கா. ந. கல்யாணசுந்தரம்

கா. ந. கல்யாணசுந்தரம் (Kaa.Na. Kalyanasundaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். புதுக்கவிதை, நவீனம் மற்றும் மரபுக்கவிதைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.[1] [2]தெலுங்கு நானிலு வடிவத்தை தழுவிய தன்முனைக் கவிதைகள் என்ற புதிய கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னையில் வசித்து வரும் இவர் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வருகிறார்.

கா. ந. கல்யாணசுந்தரம்
கா. ந. கல்யாணசுந்தரம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கா. ந. கல்யாணசுந்தரம்
Kaa.Na. Kalyanasundaram
பிறந்ததிகதி (1955-12-17)17 திசம்பர் 1955
பிறந்தஇடம் காவனூர், வேலூர் மாவட்டம்
பணி கவிஞர்
தேசியம் இந்தியர்
குடியுரிமை  இந்தியா
குறிப்பிடத்தக்க விருதுகள் பாவேந்தரின் புதல்வர் மன்னர் மன்னன் வழங்கிய பாவேந்தர் பட்டயம் (1991)

செய்யாறு தமிழ்ச்சங்கத்தின் மனிதநேயக் கவிஞர் விருது (1999)
மித்ரா துளிப்பா விருது (2016)
தமிழ் கலை இலக்கிய மேம்பாட்டுக் கழகத்தின் மதிப்புறு தமிழன் விருது (2017)

கம்போடியா நாட்டு அங்கோர் தமிழ்ச் சங்கத்தின் இளங்கோவடிகள் விருது (2019)
பெற்றோர் மா. நாயனாப்பிள்ளை
பாலகுஜாம்பாள்

பிறப்பு மற்றும் படிப்பு

கா.ந. கல்யாணசுந்தரம் 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகில் உள்ள காவனூர் என்னும் சிறு கிராமத்தில் கர்ணம் மா.நாயனாப்பிள்ளை , பாலகுஜாம்பாள் தம்பதியினருக்கு எட்டாவது மகவாகப் பிறந்தார். தமது பள்ளிப் படிப்பை அரசினர் உயர்நிலைப்பள்ளி காவனூரிலும் கல்லூரிப் படிப்பை வேலூர் ஊரிசு கல்லூரி மற்றும் மேல்விசாரம் அப்துல் அக்கீம் கல்லூரியிலும் படித்தார். மதுரை காமராசர் பல்கலையில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் முப்பத்து எட்டு ஆண்டு காலம் வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். 25 ஆண்டுகாலம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் வசித்தார். தற்போது சென்னை மேடவாக்கத்திற்கு இடம்பெயர்ந்து தமிழ் இலக்கிய பணி செய்து வசித்து வருகிறார்.

கவிதைப் பணி

பள்ளிப் படிப்பு காலத்திலேயே கல்யாணசுந்தரம் மரபுக் கவிதைகள் மற்றும் இசைப் பாடல்கள் எழுதினர். இவரது பாடல்கள் பல சென்னை மற்றும் திருச்சி வானொலிகளில் மெல்லிசையாக ஒலிபரப்பு செய்யப்பட்டன. காவியப்பாவை, மலைச்சாரல், கலைமகள், குயில் போன்ற இலக்கிய பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளிவந்தன.

1992 ஆம் ஆண்டு முதல் இவர் ஐக்கூ கவிதைகள் எழுதுவதில் முனைப்புடன் ஈடுபட்டார்.[3] 1999 ஆம் ஆண்டு " மனிதநேயத் துளிகள் எனும் ஐக்கூ தொகுப்பினை வெளியிட்டார். இத்தொகுப்பில் இவரது ஐக்கூ கவிதைகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியானது. இதுவே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்த முதல் இருமொழி ஐக்கூ புத்தகமாகும். இவரது பல ஐக்கூ கவிதைகள் மலையாளம், இந்தி, பிரஞ்சு, ஆங்கிலம் மற்றும் சப்பானிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. ஐக்கூ சிகரம், ஐக்கூ செம்மல் ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

முனைவர் கோபியின் தெலுங்கு வடிவ நானிலு கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்த கவிஞர் சாந்தா தத்தின் கவிதை வடிவத்தை உள்வாங்கிக் கொண்டு தமிழ் மொழிக்கு ஏற்றவாறு புதிய விதி முறைகளை வகுத்து "தன்முனைக் கவிதைகள்" எனப் பெயரிட்டு நான்கு வரிக்கவிதைகளை புதுப்பொலிவுடன் இவர் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வடிவம் தன்முனைக் கவிதைகள் என்ற பெயரில் கவிஞர்களால் எழுதப்பட்டு வருகிறது. நாளேடுகள், மாத வார இதழ்கள், முகநூல் குழுமங்கள் இவ்வகை கவிதைகளை வெளியிட்டும் வருகின்றன. தன்முனைக் கவிதைப் போட்டிகளும் நடத்தப்பட்டு விருதுகளும் சான்றுகளும் கூட வழங்கப்படுகின்றன. 52 கவிஞர்களின் தன்முனைக்கவிதைகளை தொகுத்து "வானம் தொடும் வண்ணத்துப்பூச்சிகள்" எனும் நூலினை கம்போடியா நகரில் அங்கோர் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில், கவிஞர் கா. ந. கல்யாணசுந்தரம் வெளியிட்டார். அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் தன்முனைக் கவிதைகள் பயிற்சிக்கான ஒரு பாடப்பிரிவையும் நடத்துகிறது.[4]

எழுதிய நூல்கள்

  • மனிதநேயத் துளிகள்[5]
  • மனசெல்லாம்[6]
  • வெளிச்சமொழியின் வாசிப்பு[7]
  • நான்.. நீ...இந்த உலகம்[8]
  • வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்[9]

விருதுகள்

  • 1991 ஆம் ஆண்டில் பாவேந்தரின் புதல்வர் மன்னர் மன்னன் வழங்கிய பாவேந்தர் பட்டயம்.
  • 1999 ஆம் ஆண்டில் செய்யாறு தமிழ்ச்சங்கத்தின் மனிதநேயக் கவிஞர் விருது.
  • 2016 ஆம் ஆண்டில் மித்ரா துளிப்பா விருது.
  • 2017 ஆம் ஆண்டில் தமிழ் கலை இலக்கிய மேம்பாட்டுக் கழகத்தின் மதிப்புறு தமிழன் விருது.
  • 2019 ஆம் ஆண்டில் கம்போடியா நாட்டு அங்கோர் தமிழ்ச் சங்கத்தின் இளங்கோவடிகள் விருது[10]

மேற்கோள்கள்

  1. காமதேனு (2022-04-03). "நிழற்சாலை". காமதேனு. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
  2. Kanaiyazhi (2021-02-02). "Kanaiyazhi - February 2021". Pustaka Digital Media. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
  3. Hiruta (2021-05-30). "World Haiku Series 2020 (48) Haiku by Kaa.Na.Kalyanasundaram". Akita International Haiku Network (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
  4. "COURSESHome". America Mutamil Univ (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
  5. "கவிஞர் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்!…. ( படைப்பாளி )…. இந்தியா. – AKKINIKKUNCHU" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
  6. "மனசெல்லாம் ஹைக்கூ கவிதைகள் நூல் ஆசிரியர் காந கல்யாணசுந்தரம் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி - கட்டுரை". eluthu.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
  7. Admin (2021-03-30). "தன்முனைக் கவிதைகளின் தந்தை – Tamilnenjam". பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
  8. "நவீன கவிஞர்களிடமிருந்து கவிதைகளைக் காப்பாற்றவேண்டும்! 'தன்முனைக்' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் முழக்கம்!". nakkheeran (in English). 2018-07-02. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
  9. "இடம் பொருள் இலக்கியம்: 4- கம்போடியாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு". Hindu Tamil Thisai. 2019-09-22. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
  10. "கம்போடியாவில் தமிழுக்குப் பெருமை". தினமணி. https://www.dinamani.com/lifestyle/art/2019/sep/26/tamil-in-world-and-cambodia-3242700.html. பார்த்த நாள்: 3 June 2023. 
"https://tamilar.wiki/index.php?title=கா._ந._கல்யாணசுந்தரம்&oldid=3786" இருந்து மீள்விக்கப்பட்டது