கோவை மகேசன்

கோவை மகேசன்
KovaiMahesan.jpg
முழுப்பெயர் இரத்தினசபாபதி ஐயர்
மகேஸ்வர சர்மா
பிறப்பு 22-03-1938
பிறந்த இடம் கோப்பாய்,
யாழ்ப்பாணம்
மறைவு 04-07-1992
சென்னை,
தமிழ்நாடு
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது அரசியல்வாதி
பத்திரிகையாளர்
எழுத்தாளர்
பணி சுதந்திரன் பத்திரிகை
ஆசிரியர்
பெற்றோர் இரத்தினசபாபதி ஐயர்,
இரத்தினம்மா
வாழ்க்கைத் விசாலாட்சி
துணை

கோவை மகேசன் (மகேஸ்வர சர்மா, மார்ச் 22 1938 - சூலை 4 1992) ஈழத் தமிழ் பத்திரிகையாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும் ஆவார். சுதந்திரன் வாரப் பத்திரிகை, மற்றும் சுடர் மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஈழத்தமிழின விடுதலையே இவரது உயிர் மூச்சாக இருந்தது. நாட்டுப் பற்றாளராக, இனப் பற்றாளராக தன் இறுதி மூச்சு உள்ளவரை பணியாற்றியவர். மகேஸ்வரசர்மா என்ற பெயரை மகேசன் எனவும், கோப்பாயைக் குறிக்க கோவை என்றும் சேர்த்துத் தனது பெயரைக் கோவை மகேசன் என எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கில் 1938 மார்ச்சு 22 இல் பிறந்த கோவை மகேசனின் இயற்பெயர் மகேஸ்வர சர்மா. தந்தையார் பெயர் சோ. இரத்தினசபாபதி ஐயர். தாயார் பெயர் இரத்தினம்மா. மனைவி பெயர் விசாலாட்சி. சிறு வயதிலேயே தாயை இழந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கோப்பாய் சைவத் தமிழ் கலவன் பாடசாலையிலும் (நாவலர் பாடசாலை), மேற்படிப்பை கோப்பாய் கிறித்தவக் கல்லூரியிலும் கற்றார். சிரேட்ட தராதர (கலைப்பிரிவு) சோதனையில் சிறப்புத் திறமைகளுடன் சித்தியடைந்தார். சில காலம் யாழ்ப்பாணம் கச்சேரியில் தேர்தல் திணைக்களத்தில் பணியாற்றினார்.

இள வயதிலேயே தமிழ்ப்பற்று மிகுந்தவராக இருந்தார். பேரறிஞர் அண்ணாவின் எழுத்துக்களால் கவரப்பட்டார். தற்காலிக வேலை மூலம் கிடைத்த சொற்ப தொகையில் பெரும் பகுதியை புத்தகங்கள், பத்திரிகைகள் வாங்கவே செலவிட்டார். குடும்பத்தில் வசதிகள் குறைவாக இருந்தபோதிலும் அவரது தமிழ் பற்று அவ்வாறு செலவு செய்ய வைத்தது.

அரசியலில்

இவரது இளமைக்காலத்தில் இலங்கையில் தமிழ் அரசியல் உருவாகத் தொடங்கியது. தமிழ் பற்று மிக்க இவர் தமிழ் அரசியலால் கவரப்பட்டார். தந்தை செல்வா உருவாக்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். 1956 ஆம் ஆண்டு கோப்பாய் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கு. வன்னியசிங்கத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.

கொழும்பில் தந்தை செல்வா நடத்தி வந்த சுதந்திரன் பத்திரிகையில் 1962 இல் சேர்ந்து 1965 இல் உதவி ஆசிரியராகவும், பின்னர் 1968இல் அதன் ஆசிரியராகவும் ஏற்றம் பெற்றார். அக்காலத்தில் விடுதலைப் போராட்டம் பற்றிய அவரின் எழுத்துக்கள் பாரதியின் பாடல்களைப் போல அதி தீவிர நடையில் அமைந்திருந்தன. கோவை மகேசனின் அரசியல் ஈடுபாடு எழுத்துத் துறை வாயிலாகவே அமைந்தது. அத்துடன் ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் போன்ற போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டார்.

ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சி திருகோணமலையை மையப்படுத்தியே போராட்டங்களை திட்டமிட்டு வந்தது. அப்போது கோவை மகேசன் "எங்கே பலமிருக்கிறதோ அங்குதான் போராட வேண்டும்" என எழுதினார். அதன் பின்னரே யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

சுதந்திரன் பத்திரிகை கொழும்பு பண்டாரநாயகா வீதியிலிருந்த அதன் அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்டு வந்தது. 1970களின் பிற்பகுதியில் அரசு தரப்பிலிருந்தும் பாதுகாப்பு துறையிலிருந்தும் எழுந்த பிரச்சினைகளால் கோவை மகேசன் யாழ்ப்பாணத்திற்கு வந்து அங்கிருந்து சுதந்திரனை வெளியிட்டார். இதற்கிடையில் சிறிது காலம் சுடர் என்ற இலக்கிய இதழுக்கும் ஆசிரியராக பணியாற்றினார்.

யாழ்ப்பாண மேயராக இருந்த எஸ். ஏ. தர்மலிங்கம் தமிழ் ஈழ விடுதலை முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தபோது அவரின் செயலாளராகப் பணியாற்றினார். அக்கட்சி தடை செய்யப்பட்டது. இருவரும் சாவகச்சேரி காவல் நிலையத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றத்திற்காக சந்தேக நபர்களாக 1982ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். 1983 சூலையில் இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலையில் மயிரிழையில் இவர் உயிர் தப்பினார்.[1] 1983 இன் பின்னர் புலம் பெயர்ந்து மனைவியுடன் தமிழ்நாடு சென்றவர் அங்கிருந்து சில காலம் வேங்கைகள் என்ற பெயரில் ஒரு பத்திரிகை வெளியிட்டார்.

மறைவு

சென்னையில் சிறிது காலம் இரத்த அழுத்தம், முடக்குவாதம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த கோவை மகேசன் 1992 யூலை 4 சனிக்கிழமை காலை 7.48 மணிக்குச் சென்னை மந்தவெளி, பி.எஸ்.எஸ் மருத்துவமனையில் காலமானார். அன்று மாலை 4 மணிக்கு ஊரூர் (அடையாறு) மயானத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.[1] இவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பெருஞ்சித்திரனார், பழ. நெடுமாறன், பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் போன்ற பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 கோவை மகேசன், மறவன்புலவு. க. சச்சிதானந்தன்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கோவை_மகேசன்&oldid=2863" இருந்து மீள்விக்கப்பட்டது