காற்புள்ளி (தமிழ் நடை)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காற்புள்ளி என்பது நிறுத்தக்குறிகளுள் ஒன்றாகும். இக்குறி, பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.
கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்
எழுத்தில் கருத்துகளை வெளிப்படுத்தும்போது மிகக் குறைந்த அளவு கால இடைவெளியைக் குறிக்க கால்புள்ளி பயன்படுகிறது. கால்புள்ளி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
- 1) ஒரே எழுவாயைக் கொண்டு அடுக்கி வரும் முற்றுவினைகளுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- நீங்கள் வெளியிட்டிருந்த நகைச்சுவைத் துணுக்குகளைப் படித்தேன், இரசித்தேன், சிரித்தேன்.
- 2) ஒரே பெயரைத் தழுவும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- இனிமையான, பொருள் பொதிந்த, நெஞ்சை அள்ளும் பாடல் ஒன்று காற்றில் மிதந்து வந்தது.
- 3) ஒரே வினையைத் தழுவும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- அந்தப் பாடல் இனிமையாக, உள்ளத்திற்கு நிறைவளிப்பதாக, கடந்த காலத்தை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.
- 4) தொடர்புபடுத்திக் கூறப்படும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் எண்களுக்கு இடையிலும் கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- தந்தை, மகன் இருவர் முகத்திலும் மலர்ச்சி.
- 5) ஒரே சொல் அல்லது (மரபுத் தொடர் அல்லாத) தொடர் இரு முறை அடுக்கி வரும்போது அவற்றிற்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- அவள் வருவாள், வருவாள் என நான் எதிர்பார்த்திருந்தேன்.
- 6) ஒரு வாக்கியத்தை அதன் முன் உள்ள வாக்கியத்துடன் தொடர்புபடுத்தும் சொற்களையும் தொடர்களையும் அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- அவர் ஒரு தலைசிறந்த எழுத்தாளர். ஆனால், அவரால் மேடைகளில் சிறப்பாகப் பேச முடியாது.
சொற்றொடர்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்த வரக்கூடிய இடைச்சொற்கள் சில:
:அடுத்ததாக, அடுத்து, அதற்கேற்ப, அதன்படி, அதனால், அது போலவே, அது போன்றே, ஆகவே, ஆகையால், ஆயினும், ஆனாலும், இத்துடன், இரண்டாவதாக, இருந்தாலும், இவ்வாறாக, எடுத்துக்காட்டாக, என்றாலும், எனவே, எனினும், ஒருவழியாக, தவிரவும், பிறகு, பின்பு, பின்னால், முடிவாக, முடிவில், முதலாவதாக, முன் கூறியவாறு, மேலும்.
- 7) வாக்கியத்தின் தொடக்கத்தில் வாக்கியத்திற்கே வினையடையாக வரும் சொற்களையும் தொடர்களையும் அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- பொதுவாக, அவர் அரசியலில் ஈடுபடுவதில்லை.
- 8) அதாவது, குறிப்பாக, என்னும் சொற்களைக் கொண்ட தொடருக்கு முன்னும் பின்னும் கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், சிறந்த உழைப்பாளிகள்.
- 9) அழுத்தத்திற்காக வரிசைமுறை மாற்றி எழுதப்படும் தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு: அறையில் மண்டிக்கிடந்தது, இருள்.
- 10) ஒரு முழுமையான கூற்று வாக்கியத்தைத் தொடர்ந்து வரும் இல்லையா, அல்லவா போன்ற சொற்களுக்கு முன் கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- ஆசிரியர் கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட்டார், இல்லையா?
- 11) ஒரே வாக்கியத்தில் அடுக்கி வரும் வினாத்தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- உங்களுக்கு என்ன வேண்டும், இனிப்பா, காரமா?
- 12) ஒரே வாக்கியத்தில் அடுத்தடுத்து வரும் ஏவல் வினைகளுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- அவரைத் தடுக்காதே, போகவிடு.
- 13) எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் தொடர் வரும்போது எழுவாயை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- தங்கையின் திருமணம், வருகிற 10ஆம் தேதி நடைபெறுகிறது.
- 14) விடையளிக்கும்போது விடையின் ஒரு பகுதியாக வரும் வினாவை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- இது என்ன?
- இதுவா, இது ஒரு புதுமாதிரிப் பேனா.
- 15) உணர்ச்சியைத் தெரிவிக்கும் வாக்கியத்தில் இடம்பெறும் உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- ஐயோ, வலி தாங்க முடியவில்லையே!
- 16) வாக்கியத்தின் தொடக்கத்தில் வரும் ஆமாம், இல்லை, ஓ, ஓகோ, போன்ற சொற்களை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- ஆமாம், அவர் நேற்றே வந்துவிட்டார்.
- 17) இரு வினாக்களுக்கு இடையில் வரும் இல்லை என்ற சொல்லை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- இது படகா, இல்லை, மிதக்கும் வீடா?
- 18) விளிக்கும் சொற்களை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- தம்பி, இங்கே வா.
- 19) கடிதத்தில் இடம்பெறும் விளிக்கும் சொல் அல்லது தொடர், முடிக்கும் சொல் அல்லது தொடர் ஆகியவற்றை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- ஐயா,
- தாங்கள் வழங்கிய நன்கொடையைப் பெற்றுக்கொண்டோம்.
- இப்படிக்கு,
- ம. கிள்ளிவளவன்.
- 20) முகவரியைக் கிடக்கை வரிசையில் தரும்போது பெயர், பதவி, நிறுவனம், வீட்டு எண், தெரு போன்ற விவரங்கள் ஒவ்வொன்றையும் அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- முனைவர் இளங்குமரன், தமிழ்த் துறை, கலைவாணர் கல்லூரி, கன்னியாகுமரி.
- 21) தலைப்பு எழுத்தைப் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும்போது பெயரை அடுத்து கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- வரதராசனார், மு.
- 22) பட்டங்களைக் குறிக்கும் சுருக்கக் குறியீடுகளுக்கு இடையில் கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- முனைவர் க. இளங்கோவன், எம்.ஏ., டி.லிட்.
- 23) மாதத்தின் பெயரைத் தொடர்ந்து வரும் தேதிக்கும் ஆண்டுக்கும் இடையில் கால்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- நவம்பர் 14, 1958.
கால்புள்ளி தேவை இல்லாத இடங்கள்
- 1) தேதியைப் பின்வரும் முறைகளில் குறிப்பிடும்போது கால்புள்ளி தேவை இல்லை.
- எடுத்துக்காட்டுகள்:
- 25 மார்ச்சு 1978
- 1978 மார்ச்சு 25
- 2) முகவரியைப் பின்வரும் முறையில் எழுதும்போது கால்புள்ளி தேவை இல்லை.
- எடுத்துக்காட்டு:
- உமா அச்சகம்
- 22 காளையார் கோவில் தெரு
- திருநெல்வேலி 627 006
சான்றுகள்
1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.