கண்மணி கிருஷ்ணன்
கண்மணி கிருஷ்ணன் (பி 1948) மலேசியாவில் ஒரு எழுத்தாளரும், வானொலிக் கலைஞருமாவார். ஆரம்பகாலங்களில் கட்டுரை, சிறுகதை, தொடர்கதை, குறுநாவல் என பல்துறைகளிலும் ஆர்வம் காட்டிவந்த இவர், வானொலிக் கலைஞராக மாறிய பின்பு வானொலி நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், புராதன இதிகாச நாடகங்களில் கூடிய ஆர்வத்தைக் காட்டிவந்தார். இவரது எழுத்து பணி தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கண்மணி கிருஷ்ணன் |
---|---|
பிறந்ததிகதி | 1948 |
அறியப்படுவது | எழுத்தாளர், வானொலிக் கலைஞர் |
இலக்கிய ஈடுபாடு
கற்கும் காலத்திலிருந்தே வாசிப்புத்துறையில் ஆர்வம் காட்டிவந்த இவரின் கன்னியாக்கம் ஒரு குறுங் கட்டுரையாக 1966 இல் வானொலியில் ஒலிபரப்பானது. அதைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான சுய ஆக்கங்களை இவர் எழுதியுள்ளார்.
தொழில்
மலேசியா வானொலியில 1972ம் ஆண்டில் இணைந்த இவர், மலேசியா வானொலி தமிழ்ப் பிரிவில் பல நிகழ்ச்சிகளில் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார். தற்போது சேவையிலிருந்து ஓய்வு பெற்று மலேசிய இந்து சங்கத்தில் சேவையாற்றி வருகிறார்.
மொழியாற்றல்
மலேசிய வானொலியில் கடமையாற்றிய காலகட்டங்களில் செய்திகளைத் தமிழாக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையினால் இவரது மொழிப்புலமை வளரலாயிற்று. தொடர்ந்து பல நாடகங்களையும் இவர் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
மேடை நாடகம்
இவரால் எழுதிய மூன்று மணிநேர மேடை நாடகம் 'இதய நாதம்' ஆகும். மறைந்த கலைஞர் மனு. இராமலிங்கம் தயாரிப்பில் இந்நாடகம் அரங்கேறியது. மலேசியாவில் மூன்று மணிநேர மேடை நாடகத்தை எழுதிய முதல் பெண்மணியாக இவர் விளங்குகின்றார்.
விருதுகளும், பரிசுகளும்
- 'சி.வி.குப்புசாமி விருது' - மலேசித் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- 'சிறந்த தொண்டுக்கான விருது' - சைவ சித்தாந்த மன்றம்
- 'சிறந்த பெண்' (தொக்கோ வானித்தா) - சிலாங்கூர் மாநில சுல்தானின் விருது
- 'சிறந்த பணியாளர்' விருது - மலேசியா வானொலி-தொலைக்காட்சி நிலையம்
- தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் வழங்கிய பரிசு
- பாரதிதாசன் நூற்றாண்டு விழா இலக்கிய போட்டி பரிசு