கந்தரனுபூதி

கந்தரனுபூதி அல்லது கந்தர் அனுபூதி என்னும் நூல் அருணகிரிநாதர் என்பவரால் பாடப்பட்டது. அருணகிரிநாதர் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.

சொல் விளக்கம்

அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம்.

"அனு" என்பது அனுபவம். "பூதி" என்பது புத்தி. இது (அறிவு). அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி.

சிறப்புகள்

பத்தாம் திருமுறை திருமந்திரம் நூலுக்கு ஒப்பாக இந்த நூல் கொள்ளத்தக்கது எனச் சமயவாணர்கள் கூறுகின்றனர்.

திருமூலர் இடையன் உடலுக்குள் புகுந்து திருமந்திரம் சொன்னாராம். அதுபோல அருணகிரிநாதர் கிளி உடலுக்குள் இருந்துகொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர்.

நூலின் யாப்பு

எல்லாப்பாடல்களுமே "நிலைமண்டில ஆசிரியப்பா" வகையில் எழுதிருப்பதனை காண முடிகிறது. எனவே ஒவ்வொரு பாடலும் 4 அளவடிகள் கொண்டு, ஆசிரியச்சீர்கள் கொண்டு இயற்றப்பட்டிருக்கின்றன.

பாடல்கள்

இந்த நூலில் 51 பாடல்கள் உள்ளன.[1]

பாடல்கள் எதுகைத்தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை உடையனவாக உள்ளன.

இவற்றோடு மேலும் சில பாடல்களைச் சேர்த்து 105 பாடல்கள் கொண்ட பதிப்புகளும் உள்ளன.

இந்த நூல் முருகன் தனக்குக் குருவாய் வரவேணும் என வேண்டிக்கொள்ளும் பாடலோடு முடிகிறது.

முடியும் பாடல்கள்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே - பாடல் எண் 51

ஒருகால் அடியேன் மனம் உன்னை நினைத்து
உருகாது உருகும்படி தந்தருள்வாய்
பெருகு ஆழியிலும் துயிலும் பெருமாள்
மருகா முருகா மயில் வாகனனே. – பாடல் 51, தஞ்சை சரசுவதிமகால் ஏடு.

கந்தரனு பூதிதன்னைக் கற்(று)உரைப்போர் தங்களிடம்
வந்தவினை அத்தனையும் மாயுமே – செந்தண்
திருத்தணியில் வாழ்முருகா சேயோர் அடியார்
கருத்தணியில் வாழ்ந்திருப்பர் காண்.

என்னும் வெண்பாவோடு இந்த நூலை முடிப்பாரும் உண்டு.

பேசா அனுபூதி பிறந்ததுவே (பாடல் 43) என்னும் பாடலோடு நூல் முடிகிறது என்றும், சும்மா இரு என்னும் வேண்டுகோளுடன் (பாடல் 12) நூல் முடிகிறது என்றும் கூறப்படும் கருத்துகளும் உண்டு.

  • இந்த நூலில் முருகனின் திருவுரு, ஊர்தி, படை, கொடி முதலானவை கூறப்படுகின்றன.
  • ஈதல் இந்த நூலில் வலியுறுத்தப்படுகிறது.
  • பாசத் தளையில் கலங்கிய நிலை, மனம் அமைதி பெற்றுத் தவத்தில் ஒன்றிய நிலை, முருகன் திருவருள் பெற்ற ஞானநிலை, உபதேச நிலை என்னும் நான்கு பிரிவுகளில் பாடல்கள் அமைந்துள்ளன.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=கந்தரனுபூதி&oldid=17540" இருந்து மீள்விக்கப்பட்டது