க. சண்முகம்பிள்ளை
கந்தசாமி சண்முகம்பிள்ளை (சூலை 21, 1917 - மே 14, 2010) இலங்கையைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர். இலங்கை வானொலியில் 34 ஆண்டுகள் மிருதங்கக் கலைஞராகப் பணியாற்றியவர்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
க. சண்முகம்பிள்ளை |
---|---|
பிறப்புபெயர் | சண்முகம்பிள்ளை |
பிறந்ததிகதி | சூலை 21, 1917 |
பிறந்தஇடம் | இணுவில், யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | மே 14, 2010 | (அகவை 92)
பணி | வானொலிக் கலைஞர் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணியகம் | இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் |
அறியப்படுவது | மிருதங்கக் கலைஞர் |
பெற்றோர் | கந்தசாமி, தங்கமுத்து |
துணைவர் | விஜயலட்சுமி சண்முகம்பிள்ளை |
பிள்ளைகள் | பிரகதா தில்லைநடராஜா, வாசுகி ஜெகதீஸ்வரன், எஸ். விஸ்வநாதன் |
வாழ்க்கைக் குறிப்பு
சண்முகம்பிள்ளை யாழ்ப்பாணம், இணுவில் என்னும் கிராமத்தில் கந்தசாமி, தங்கமுத்து ஆகியோருக்குப் பிறந்தார். இவருடைய தந்தை கந்தசாமி ஒரு சிறந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். சண்முகம்பிள்ளை தமிழ்நாட்டில் மிருதங்க வித்துவான் குற்றாலம் சிவவடிவேல் பிள்ளையிடம் 1938 முதல் 1940 வரை இரண்டு ஆண்டு காலம் குருகுலவாசம் செய்து பயிற்சி பெற்றார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரிகளில் மிருதங்கம் வாசித்து பாராட்டுக்களையும் பெற்றார்.
1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புல்லாங்குழல் வித்துவான் ஆர். மூர்த்தி ஐயர் சண்முகம்பிள்ளையை இலங்கை வானொலியில் இசைக் கச்சேரி செய்வதற்காக கொழும்புக்கு அழைத்து வந்தார். இலங்கை வானொலி தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாக அன்றைய காலத்தில் இருந்தவர் சோ. சிவபாதசுந்தரம். அவர் சண்முகம்பிள்ளையின் திறமையைக் கவனித்து இவரைக் கொழும்பிலேயே நிரந்தரமாக வந்து தங்குமாறு வேண்டிக் கொண்டார். அதற்கிணங்க சண்முகம்பிள்ளை கொழும்பிலேயே நிரந்தரமாக தங்கி விட்டார். கொழும்பு வானொலியில் கிழமைக்கு மூன்று நாட்கள் இசைக் கச்சேரி நடைபெறும். அவற்றில் சண்முகம்பிள்ளை கலந்து கொண்டார். 1952 ஆம் ஆண்டில் சண்முகம்பிள்ளை இலங்கை வானொலியில் “super grade“ இசைக்கலைஞராக ஆக நியமனம் பெற்றார். 1976 ஆம் ஆண்டில் இவர் ஓய்வு பெற்றார்.
விருதுகளும் பட்டங்களும்
- “லயவாதி”, “கலாமான்ய”, “கலாபூஷணம்”, “கலாநிதி” ஆகிய பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன.
குடும்பம்
சண்முகம்பிள்ளையின் மனைவி விஜயலட்சுமி சண்முகம்பிள்ளை ஒரு நடன ஆசிரியை. இவர்களின் பிள்ளைகள் கலாபூசணம் பிரகதா தில்லைநடராஜா, “கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரன் ஆகியோரும் பிரபலமான நடன ஆசிரியைகள் ஆவர். மகன் எஸ். விஸ்வநாதன் இலங்கையின் தேசியத் தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாகினியின் தமிழ்ப் பிரிவுப் பணிப்பாளராக இருந்தவர்.
உசாத்துணை
- சிறந்த மிருதங்க வித்துவானாகப் பிரகாசித்த கலாபூஷணம் சண்முகம்பிள்ளை, எழுதியவர்: கலாபூஷ்ணம் செல்லத்தம்பி மாணிக்கவாசகர், வீரகேசரி, மே 14, 2011