கீழப்பளுவூர் சின்னச்சாமி

கீழப்பளுவூர் சின்னச்சாமி (1915 – 1964) என்று அறியப்படும் சின்னச்சாமி இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் முதன்முதலாகத் தீக்குளித்து உயிர்விட்ட போராளி ஆவார்.

வாழ்க்கை

அரியலூர் மாவட்டத்தின், அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம், தங்கம்மாள் இணையரின் மகனே சின்னச்சாமி. இவர் பெற்றோருக்குத் திருமணமாகி 23 ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர்.[1] ஐந்தாம் வகுப்புவரை படித்துவிட்டு உழவுத் தொழிலை மேற்கொண்டிருந்தார். சுயமரியாதை நூல்களை ஈடுபாட்டுடன் படித்து வந்தார். மனைவியின் பெயர் கமலம். ஒரே மகளின் பெயர் திராவிடச்செல்வி.

இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம்

1965 சனவரி 26 அன்றிருந்து இந்தி மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை நிறைவேற்ற நடுவணரசு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தயாராகி வந்தது. முன்னறிவிப்புகளும் வந்தன. இதை உணர்ந்த மாணவர்களும் பொதுமக்களும் எச்சரிக்கை அடைந்து முன்கூட்டியே கிளர்ந்தனர், தமிழகத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே போராட்டம் வெடித்தது.[2] மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தனர். அந்த நேரத்தில் தெற்கு வியட்னாமில் புத்த பிக்குகள் அமைதி வேண்டி, தீக்குளித்தனர் என்ற செய்தி இதழ்களில் வெளி வந்தன.[3]

தீக்குளிப்பு

திருச்சிக்கு வந்த சின்னச்சாமி, அங்கே ஒரு புகைப்படம் எடுத்து, அதன் இரசீதைத் தான் உயிரை விடப்போவதாக எழுதிய கடிதத்துடன் இணைத்து, தன் நண்பருக்கு அனுப்பினார். பின்னர், 1964 ஆம் ஆண்டில் சனவரி இருபத்தைந்தாம் நாள், திருச்சி இரயில் நிலையத்தின் வாயிலில், விடியற் காலை 4.30 மணிக்குப் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்டு, ”தமிழ் வாழ்க, இந்தி ஒழிக” எனக் கத்தியவாறு, கட்டாய இந்தி திணிப்பைக் கண்டித்து தீக்குளித்து உயிரிழந்தார்.[4]

சிலை

ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25 ஆம் நாள் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளாகத் பா.ம.க, தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க போன்ற கட்சிகள் கடைபிடித்து வருகின்றன. திருச்சிராப்பள்ளி மாவட்டம், கம்பரசம் பேட்டையில் 8 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாய் செலவில் கீழப்பளுவூர் சின்னச்சாமிக்கு தமிழக அரசினால் சிலை அமைக்கப்பட்டுள்ளது.[5]

இதனையும் காண்க

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

மேற்கோள்கள்

  1. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 8
  2. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 12
  3. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை - சேலம், பக்கம் 9
  4. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 7
  5. "தமிழகத்தில் ரூ.13 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் ஜெ". tamil.annnews.in. http://tamil.annnews.in/tamil/latest/Rs-13-crore-tn-inaugurated-Jayalalitha-Video-Conferencing. பார்த்த நாள்: 25 ஏப்ரல் 2016. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்