சதி சுலோச்சனா (கன்னடத் திரைப்படம்)

சதி சுலோச்சனா (கன்னடம்: ಸತಿ ಸುಲೋಚನ) என்பது 1934 ஆம் ஆண்டு ஒய். வி. ராவ் இயக்கிய இந்திய கன்னடத் திரைப்படமாகும். இப்படம் 3 மார்ச் 1934 இல் வெளியானது. இது கன்னட மொழியின் முதல் பேசும் படமாகும்.[1] பழைய மைசூர் சாம்ராஜ்யத்தில் திரையிடப்பட்ட முதல் திரைப்படமும் இதுவாகும்.

சதி சுலோச்சனா
இயக்கம்யாரகுடிபதி வரத ராவ்
தயாரிப்பு
திரைக்கதைபெல்லாவே நரஹரி சாஸ்திரி
இசை
நடிப்பு
கலையகம்பிரபாத் ஸ்டுடியோ
வெளியீடு3 மார்ச் 1934
ஓட்டம்173 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

இது ஒரு தொலைந்த திரைப்படமாகும் .[2] முதலில் இத்திரைப்படத்தில் 18 பாடல்கள் இருப்பதாக நம்பப்பட்டது. ஆனால் தனியார் ஆவணக் காப்பகத்தில் கிடைத்த ஒரு கிராமபோன் பதிவு உறையில், முதல் நான்கு கன்னட பேசும் படங்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலித் தடங்கள் இல்லை என்ற கருத்தை பொய்யாக்கும் வகையில், படத்தில் 30 பாடல்கள் இருப்பதாக தெரியவந்தது.[3]

கதை

சதி சுலோச்சனா திரைப்படமானது இராமாயணத்தில் வரும் சுலோச்சனா என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர் இந்திரஜித்தின் மனைவியும், இராவணனின் மருமகளும் ஆவார். இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே நடக்கும் போரின் போக்கை சுலோச்சனாவின் பார்வையில் காட்ட இப்படம் முயற்சிக்கிறது. இராவணன் இராமனின் மனைவியான சீதையை தனது இலங்கை நாட்டுக்குக் தூக்கிச் சென்று, இராமனைப் போருக்கு இழுக்கிறான். போரின் போது, இராமனின் தம்பி இலட்சுமணன், இந்திரஜித்தின் அம்பினால் மயக்கமடைகிறான். பின்னர் சஞ்சீவி என்ற மூலிகையால் உயிர்ப்பிக்கப்படுகிறான். புத்துயிர் பெற்ற இலட்சுமணன் இந்திரஜித்தை கொன்று சுலோச்சனாவை விதவையாக்குகிறான். இராமனால் இராவணனன் தோல்வியடைதலும், இந்திரஜித் கொல்லப்படுதலும் சுலோச்சனாவின் கண்களால் பார்க்கப்படுகிறது. கணவன் இறந்த வேதனையை தாங்க முடியாமல் சுலோச்சனா உடன் கட்டை ஏறுகிறாள்.

நடிகர்கள்

பின்னணி

படத்தின் தயாரிப்பாளர் பெங்களூரைச் சேர்ந்த மார்வாடி தொழிலதிபர் (இராசத்தானின் ஜலோர் மாவட்டம் அஹோரை பூர்வீகமாகக் கொண்டவர்) ஷா சமன்லால் தூங்காஜி ஆவார்.[4] அவர் 1932 இல் பெங்களூரில் சவுத் இந்தியா மூவிடோன் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இராவணன், இராவணனின் மகன் இந்திரசித்து, இராவணனின் மனைவி மண்டோதரி, இந்திரஜித்தின் மனைவி சுலோச்சனா போன்ற இராமாயணத்தின் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய சதி சுலோச்சனா என்ற தொன்மவியல் திரைப்படத்தை உருவாக்க அவர் முடிவு செய்தார். அதன்படி யாரகுடிபதி வரத ராவை படத்தின் இயக்குநராகவும், இலட்சுமணன் பாத்திரத்தில் நடிக்கவும் நியமித்தார். திரைக்கதை, உரையாடல், பாடல்களை எழுத பெல்லாவே நரஹரி சாஸ்திரியை ஈடுபடுத்தினார். முன்னதாக திரைப்படங்களில் அறிமுகமான நாகேந்திர ராவ், இராவணன் வேடத்தில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கூடுதலாக தயாரிப்பு நிர்வாகத்தில் பொறுப்பு வழங்கப்பட்டது.[4] எம். வி. சுப்பையா நாயுடு இந்திரசித்து வேடத்திலும், லட்சுமி பாய், திரிபூராம்பா ஆகியோர் முறையே மண்டோதரி மற்றும் சுலோச்சனா ஆகிய வேடங்களில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தயாரிப்பு

சச்சின் நாயகா கோலாப்பூரில் உள்ள சத்ரபதி ஸ்டுடியோவில் படத்தின் படப்பிடிப்பை நடத்த தேர்வு செய்தார். படத் தயாரிப்பு 1933 திசம்பரில் தொடங்கியது. இரண்டு மாதங்களில் படப்பிடிப்பு முடிந்தது. படப்பிடிப்புக்கு முற்றிலும் இயற்கையான சூரிய ஒளியும், மனிதனால் உருவாக்கப்பட்ட பிரதிபலிப்பான்களும் பயன்படுத்தபட்டன. ஒளிப்படமி உதவியாளர்கள் தங்கள் தோள்களில் கண்ணாடிகளை எடுத்துச் சென்று ஒளியை படம்பிடிக்கும் இடத்தின் மீது செலுத்தி வெளிச்சத்தை உண்டாக்கினர். அவர்கள் சூரியனின் போக்கிற்கு ஏற்றவாறு கண்ணாடிகளை நகர்த்த வேண்டிய நிலையில் இருந்தனர். படப்பிடிப்புத் தளத்தில் இருந்த கட்டமைப்புகளுக்கு உட்கூரை இருக்கவில்லை, ஆனால் அவை வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தன. மேலும், அந்த நேரத்தில் கிளிசரின் இருக்கவில்லை. அதனால் அழுகைக் காட்சிகளில் நடிகையின் கண்களுக்கு அருகில் நீர் துளிகள் தெளிக்கப்பட்டன. தயாரிப்புக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 40,000. இந்தப் படத்தில் ஒரு போர்க் காட்சி படமாக்கப்பட்டது. இதற்கு இரண்டு ஒளிப்படமிகள் பயன்படுத்தப்பட்டன. இப்படம் 3 மார்ச் 1934 அன்று பெங்களூர் சிட்டி மார்க்கெட் அருகே உள்ள பாரமவுண்ட் திரையரங்கில் (பின்னர் பரிமளா டாக்கீஸ் என்று அழைக்கப்பட்டது) வெளியிடப்பட்டது. படத்தின் நீளம் 173 நிமிடங்கள். முதல் கன்னட பேசும் படம் என்பதால், பெங்களூரில் ஆறு வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது.

பாடல்

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் பெல்லாவே நரஹரி சாஸ்திரி. 

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "தேவ குருகலேமகே"  ஆர். நாகேந்திர ராவ்  
2. "பலே பலே பார்வதி"  லட்சுமி பாய்  

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

[1]

வெளி இணைப்புகள்