சங்ககால உடல்வித்தை விளையாட்டுகள்

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உடல்வித்தை விளையாட்டுகள் பல.

கயிறூர் பாணி

கயிற்றில் ஏறி ஆடும் ஆட்டத்தைச் சங்கப்பாடல் கயிறு ஊர் பாணி எனக் குறிப்பிடுகிறது.

வியலூர் விழாவில் இது நடைபெற்றது.
மயில் ஒன்று மாம்பழத்தை உண்ணும்போது அது சுனையில் உதிர்ந்துவிட்டதாம். அந்தச் சுனைக்கு இறங்கிய மயில் அந்த நீரைப் பருகிற்றாம். அந்த நீரில் பழுத்த மிளகு, பலா ஆகியனவும் விழுந்து ஊறிக் கள்ளாக ஊறிக் கிடந்ததாம். எனவே மயில் தள்ளாடித் தள்ளாடி நடந்ததாம். இது இன்னிசை முழக்கத்துடன் ஆடுமகள் கயிற்றில் ஏறி, வியலூர் விழாவில், ஆடுவது போல இருந்ததாம். [1][2]

சென்னியர் ஆடல்

வையை ஆற்றில் நீராடிய மகளிர் இசைக் கருவிகள் முழங்க ஒருவர் தலைமேல் ஒருவராக நின்று வித்தைக் காட்டி விளையாடியிருக்கிறார்கள்.[3]

வெறியுறு நுடக்கம்

சேரநாட்டில் விளையாட்டுக் காட்டிய மகளிர் பனந்தோப்பில் பலவகையாக நடந்து காட்டியும், உடம்பை வளைத்து ஒசிந்து காட்டியும், வளைந்தாடியும் பலவகையாக வேடிக்கை காட்டியிருக்கிறார்கள். [4]

விசும்பமர் ஆடல்

மதுரையில் திருமண வீடு ஒன்றில் கொண்டிமகளிர் விளக்கொளியில் விளையாட்டுக் காட்டினர். விளக்கொளி படாத இருளில் அவர்களின் கால்கள் இருந்ததால் அவர்களது ஆட்டம் விசும்பில் ஆடுவதுப் போல இருந்தது. [5]

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1.  
    வியலூர்ச்
    சாறுகொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
    அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
    கயிறூர் பாணியின் தளரும் - குறிஞ்சிப்பாட்டு 191-194

  2.  
    கழைபாடு இரங்க, பல்லியம் கறங்க,
    ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிறு – நற்றிணை 95

  3.   
    புரிநரம்பு இன்கொளைப் பகல்பாலை ஏழும்
    எழூஉப்புணர் யாழும் இசையும் கூடக்
    குழல் அளந்து நிற்ப, முழவு எழுந்து ஆர்ப்ப,
    மன்மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க - பரிபாடல் 7-77முதல் 80

  4.  
    தூ இரும் போந்தைப் பொழில் அணிப் பொலிந்து
    இயலினர் ஒல்கினர் ஆடும் மடமகள்
    வெறியுறு நுடக்கம் - பதிற்றுப்பத்து 51

  5.  
    மணம் புணர்ந்து ஓங்கிய அணங்குடை நல்லில்
    ஆய்பொன் அவிர்தொடிப் பாசிழை மகளிர்
    ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி
    நீல்நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
    வானவ மகளிர் மானக் கண்டோர்
    நெஞ்சு நடுக்குறூஉம் கொண்டி மகளிர் - மதுரைக்காஞ்சி 578-583