது.
நிறுத்தம்
'சரஸ்வதி' ஒரு சகாப்தத்தைத் தோற்றுவித்தது என்றாலும், பொருளாதார ரீதியில் தோல்வி மேல் தோல்வியே கண்டது. எவ்வளவு முயன்றும் தாங்கமுடியாத அளவு நட்டம் பெருகியது. அதனால் 1962 ஆம் ஆண்டு நான்காவது இதழுடன் (சூன் மாதம்) சரஸ்வதி நின்று விட்டது.[2]
நூல்
'சரஸ்வதி' யின் விரிவான வரலாற்றை விவரிக்கும் விதமாக வல்லிக்கண்ணன் சரஸ்வதி காலம் என்ற நூலை எழுதியுள்ளார்.[3]
குறிப்புகள்
- ↑ சரஸ்வதி விஜயபாஸ்கரன்
- ↑ வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல் (மணிவாசகர் பதிப்பகம்): pp. 55-58. https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF. பார்த்த நாள்: 13 நவம்பர் 2021.
- ↑ https://www.gacbe.ac.in/pdf/ematerial/18MTA14E-U1.pdf