கே. பி. நாகபூசணம்
கடாரு நாகபூசணம் அல்லது கே. பி. நாகபூசணம் (Kadaru Nagabhushanam or K. B. Nagabhushanam, 1902 - 18 அக்டோபர் 1976) என்பவர் 1940கள் முதல் 1960கள் வரை தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் பிரபல நடிகை ப. கண்ணாம்பாவின் கணவர் ஆவார். இவர்கள் ராஜராஜேஸ்வரி திரைப்பட நிறுவனத்தை நிறுவி, கண்ணாம்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹரிச்சந்திரா உட்பட பல புராணப் படங்களைத் தயாரித்தனர்.[1] தீண்டாமை குறித்த சமூகப் படமான நவஜீவனம் மதறாசு மாநிலத்தின் அங்கீகாரத்தைப் பெற்று சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கே. பி. நாகபூசணம் | |
---|---|
பிறப்பு | 1902 |
இறப்பு | 18 அக்டோபர் 1976 (அகவை 73–74) சென்னை, இந்தியா |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் |
வாழ்க்கைத் துணை | ப. கண்ணாம்பா |
திரைப்பட வாழ்க்கை
நாகபூசணம் 1941 இல் தள்ளி பிரேமா படத்தின் தயாரிப்பாளராக திரைப்படத் துறையில் நுழைந்தார் [2] இவர் இயக்கிய முதல் படமான சுமதி, பெண்களை வெகுவாகக் கவர்ந்தது. இவரது பிரம்மாண்டமான படமான பாதுகா பட்டாபிசேகம் (1945) படத்தில் சி.எஸ்.ஆர். ஆஞ்சநேயுலு, அட்டாங்கி, கண்ணாம்பா ஆகியோர் நடித்தனர். அப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஆடை, ஆபரணங்கள், ஒப்பனை என அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்தினார். பின்னர் தமிழில் வெற்றிப் படங்களான அரிச்சந்திரா, துளசி ஜலந்திரா ஆகிய படங்களை தயாரித்தார். சௌதாமினி (1951) படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கிற்கு படத்துறைக்கு வந்தார். இவரது திரைப்படமான பேத ரைத்து, விவசாயத் தொழிலாளர்களைப் பற்றிய கருத்து அடிப்படையிலான திரைப்படம் தெலுங்கு திரையுலகில் ஒரு முக்கிய திரைப்படமாக மாறியது. தமிழிலும் ஏழை உழவன் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இவரது சதி சக்குபாய் (1954) திரைப்படம் ஆந்திரப் பிரதேச திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. இவரது அடுத்த தயாரிப்பு அஞ்சலிதேவி மற்றும் வி. நாகய்யா நடித்த பிரபல படமான நாக பஞ்சமி (1956) ஆகும். இவர் வரலட்சுமி பிக்சர்சின் சதி சாவித்ரி படத்தை இயக்கினார், அதில் எஸ். வி. ரங்கராவ் யமனாக நடித்தார். மேலும் அவரது பாத்திரத்தை திறம்பட சித்தரித்ததற்காக இயக்குநராக இவர் புகழ் பெற்றார். அதைத் தொடர்ந்து, சி. எஸ். ராவ் இயக்கத்தில் ஸ்ரீ கிருஷ்ண மாயா படத்தைத் தயாரித்தார். இவரது தட்சயங்ஞம் (1962) திரைப்படமே என். டி. ராமராவ் முதலும் கடைசியுமாக சிவனாக நடித்த படம் என்று நினைவுகூரப்படுகிறது. 1964ல் மனைவி கண்ணாம்பா இறந்த பிறகு, மனதளவிலும், உடலளவிலும் நலிவுற்றார். ம. கோ. இராமச்சந்திரன் நடித்த தமிழ்ப் படத்தைத் தயாரிப்பதில் இவருக்குப் பணச் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இவர் தனது சொத்துக்களை விற்று, சென்னையில் மோசமான வாழ்நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இவரது வாழ்வாதாரத்திற்காக இவரது தொழில்முறை சகாக்ககள் உதவினார். இவர் 1976 இல் இறந்தார்.
திரைப்படவியல்
ஆண்டு | படம் | மொழி | பங்கு |
---|---|---|---|
1941 | தள்ளிபிரேமா | தெலுங்கு | இயக்குநர் |
1942 | சுமதி | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1944 | அரிச்சந்திரா | தமிழ் | இயக்குநர், தயாரிப்பாளர் |
1945 | பாதுகா பட்டாபிசேகம் | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1946 | பக்த துளசிதாஸ் | தெலுங்கு | தயாரிப்பாளர் |
1947 | துளசி ஜலந்தர் | தமிழ் | இயக்குநர், தயாரிப்பாளர் |
1949 | நவஜீவனம் | தமிழ் | இயக்குநர், தயாரிப்பாளர் |
1949 | நவஜீவனம் | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1951 | சௌதாமினி | தமிழ் | இயக்குநர், தயாரிப்பாளர் |
1951 | சௌதாமினி | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1952 | ஏழை உழவன் | தமிழ் | இயக்குநர், தயாரிப்பாளர் |
1952 | பேத ரைது | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1953 | இலட்சுமி | தமிழ் | இயக்குநர், தயாரிப்பாளர் |
1953 | இலட்சுமி | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1954 | சதி சக்குபாய் | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1955 | சிறீ கிருஷ்ணா துலாபாரம் | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1956 | நாக பஞ்சமி | தமிழ் | இயக்குநர், தயாரிப்பாளர் |
1956 | நாக பஞ்சமி | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1957 | சதி அனுசியா | இயக்குநர் | |
1957 | சதி சாவித்திரி | தமிழ் | இயக்குநர் |
1957 | சதி சாவித்திரி | தெலுங்கு | இயக்குநர் |
1958 | அண்ணா தம்முடு | தெலுங்கு | தயாரிப்பாளர் |
1958 | சிறீ கிருஷ்ண மாயா | தெலுங்கு | தயாரிப்பாளர் |
1959 | வீர பாஸ்கருடு | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1960 | தர்மமே ஜெயம் | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1961 | உஷா பரிணயம் (1961 திரைப்படம்) | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1962 | தட்சயக்ஞம் | தமிழ் | இயக்குநர், தயாரிப்பாளர் |
1962 | தட்சயக்ஞம் | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1963 | ஆப்த மித்ருடு | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1965 | சதுவுக்குன்ன பார்யா | தெலுங்கு | இயக்குநர், தயாரிப்பாளர் |
1966 | தாலி பாக்கியம் | தமிழ் | இயக்குநர் |
1966 | உஷா கல்யாணம் | தெலுங்கு | இயக்குநர் |
மேற்கோள்கள்
- ↑ "Harishchandra 1944". தி இந்து. 2009-07-03. Archived from the original on 2012-11-06. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ Kadaru Nagabhushanam by Mana Satyam, in Dhruvatara Kannamba (Telugu), edited by H. Ramesh Babu, Chinni Publications, Nagar Kurnool, 2008, pp. 30-31.