கோ. இளவழகன்

கோ. இளவழகன் (சூலை 3, 1948 - 4. மே. 2021) தமிழ் மொழி, தமிழ் இனம் ஆகியவற்றில் நாட்டம் கொண்டவர். இந்தித் திணிப்பை எதிர்த்துச் சிறைக்குச் சென்றவர். தனித்தமிழ் இயக்கச் செயற்பாட்டாளர். சங்கத்தமிழ் நூல்கள், வரலாற்று நூல்கள், தமிழிலக்கண நூல்கள், தமிழ்ப் பேரகராதி நூல்கள் எனப் பலவகையான நூல்களைத் தனது தமிழ்மண் பதிப்பகத்தின் வழியாக பதிப்பித்தும் வெளியிட்டவர்.

பிறப்பும் இளமையும்

இவர் தஞ்சை மாவட்டத்திலுள்ள உறந்தைராயன் குடிக்காடு என்னும் சிற்றூரில் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்தார். தந்தை கோவிந்தசாமி, தாயார் அமிர்தம் அம்மாள். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் அப்பாவு என்பது. அதைப் பின்னாளில் இளவழகன் என்று மாற்றிக்கொண்டார். இவர் கல்லூரியில் புகுமுக வகுப்புவரை பயின்றதும் மின்வாரியத்தில் பணியில் சேர்ந்து 20 ஆண்டுகள் அரசுப் பணி ஆற்றினார்.

பொதுப் பணிகள்

பள்ளி மாணவராக இருந்தபோது 1965-ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் பங்கேற்று 48 நாள்கள் சிறையில் இருந்தார். தாம் பிறந்த ஊரான உறந்தைராயன் குடிக்காட்டில் 'ஊர் நலன் வளர்ச்சிக் கழகம்' என்னும் ஓர் அமைப்பை உருவாக்கினார். அண்மை நகரான உரத்தநாட்டில் 'தமிழர் உரிமைக் கழகம்' என்னும் இயக்கத்தைத் தொடங்கி மொழி உயர்வுக்கும் இன மேம்பாட்டுக்கும் வினையாற்றினார். தேவநேயப் பாவாணரின் பெயரில் மன்றம் ஒன்றை நிறுவினார். நாடு முழுவதும் மது அருந்தி மக்கள் சீரழிந்த நிலையில் இவருடைய ஊரில் மக்கள் அனைவரும் மது அருந்துவோரைக் கட்டுப்பாடாக இருந்து புறக்கணித்தனர். எனவே அந்தக் காலகட்டத்தில் உரத்தநாடு திட்டம் என்று சட்டமன்றத்தில் பெரிதாகப் பாராட்டிப் பேசப்பட்டது.

பதிப்பகப் பணி

ஈழ விடிதலை இயக்கங்களோடு இணைந்து தொடர்ந்து ஈடுபட்டதால் மின்வாரியப் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து போராடிப் பணியைப் பெற்ற பிறகு விருப்ப ஒய்வு பெற்றுத் தனக்குப் பிடித்தமான அச்சுத் தொழிலில் ஈடுபட்டார்.[1] தமிழ்மண் பதிப்பகம் என்னும் பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் இலக்கியங்களையும் புதிய படைப்பு இலக்கியங்களையும் பதிப்பித்தார். பல தமிழ் அறிஞர்களின் நூல்களைப் பென்னம் பெரிய அளவில் தொகுப்புகளாக வெளியிட்டார்.

இசைத் தமிழ் நூல்

1917-ஆம் ஆண்டில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்னும் அரிய இசைத் தமிழ் நூலை 1995-ஆம் ஆண்டில் தஞ்சையில் நடந்த எட்டாவது உலகத் தமிழ்மாநாட்டில் வெளியிட்டார். ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் இரண்டாம் நூல், கருணாமிர்த சாகரத் திரட்டு ஆகிய நூல்களையும் சேர்த்து தமிழ் இசைக் களஞ்சியம் என்னும் பெயரில் 7 தொகுதிகளாக வெளியிட்டார். புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு அரசின் கல்வித்துறையின் கீழைக்கலை ஆய்வு நிறுவனத்துடன் இவருடைய தமிழ்மண் பதிப்பகம் இணைந்து சங்க இலக்கியங்கள் செம்பதிப்பு வரிசையில் நற்றிணை (3 தொகுதிகள்) குறுந்தொகை (3 தொகுதிகள்) ஆகியவற்றை வெளியிட்டது.

குறிப்பிடத்தக்க தொகுப்பு நூல்கள்

  • தேவநேயப் பாவாணர் --53 நூல்கள் முழுமையும்
  • கா.அப்பாத்துரை -- 40 க்கும் மேல்
  • ந.சி கந்தையா --66 நூல்கள்
  • வெ.சாமிநாத சர்மா --78 நுல்கள்
  • திரு வி.க -- 54 நுல்கள்
  • ந.மு.வேங்கடசாமி நாட்டார் --24 தொகுதிகள்
  • தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் --10 தொகுதிகள்
  • கவிஞர் முடியரசன் --13 தொகுதிகள்
  • கவிஞர் பாரதிதாசன் --25 தொகுதிகள்
  • அவ்வை துரைசாமிப் பிள்ளை --28 தொகுதிகள்
  • சோமசுந்தர பாரதியார் --5 தொகுதிகள்
  • இரா.இளங்குமரன் --75 நூல்கள்
  • புலவர் குழந்தை --15 தொகுதிகள்

இவையன்றித் தமிழர் மருத்துவக் களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம், வரலாற்று நூல்கள் ஆகியவற்றைத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தி.வே.கோபாலையர் தொகுத்தளித்த தமிழ் இலக்கணப் பேரகராதியை 17 தொகுதிகளாகவும் 165 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த யாழ்ப்பாண அகராதி என்னும் மானிப்பாய் அகராதியை இரண்டு தொகுதிகளாகவும் 70 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த வெள்ளிவிழாத் தமிழ்ப்பேரகராதியை மூன்று தொகுதிகளாகவும் இளவழகன் பதிப்பித்து வெளியிட்டார்.

பிற பணிகள்

மொழிக் காப்புப் பணியுடன் தமிழீழப் போராட்ட நிகழ்வுகளில் பங்கெடுத்து வந்தார். தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிறுவும் பணியில் முன்னின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறப்பு

கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளவழகன் மே 4, 2021 அன்று சிகிச்சை பலனின்றிக் காலமானர்.[2]

மேற்கோள்

"https://tamilar.wiki/index.php?title=கோ._இளவழகன்&oldid=28076" இருந்து மீள்விக்கப்பட்டது