ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன்

ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் (1938-1965[1]) என்று அறியப்படும் ஆசிரியர் வீரப்பன், இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது தீக்குளித்து உயிர்விட்ட போராளி ஆவார்.

வாழ்க்கை

இவர் 1938இல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், குளித்தலை அருகே உள்ள ப. உடையாம்பட்டி என்னும் ஊரில் பிறந்தவர். 1952இல் ஈ.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றார். 1955இல் தன் அண்ணன் நல்லகருப்பன் முயற்சியால் ஆசிரியர் பயிற்சி முடித்து, ஹையர் கிரேடு ஆசிரியராகத் தேர்ச்சிபெற்று, வேலை பார்த்துக் கொண்டே செகண்டரி கிரேடு ஆசிரியர் தேர்ச்சி பெற்றார். 1962ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஊர்களில் ஆசிரியராகப் பணியாற்றியபின் க. ஐயம்பாளையத்தில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] பள்ளி நேரம் போகத் தன் தமிழ் மொழிப் புலமையை வளர்த்துக் கொள்ளவும், கரூர், திருச்சி, குளித்தலை போன்ற பகுதிகளில் நடக்கும் தி.மு.க பொதுக்கூட்டங்களுக்கும் சென்று வந்தார். இளைஞர்களை ஊக்குவித்து இளைஞர் மன்றங்களைத் தொடங்கச்செய்து திராவிட இயக்க ஏடுகளை இளைஞர்களைப் படிக்க வைத்து வந்தார். மாணவர்களுக்குத் தமிழின் பெருமையைப் பற்றிப் பாடங்களை நடத்தி வந்தார்.

இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம்

ஜனவரி 26, 1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை அமல்படுத்த நடுவணரசு தயாராகி வந்தது. தலைமையாசிரியரான வீரப்பனே மாணவர்களைத் திரட்டி இந்தி எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினார்.[3] இந்தித் திணிப்பை கண்டித்து பல்வேறு வகையில் இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த தியாகிகளின் செய்திகள் இதழ்களில் வந்தவண்ணம் இருந்தன. இந்தப் போர் முறை ஆசிரியர் வீரப்பனை என்னவோ செய்தது.

இந்தியைத் திணிக்க விரும்பும் அரசிடம் வேலை செய்யக்கூடாது என்று முடிவெடுத்து வீரப்பன், அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலம், பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்குக் கண்டனக் கடிதங்களும், அண்ணா, கலைஞர் போன்றோர்க்கு தமிழைக் காக்க முயற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் கடிதங்களும் எழுதி, அவற்றை 10.2.1965 அன்று அஞ்சலில் அனுப்பிவிட்டு அதைத் தன் நாட்குறிப்பில் எழுதினார்.

தீக்குளிப்பு

11.2.1965 அன்று தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு தன் உடையோடு மேலும் பல வேட்டிகளை உடம்பில் சுற்றி, மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீயிட்டுக் கொண்டார். தீயைக்கண்டு அணைக்க வந்தவர்களைப் பார்த்து, "என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள், தூக்க மாத்திரைகளையும் அதிகமாகச் சாப்பிட்டுள்ளேன் எனவே என்னைக் காப்பாற்ற முடியாது, என் நாட்குறிப்பில் எல்லாவற்றையும் எழுதியுள்ளேன்" என்று சத்தம் போட்டார். காக்கும் முயற்சி பலனின்றி இறந்தார்[4] அப்போது அவருக்கு வயது 27, திருமணம் செய்திருக்கவில்லை.

இதனையும் காண்க

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

மேற்கோள்கள்

  1. "ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும்?" (in ta). https://www.hindutamil.in/news/opinion/columns/30296-.html. 
  2. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம்,பக்கம்19
  3. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 20
  4. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 30

வெளி இணைப்புகள்