கோட்டகமைக் கல்வெட்டு
கோட்டகமைக் கல்வெட்டு என்பது இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் கம்பளைக்கு அண்மையில் உள்ள கோட்டகமை என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்ச அரசன் ஒருவன் போரொன்றில் பெற்ற வெற்றியைக் குறிக்க எழுதுவிக்கப்பட்டது.
உள்ளடக்கம்
இக்கல்வெட்டு நான்கு வரிகளைக் கொண்ட ஒரு பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. இப்பாடல் சிங்கையாரிய மன்னனின் பெருமை பேசுவதாக அமைந்துள்ளது. பாடல் தொடங்குவதற்கு முன் மேல் வரிசையில் "சேது" என்னும் யாழ்ப்பாண மன்னர்களின் அடையாளச் சொல் காணப்படுகிறது. இதை, இக்கல்வெட்டு யாழ்ப்பாண அரசனின் ஆணையின்படியே வெட்டப்பட்டது என்பதற்குச் சான்றாகக் காட்டுகின்றனர். கல்வெட்டின் உள்ளடக்கம் அதில் இருக்கும் ஒழுங்கின்படி பின்வருமாறு:[1]
"சேது
கங்கணம்வேற்கண்ணினையாற்காட்டினார்
காமர்வளைப்பங்கயக்கைமேற்றிலதம்பாரித்தார்
பொங்கொலிநீர்சிங்கைநகராரியனைச்செரா
வனுரேசர்தங்கள்மடமாதர்தாம்"
இங்கே சொற்களிடையே இடைவெளி இல்லாமலும் அடிகள் முறையாகப் பிரிக்கப்படாமலும் உள்ளது. ஆய்வாளர்கள் இதைப் பின்வருமாறு ஒழுங்குபடுத்தியுள்ளர்கள்:[2]
"சேது
கங்கணம் வேற்கண்ணினையாற் காட்டினார் காமர்வளைப்
பங்கயக்கை மேற்றிலதம்பாரித்தார் பொங்கொலிநீர்
சிங்கைநகராரியனைச் சேராவனுரேசர்
தங்கள்மடமாதர் தாம்"
"சிங்கையாரியனுக்கு அடங்காத சிங்களத் தலைவர்களுடைய மனைவிமார் கண்ணீர் விட்டுத் தமது நெற்றியில் இருந்த பொட்டை அழித்தனர்"[3] என்பது இதன் பொருள். இது சிங்கையாரியன் சிங்கள நாட்டில் நடந்த போரில் வெற்றி பெற்றதைக் குறித்துக் காட்டுகிறது. சிங்கையாரியன் என்பது 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரச வம்சத்தைச் சேர்ந்த அரசர்களுக்கான பொதுப் பெயர் என்பதால், இக்கல்வெட்டில் இருந்து குறிப்பாக எந்த யாழ்ப்பாண அரசன் வெற்றி பெற்றவன் என்பதை அறிய முடியாது.
காலம்
இக்கல்வெட்டை ஆய்வு செய்த காட்ரிங்டன், எழுத்தமைதியில் அடிப்படையில் அது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும் என்றும், 6 ஆம் பரக்கிரமபாகுவின் காலத்தில் விசயநகரப் படையெடுப்புக்குப் பின்னர் ஆரியச்சக்கரவர்த்திக்கு இவ்வாறான ஒரு வெற்றி கிடைத்திருக்கக்கூடும் எனவும் கூறுகிறார். எழுத்தமைதியின் அடிப்படையில் காலத்தைக் கணிப்பது துல்லியமானது அல்ல என்றும், 1344 ஐச் சேர்ந்த இலங்காதிலகக் கல்வெட்டும் இது போன்ற எழுத்தமைதி கொண்டதே என்றும் சுட்டிக்காட்டிய பத்மநாதன், இதுவும் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறுகிறார்.
பின்னணி
14ம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் இலங்கையில் இருந்த அரசுகளில் யாழ்ப்பாண அரசு வலிமை பொருந்தியதாக இருந்தது. அக்காலத்தில் கம்பளை சிங்கள அரசின் தலைமையிடமாக விளங்கியது. உள் பிரச்சினைகளால் சிங்கள அரசு வலிமை குன்றியிருந்ததால், அதன் ஆட்சிப்பகுதி முழுவதிலும் முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருக்க முடியவில்லை. பராக்கிரமபாகுவின் மருமகன் கம்பளையிலும், முதலமைச்சர் அழகக்கோனார் இறைகமையிலும் இருந்தனர். யாழ்ப்பாண அரசர்கள் இவர்களிடம் இருந்து திறையும் பெற்றுவந்தனர். 1340களை அண்டி ஒரு அரசாகவே செயற்பட்டுவந்த அழகக்கோனார் இப்போது கோட்டே இருக்கும் பகுதியில் ஒரு கோட்டையைக் கட்டி அதைப் பலப்படுத்தினான். ஆயுதங்களையும் படைகளையும் திரட்டிப் போதிய வலிமை பெற்ற பின்னர் திறை கொடுக்க மறுத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து திறைபெறச் சென்ற தூதுவர்களைப் பிடித்துத் தூக்கில் இட்டான். யாழ்ப்பாண அரசன் சிங்கள அரசின் மேல் போர்ப்பிரகடனம் செய்து, நிலம் வழியாகவும், கடல் வழியாகவும் இரண்டு பிரிவுகளாகப் படைகளை அனுப்பினான். நிலம் வழியாகச் சென்ற படை மாத்தளையை அடைந்தது. சிங்கள அரசன் கம்பளையில் இருந்து தப்பிச் சென்றான். கடல் வழியாக வந்த படைகள் கொழும்பிலும், பாணந்துறையிலும் இறங்கின. சிங்கள நூலான இராசவழி, கடல்வழியாக வந்து இறங்கிய யாழ்ப்பாணப் படைகளை அழகக்கோனாரின் படைகள் எதிர்த்துப் போரிட்டுத் தோல்வியுறச் செய்ததுடன், பாணந்துறையில் நின்ற யாழ்ப்பாணக் கப்பல்களையும் எரித்துவிட்டன என்றும், மக்கள் ஒன்றிணைந்து மாத்தளையில் இருந்த யாழ்ப்பாணப் படைகளையும் தோற்கடித்தனர் என்றும் கூறுகிறது.
கோட்டகமைக் கல்வெட்டின் உள்ளடக்கம் சிங்கள நூல்களின் கூற்றில் ஐயத்தை ஏற்படுத்துகிறது. மேற்குறித்த போரில் சிங்களப் படைகள் பெற்ற வெற்றி இராஜாவளியால் மிகைப்படுத்தப்பட்டது என்றே தெரிகிறது. யாழ்ப்பாணப் படைகள் சில இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்காவிட்டால் இவ்வாறான கல்வெட்டைப் பொறித்திருக்க முடியாது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கம்பளைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் யாழ்ப்பாணத்து அரசன் தான் பெற்ற வெற்றியைப் பதிவு செய்திருப்பதால், சிங்கையாரியனின் படைகள் மலைநாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிக் கம்பளை வரை சென்று அதன் அரசனையும் தோல்வியுறச் செய்திருக்கக்கூடும்.[4]
சிங்கையாரியனின் அடையாளம்
மடவலை என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிங்களக் கல்வெட்டொன்று மூன்றாம் விக்கிரமபாகுவுக்கும் மார்த்தாண்டம் பெருமாள் என்பவனுக்கும் இடையில் சிங்களநாட்டில் யாழ்ப்பாண அரசு சார்பில் வரி வசூலிப்பதற்கு ஆட்களை நியமிப்பது தொடர்பான ஒப்பந்தம் பற்றியது. இங்கே குறிப்பிடப்பட்ட மார்த்தாண்டம் பெருமாள், யாழ்ப்பாணத்து இளவரசனான மார்த்தாண்டன் எனத் தெரிகிறது. இவனே பின்னர் மார்த்தாண்ட சிங்கையாரியன் என்னும் பெயரில் யாழ்ப்பாண அரசனானவன். ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில் தந்தையான வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தின் அரசனாக இருந்தான். இந்த ஒப்பந்தமும், கோட்டகமைக் கல்வெட்டும் முன் குறித்த போரின் தொடர்ச்சியாகவே இடம்பெற்றிருக்க வேண்டும். எனின், கோட்டகமைக் கல்வெட்டில் குறிக்கப்படும் சிங்கையாரியன், வரோதய சிங்கையாரியனே எனலாம்.[5]
கோட்டகமைக் கல்வெட்டும் வேறு ஆய்வு முடிவுகளும்
இக்கல்வெட்டில் "பொங்கொலிநீர் சிங்கை நகர்" என வரும் தொடரை, சிங்கை நகரும் நல்லூரும் ஒரே நகரம் அல்ல என்று காட்டுவதற்குச் சில ஆய்வாளர்கள் பயன்படுத்துகின்றனர். "பொங்கொலிநீர்" என்னும் சொல் அலை எறிந்து ஒலிக்கும் கடலைக் குறிக்கின்றது என்றும், எனவே சிங்கை நகர் கடற்கரையோரத்தில் இருந்திருக்கவேண்டும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். நல்லூர் கடலோரம் அமையாததால், நல்லூருக்கு முன்னர் சிங்கை நகர் என்னும் வேறொரு நகரம் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது என்பது அவர்கள் கருத்து. எனினும் இதில் ஒருமித்த கருத்து இல்லை.