க. குமாரசுவாமி முதலியார்

க. குமாரசுவாமி முதலியார்
முழுப்பெயர் கதிர்காமபூப முதலியார்
குமாரசுவாமி முதலியார்
பிறப்பு 11-08-1791
பிறந்த இடம் உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது நூலாசிரியர்,
சிற்றிலக்கியப் புலவர்
மறைவு 30-12-1874
பெற்றோர் கதிர்காமபூப முதலியார்,
வள்ளியம்மை
வாழ்க்கைத் சிவகாமிப்பிள்ளை
துணை


க. குமாரசாமி முதலியார் (ஆகத்து 11, 1791 – டிசம்பர் 30, 1874) ஈழத்துப் புலவர் ஆவார். இவர் பல தனிப் பாடல்களையும், நூல்களையும் எழுதியவர். யாழ்ப்பாணத்தில் பிரபலமான வழக்கறிஞரும், தமிழறிஞருமான உவைமன் கதிரவேற்பிள்ளையின் தந்தை ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

குமாரசாமி முதலியார் 1791 ஆவணி 11 இல் வடமராட்சிப் பகுதியிலுள்ள உடுப்பிட்டியில் வல்லிப்பட்டி (வல்வெட்டி) என்னும் சிற்றூரில்,கதிர்காமபூப முதலியார், வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார்.தாயார் வள்ளியம்மையின் தந்தை சந்திரசேகர முதலியார் ‘நொண்டிப் பாடல்’ என்னும் நூலை இயற்றியவர். இவர், ஒல்லாந்தர் அரசாட்சியின் கீழ் பணி புரிந்து 96-ஆம் அகவையில் இறந்தவர். இவரது வாழ்க்கைச் சரிதத்தை இந்தியப் புலவர் ஒருவர் ஒரு குறவஞ்சி பாடினார். வள்ளியம்மையின் இரு சகோதரர்களுள் ஒருவர் பரந்தர நாடகம் எனும் நூலை எழுதிய குமாரசாமிப் புலவர் ஆவார். மற்றவர் முத்துக்குமாரு முதலியார். இவரும் சிறு பாக்களை இயற்றியவர்.

குமாரசாமி முதலியார் சிறு வயதிலேயே தமது மாமனார் முத்துக்குமாரு முதலியாரிடம் இசை மற்றும் இலக்கண இலக்கியம் பயின்று, செய்யுள்கள் இயற்றும் ஆற்றல் பெற்றார். கம்பராமாயணத்திற்கு உரை கூறுவதில் வல்லவர் என்று பலராலும் மதிக்கப்பெற்றார். வித்தியா தர்ப்பணம் எனும் பத்திரிகையிலே கல்வி குறித்துச் செய்யுள் நடையில் ஆக்கங்களை எழுதினார். தமது சொந்தச் செலவில் கலாசாலை ஒன்றையும் நிறுவினார். தமது ஊரான வல்லிபட்டியில் "ஊரிக்காடு என்னும் நிலத்தை அமெரிக்க மிசனுக்கு நன்கொடையாக வழங்கினார்.

குமாரசுவாமி முதலியாரின் செய்யுள்கள் குமாரசுவாமி முதலியார் கவித்திரட்டு என்னும் பெயரில் உடுப்பிட்டியைச் சேர்ந்த சி. ஆறுமுகம்பிள்ளை என்பவரால் 1887-இல் வெளியிடப்பட்டது. இவரது தனிப் பாடல்கள் பல உதயதாரகை பத்திரிகையில் வெளிவந்துள்ளன. அமெரிக்க மிசன் மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீனைப் புகழந்தும், கொள்ளை நோயால் இறந்தவர்களைப் பரிந்தும் பாடல்கள் எழுதினார். தனிப்பாடல்கள் மட்டுமன்றி நோய்க் கிரங்கல் முதலிய சில நூல்களும் எழுதியுள்ளார்.

சிற்றிலக்கியங்கள்

தீருவிற் சுப்பிரமணியர் பதிகம், மூளாய் சித்திவிநாயகர் பேரில் ஊஞ்சல், மங்களம், சட்டியம், பராக்கு, கும்மி முதலியவைகளும் கோப்பாய் ஊஞ்சல், பெரியம்மன் பதிகமும் ஊஞ்சலும், பன்னிருமாதப் பெயரையும் முதல் நான்கு செய்யுள் முதலடிகளாக அமைத்து எட்டு நல்லைக் கலித்துறைகளும், கந்தவன நாதர் ஊஞ்சலும், கிறித்தவ கீர்த்தனங்களும் பாடியுள்ளார்.

குடும்பம்

குமாரசுவாமி முதலியார் வல்வெட்டித்துறை “அடப்பனார்” வேலாயுதம் என்பவரின் மகனான புண்ணியமூர்த்தி என்பவரின் மகள் சிவகாமிப்பிள்ளையை மணந்தார். இவர்களுக்கு இரு ஆண் மக்கள். ஒருவர் சபாபதி முதலியார், யாழ்ப்பாணம் நிதிசார் அலுவலர் சபாபதி முதலியார் (இறப்பு: 1884) ஆவார். மற்றவர் வழக்கறிஞரும், நூலாசிரியரும், தமிழ்ச் சொல்லகராதி தொகுத்தவருமான உவைமன் கதிரவேற்பிள்ளை ஆவார். குமாரசுவாமி முதலியார் 1874 மார்கழி 30-ஆம் நாள் தமது 83-ஆம் அகவையில் காலமானார். இவர் மனைவி சிவகாமிப்பிள்ளை தமது கணவன் இறந்த காலம் தொடங்கி 27 ஆண்டுகள் மகன் கதிரவேற்பிள்ளையுடன் வசித்து வந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=க._குமாரசுவாமி_முதலியார்&oldid=2528" இருந்து மீள்விக்கப்பட்டது