கழார்க் கீரன் எயிற்றியனார்

கழார்க் கீரன் எயிற்றியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 330 எண் கொண்ட பாடல்.

கழார் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் இவர்.
கழாரில் வாழ்ந்த மற்றொரு புலவர் கழார்க் கீரன் எயிற்றியார்.

பாலை நிலப் பெண்ணை எயிற்றி என்பர். பாலைநில ஆண் எயினன். அம்பு எய்வதில் வல்லவன் எயினன். (எய் + இன் + அன்) எயினனுக்குப் பெண்பால் எயிற்றி. காவிரிக்கரை ஊரான கழாரில் வாழ்ந்த புலவர் கீரன். இவர் எயினப் பெண்ணை மணந்துகொஒண்டு வாழ்ந்ததால் கீரன் எயிற்றியனார் என வழங்கப்பட்டார்.

பாடல்

'நலத்தகைப் புலத்தி பசை தோய்த்து எடுத்துத்

தலைப்புடைப் போக்கித் தண்கயத்து இட்ட

நீரின் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்

பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ

இன்கடுங் கள்ளின் மணம் இல கமழும்

புன்கண் மாலையும் புலம்பும்

இன்றுகொல் தோழி அவர் சென்ற நாட்டே'

பாடல் தரும் செய்தி

அவர் சென்ற நாட்டில் மாலைக் காலத்தில் மலரும் பகன்றைப் பூ பூக்குமா பூக்காதா? பூத்தால் நான் மாலைக் காலத்தில் தனித்து வருந்துவது அவர் நினைவுக்கு வருமல்லவா? என்று தலைவி தோழியிடம் சொல்லித் தன் தனிமையை நொந்துகொள்கிறாள்.

செடியினம் - பகன்றை

(புலைத்தி என்னும் வண்ணாத்தி துணி வெளுப்பவள். அவள் உழமண் என்னும் பசைமண் நீரில் தோய்த்துச் சூளை வைப்பாள். அப்போது அப்போது உளைமண் நீர் கலந்த துணியை முறுக்கிச் சூளைமேல் அடுக்கி வைப்பாள்.)

அந்த முறுக்குத் துணியைப் போலப் பகன்றைப் பூ முறுக்கிக்கொண்டு பூத்திருக்கும். அந்தப் பூ மாலையில் பூக்கும். கள்ளைப்போல் நாறும்.