சதமணிக் கோவை

சதமணிக்கோவை என்னும் நூல் 14ஆம் நூற்றாண்டில் மறைஞான சம்பந்தர் என்பவரால் எழுதப்பட்டது[1]. 100 மணிகளால் கோக்கப்பட்ட கோவை என்பது ‘சதமணிக்கோவை’ என்பதன் பொருள். இதில் காப்புச் செய்யுள் உட்பட 107 நேரிசை வெண்பாப் பாடல்கள் உள்ளன.

மதுரை சிவப்பிரகாசர் (கி.பி. 1488) எழுதிய ஞானதீக்கைத் திருவிருத்தம் என்னும் நூலில் சதமணிக்கோவை நூலைக் குறிப்பிட்டுள்ளார். இதனாலும் மேலும் பல காரணங்களாலும் இந்த நூல் கி.பி. 1350 எனக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நூலை இயற்றியவர் இன்னார் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. [2]

இதில் வரும் வெண்பாக்கள் வினாக்களாக அமைந்துள்ளன. வினாவுக்கான விடையை ஆசிரியரே ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் தந்துள்ளார். விடைகளின் விளக்கங்கள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டு 1

ஈசன் குறைவறவே எவ்விடத்தும் நிற்பதெனில்
காசி முதலாகும் பதிகதியாப் – பேசியதிங்(கு)
ஏதோ புராணங்கள் எல்லாம் இறைவனே
ஈதென்று நாயேற்(கு) இயம்பு.

விடை – பசுவின் முலையிலே பால் பலித்தாற்போல (பசுவின் முலையில் மட்டும் பால் சுரப்பது போல ஈசன் சில இடங்களில் மட்டும் அருள் சுரக்கிறார்)

எடுத்துக்காட்டு 2

சென்றணையில் ஏகதே சத்தான் சிவமாகும்
அன்றிநிறை வெள்ளில் அரனடியைக் – குன்றாமல்
கூடலென்னும் சொல்லில்லை யாகும், குருபரனே!
நாடியுன(து) உண்மை நவில்.

விடை – கண்படலம் நீங்குமது ஒழிந்து, பிரகாசம் வந்து கூடவேண்டுவதில்லை. (சிவன் வெட்டவெளி என்னும் ஓருடம்பை உடையவன். அவனைக் கூடுவது எப்படி? கண்ணைத் திறந்தால் கண்ணுக்குள் ஒளி தானே வந்துவிடிகிறது. அதுபோல அவனை நினைத்தால் அவன் நம்மை அணைத்துக் கொள்கிறான்)

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. பதிப்பு
    • (நாகை வேதாசலம் பிள்ளை) மறைமலை அடிகள் 1898
    • தச மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருவாடுதுறை ஆதீனப் பதிப்பு, 1949
    • சந்தானாசிரியர் நால்வரில் மூன்றாமவர்
    • அருள் நமச்சிவாயர்
    • காழிக்கங்கை மெய்கண்டார்
    • காழிச் சிற்றம்பல நாடிகள். இந்தக் கருத்துக்கள் பொருந்தாதவை என மு. அருணாசலம் விளக்குகிறார்.
"https://tamilar.wiki/index.php?title=சதமணிக்_கோவை&oldid=16743" இருந்து மீள்விக்கப்பட்டது