ஐசக் பாஷவிஸ் சிங்கர்

ஐசக் பாஷவிஸ் சிங்கர் (Isaac Bashevis Singer, இட்டிஷ்:צחק באַשעװיס זינגער) நோபல் பரிசு பெற்ற போலிய மரபு, யூத, அமெரிக்க எழுத்தாளராவார். இவர் சிறுகதை எழுதுவதில் புகழ்பெற்றவர். இட்டிஷ் இலக்கிய இயக்கத்தின் முதன்மை எழுத்தாளராவார். 1978-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

ஐசக் பாஷவிஸ் சிங்கர்
Isaac Bashevis Singer (Gotfryd).jpg
பிறப்புIzaak Zynger
(1902-11-21)நவம்பர் 21, 1902
லியோன்சின், பேராய போலந்து
இறப்புசூலை 24, 1991(1991-07-24) (அகவை 88)
சர்ஃப்சைட், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
தொழில்புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர்
மொழிஇத்திய மொழி
குடியுரிமைஅமெரிக்கர்
வகைபுனைக்கதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி மஜீசியன் ஆஃப் லூப்லின்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்துக்கான நோபல் பரிசு
1978
கையொப்பம்
Isaac Bashevis Singer signature.jpg
Isaac Bashevis Singer (1988)

வாழ்க்கை வரலாறு

இளம்பருவம்

ஐசக் பாஷவிஸ் சிங்கர் 1902-ஆம் ஆண்டு அன்றைய ருசியப் பேரரசின் பகுதியாக இருந்த போலந்தின், வார்சா நகரின் அருகிலிருந்த லியோன்சின் கிராமத்தில் பிறந்தார். சில ஆண்டுகள் கழித்து, அவரது குடும்பம் அருகிலிருந்த மற்றொரு நகரான ராட்சிமினுக்கு இடம்பெயர்ந்தது. (சில வேளைகளில் இந்த நகரமே அவரது பிறப்பிடமாக தவறாக குறிக்கப்படுவதும் உண்டு.) அவரது மிகச் சரியான பிறந்த தேதி அறியப்படவில்லை. எனினும் நவம்பர் 21, 1902 அவரது பிறந்த தினமாக குறிக்கப்படுகிறது. அந்த தினத்தையே அவர் தனது அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான பால் க்ரேஸ் என்பவரிடமும், அவரது உதவியாளரான டோரா தெலுஷ்கின்னிடமும் கொடுத்துள்ளார். மேலும் இத்தினமே அவரும் அவருடைய சகோதரரும் குறிப்பிடும் சிறுவயது நினைவுகளில், மற்ற வரலாற்று சம்பவங்களுடன் ஒத்து வருகின்றது.

அவரது தந்தை ஹசிதிக் ரப்பி. தாயார் பாத்செபா. உடன்பிறப்புகள்: அண்ணன்- இஸ்ரேல் ஜோஷ்வா சிங்கர்(1893–1944); அக்காள்- எஸ்தர் க்ரைத்மான் (1891–1954); மூவருமே எழுத்தாளர்கள். எஸ்தர் தான் அவர்கள் குடும்பத்தில் முதலில் கதைகள் எழுதத் தொடங்கியவர்.

1907-ஆம் ஆண்டு இவர்களின் குடும்பம் ராட்சிமினுக்கு குடிபெயர்ந்தது. அங்கே சிங்கரின் தந்தை யேஷிவா-வின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 1908-ஆம் ஆண்டு யேஷிவா எரிக்கப்பட்ட பின்னர் வார்சாவின் க்ரோச்மல்னா தெருவுக்கு குடிபெயர்ந்தனர். அவ்விடம் இட்டிஷ் மொழி பேசும் வறுமை சூழ்ந்த யூத மக்கள் நிரம்பிய பகுதியாகும். அங்குதான் சிங்கரின் இளமைப் பருவம் முழுதும் கழித்தார். அவர் தந்தை அங்கு ரப்பி-யாக செயல்பட்டார். அதாவது, நீதிபதியாகவும் மத நிருவாகியாகவும் தலைமை குருவாகவும் இருந்தார்.

முதல் உலகப் போர்

1917-ஆம் ஆண்டு முதல் உலகப் போரினால் குடும்பம் பிரிந்து போனது. தனது தாயார் மற்றும் தம்பியுடன், தாயின் சொந்த ஊரான பிள்கொராசுக்கு , சிங்கர் குடிபெயர்ந்தார். வழமையாக யூத இன மக்கள் செறிந்து வாழும் நகர் அதுவாகும். அங்கே அவர் தாயாரின் சகோதரர்கள், தங்கள் தந்தையைத் தொடர்ந்து ராப்பிக்கலாக செயல்பட்டுவந்தனர். 1921-ஆம் ஆண்டு சிங்கரின் தந்தை மீண்டும் கிராம ரப்பி ஆனதைத் தொடர்ந்து சிங்கர் வார்சாவுக்கு குடிபெயர்ந்தார். ஆனால், பள்ளியும் மதபோதக வாழ்க்கையும் தனக்கு ஒத்து வராது என்று மீண்டும் பிள்கொரசுக்கே திரும்பினார். அங்கு ஹீப்ரூ பாடம் சொல்லிக் கொடுத்து வருமானம் தேட ஆரம்பித்தார். அதுவும் ஒத்து வராததால் தனது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தார். சிங்கரின் அண்ணன் ஜோஷ்வா ஆசிரியராக இருந்த Literarische Bleter பத்திரிகைக்கு ஒப்பு நோக்கர் பணிக்கு சேர்த்து விட்டதால் மீண்டும் வார்சாவுக்கு திரும்பினார்.

அமெரிக்க வாழ்க்கை

1935-ஆம் ஆண்டு சிங்கர் போலந்திலிருந்து வெளியேறி அமெரிக்காவில் ஐக்கியமானார். அண்டை நாடான ஜெர்மனியில் வளர்ந்து வந்த நாஜி கட்சியும் அவர்களது யூத எதிர்ப்பு கோட்பாடுமே அவர் வெளியேற காரணமாகும். அவர் மனைவியும் (ரன்யா போன்ஸ்), மகனும் (இஸ்ரேல் சமீர்) மாஸ்கோவுக்கு சென்று தஞ்சம்புகுந்தனர். பின்னர் பாலஸ்த்தீனுக்கு இடம்பெயர்ந்தனர். (மூவரும் 1955-ஆம் ஆண்டு மீண்டும் சந்தித்தனர்.) சிங்கர் நியூ யார்க் நகரில் ஐக்கியமானார். அங்கு இட்டிஷ் மொழி செய்தித் தாளான த பார்வர்ட்-ல் பத்தி எழுத்தாளராகவும் பத்திரிக்கையாளராகவும் வேலைக்கு சேர்ந்தார். நம்பிக்கை தந்த தொடக்கத்துக்குப் பிறகு, சிறிது காலத்தில் மனச்சொர்வடைந்தார். அப்போதுதான் அவரது நாவலான "Lost In America"-வுக்கான கரு உதயமானது. 1938-ல் ஜெர்மானிய யூத அகதியான அல்மா வாச்சர்மானை சந்தித்தார். இருவரும் 1940-ல் மணம் புரிந்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு சிங்கர் தீவிரமான எழுத்துப் பணியைத் தொடங்கினார். த பார்வர்ட் பத்திரிக்கைக்கு எழுதும்போது பாஷெவிஸ், வார்ஷாவ்ச்கி, தி.சேகல் போன்ற புனை பெயர்களைப் பயன்படுத்தினார். மான்காட்டனின் உயர் மேற்குப் பகுதியில் பெல்நார்ட் எனுமிடத்தில் இருவரும் வாழ்ந்தனர்.

தொடர்ச்சியாக தாக்கிய வலிப்புகளால் சூலை 24, 1991-ல் புளோரிடாவின் சுர்ப்சிட் எனுமிடத்தில் சிங்கர் இயற்கை எய்தினார். எமர்சனிலுள்ள கீதர் பூங்கா மயானத்தில் அவர் புதைக்கப்பட்டார். அவரை நினைவு கூறும் விதமாக புளோரிடாவின் சுர்ப்சிட்-ல் ஒரு தெருவுக்கு அவர் பெயரிடப்பட்டது. மயாமி பல்கலைக்கழகத்தில் அவர் பெயரில் இளநிலைப் படிப்புக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது.

எழுத்து

சிங்கரின் முதல் பதிவுபெற்ற கதை 'இலக்கிய மாத்திரைகள்' பத்திரிகை ("literarishe bletter")-ன் இலக்கியப் போட்டியில் பரிசு பெற்றது. அதன் மூலம் சிங்கர், நம்பிக்கையூட்டும் திறமைசாலியாக அறிமுகமானார். அவரின் கருத்தியல் ஆக்க காலத்தின் சூழலின் பிரதிபலிப்பை அவரது பிற்கால படைப்புகளில் காணலாம். சிங்கரின் முதல் நாவலான "கோரேவின் சாத்தான்" க்லோபாஸ் எனும் இலக்கிய இதழில் தொடராக வெளிவந்தது. இந்த இதழ் அவரும் அவருடைய நீண்ட கால நண்பரும், இட்டிஷ் கவிஞருமான ஆரோன் செய்தலினும் சேர்ந்து 1935-ல் ஆரம்பித்ததாகும். அக்கதை 1648-ம் ஆண்டு கோரே(பிள்கொரேகு அருகிலுள்ளது) கிராமத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியதாகும். கொச்சாக்குகளின் கொடூரமான எழுச்சியால் அப்போது போலந்தின் யூத இன மக்கள் மூன்றில் இரண்டு பங்கினர் செத்துமடின்தனர். மேலும் அக்கதையில் பதினேழாம் நூற்றாண்டின் தவறான இறைத் தூதரக அடையாளப்படுத்தப்பட்ட 'சப்பாத்தை சவி'-யைப் பற்றிய நெடும் குறிப்புகளும் உள்ளன. அதன் கடைசி அத்தியாயத்தில் இடைக்கால இட்டிஷ் குறிப்புகளின் அடையாளம் தெரிகிறது. அப்பாவிகள் சூழலால் நெருக்கப்படுவதையும் நோருக்கப்படுவதையும் தெள்ளத் தெளிவாகக் காட்டிய அந்நாவல் வரப்போகும் பெரும் அபாயங்களை கோடிட்டுக் காட்டுகிறது. 1962-ல் வெளியான அவரது படைப்பான "அடிமை"-யில் 1648 நிகழ்வுகளின் பின்விளைவுகளை விவரிக்கிறார். அது ஒரு யூத இளைஞனுக்கும் யூதரல்லாத ஒருத்திக்குமான காதல் கதையாகும். அதில் பெரும் பாதிப்புக்குள்ளான, அழிவிலிருந்து தப்பிய மக்களின் நிலையை இன்னும் சிறந்த புரிதலோடு சுட்டிக் காட்டுகிறார்.

குடும்ப மசூதி

1945-ல் அவரது அண்ணனின் மறைவுக்குப் பிறகு மெய்யான, தீவிரமான எழுத்தாளராக உதயமானார். அண்ணனின் நினைவாக அவர் எழுதிய "குடும்ப மசூதி" எனும் நாவல் அவருக்கு இந்த உயர்வைத் தந்தது. அவருடைய தனித்துவமான நடை, அந்நாவலில் அவர் உபயோகித்த காட்சிகளின் தைரியமான திருப்புமுனைகள் கதைமாந்தர் சித்தரிப்புகள் மூலம் வெளிப்பட்டது. 1940-களில் அவரது பெயரும் புகழும் வளர்ந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர், இட்டிஷ் மொழி பேசும் மக்கள் விளிம்பு நிலை எண்ணிக்கைக்கு தள்ளப்பட்டனர். அதன் பின்னர், இட்டிஷ் இறந்து போன மொழியாகவே கருதப்படுகிறது. சிங்கர் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துவிட்ட போதிலும், இட்டிஷ் மொழியில் படிக்க விரும்பும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று திடமாக நம்பினார். 1979-ல் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறினார், "போலந்து வாழ் யூதர்கள் இறந்து போயிருக்கலாம். ஆனால், ஏதோவொன்று- ஆத்மாவென்றோ தெய்வமென்றோ கூறிக்கொள்ளுங்கள்- இந்த உலகில் இருப்பதாகத் தோன்றுகிறது. என்னை எழுதத் தூண்டுகிறது. அது ஒரு வித்தியாசமான அனுபவம். அனால், அது உண்மை என்றே நம்புகிறேன்."

சைவ உணவுமுறையும் விலங்குரிமைக் கருத்துகளும்

சிங்கர் தனது வாழ்க்கையின் கடைசி 35 ஆண்டுகள் ஒரு முக்கிய யூத சைவ உணவுமுறையைக் கடைபிடிப்பவராகத் திகழ்ந்தார்.[1] இவரது படைப்புகளில் விலங்குரிமை மற்றும் சைவக் கருப்பொருள்களைப் பரவலாகக் காண முடிகிறது. தி ஸ்லாட்டரர் (The Slaughterer) என்னும் தனது சிறுகதையில் ஒரு வதைகூடத் தொழிலாளியின் வேதனையை விவரித்திருந்தார். அதில் விலங்குகள் மீதான இரக்கத்தின் காரணமாக அத்தொழிலாளி அவற்றைக் கொல்லும் தனது செயலை மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் விதத்தை விவரித்திருந்தார். இறைச்சியை உட்கொள்வது என்பது அனைத்து மதங்களின் அனைத்து உன்னத இலட்சியங்களையும் ஒட்டுமொத்தமாக மறுப்பதற்குச் சமம் என்று கூறும் சிங்கர், "ஒரு அப்பாவி உயிரினத்தை கொன்று அதன் இரத்தத்தை சிந்த விட்ட பின்னர் நாம் எப்படி உரிமையைப் பற்றியும் நியாயத்தைப் பற்றியும் பேச முடியும்?" என்று வினவுகிறார். உடல் ஆரோக்கியத்திற்காக சைவ உணவு முறையை மேற்கொண்டீர்களா என்று கேட்டதற்கு, "கோழிகளின் [விலங்குகளின்] ஆரோக்கியத்திற்காக அதைச் செய்கிறேன்" என்று பதிலளித்தார்.

சிங்கரின் புதினமான எனிமீஸ், எ லவ் ஸ்டோரி (Enemies, a Love Story) கதையில் மீண்டும் மீண்டும் வரும் கருப்பொருளாக சைவ உணவுமுறையானது இருக்கும். அதில் யூதப் பெருமினவழிப்பில் உயிர் பிழைத்த ஒரு கதாபாத்திரம், "கடவுளே இறைச்சி உண்பவர் தான்—மனித இறைச்சி உட்பட. சைவ உணவு உண்பவர் என்று யாரும்—ஒருவர் கூட—இல்லை. நான் பார்த்ததை நீங்கள் பார்த்திருந்தால், கடவுள் புலைக்கொலையை ஏற்கிறார் என்பதை நீங்கள் உணர்வீர்கள்," என்று கூறும்.[2] அதற்கு மற்றொரு கதாபாத்திரம் "நாஜிக்கள் யூதர்களுக்கு என்ன செய்தார்களோ அதையேதான் மனிதகுலம் விலங்குகளுக்குச் செய்து கொண்டிருக்கிறது" என்று பதிலளிக்கும்.[3] தி லெட்டர் ரைட்டர் (The Letter Writer) புதினத்தில் சிங்கர் எழுதிய "[விலங்குகளைப்] பொருத்த வரை அனைத்து மனிதர்களும் நாஜிக்கள் தான்; விலங்குகளுக்கு இந்த உலகமானது ஒரு முடிவற்ற ட்ரெப்ளிங்கா [நாஜிக்களின் சித்திரவதை முகாம்],"[4] என்ற வரிகள் ஹோலோகாஸ்டு என்று அழைக்கப்படும் யூதப் பெருமினவழிப்புடன் விலங்குச் சுரண்டலை ஒப்பிடுவதன் நியாயத்தன்மை பற்றிய விவாதங்களில் சுட்டப்படும் ஒரு உன்னதமான குறிப்பாக மாறியது.[5]

ஸ்டீவன் ரோசனின் ஃபுட் ஃபார் ஸ்பிரிட்: வெஜிடேரியனிஸம் அண்டு தி வர்ல்டு ரிலிஜியன்ஸ் (Food for Spirit: Vegetarianism and the World Religions) என்ற 1986-ம் ஆண்டு புத்தகத்தின் முன்னுரையில் சிங்கர் இவ்வாறு கூறுகிறார்: "ஒரு மனிதன் உணவுக்காக ஒரு விலங்கைக் கொல்லும்போது, அவன் அங்கு நீதிக்கான தனது பசியைப் புறக்கணிக்கிறான். கடவுளிடம் கருணையை மன்றாடி வேண்டும் மனிதன் பிற உயிர்களுக்கு மட்டும் அதைத் தர மறுக்கிறான். பிறகு ஏன் மனிதன் கடவுளிடம் கருணையை எதிர்பார்க்க வேண்டும்? நீங்கள் கொடுக்க விரும்பாத ஒன்றை பிறரிடமிருந்து எதிர்பார்ப்பது அநியாயம். அது முரண்பாடானது. முரண்பாட்டையோ அநீதியையோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது கடவுளிடமிருந்தே வந்தாலும் கூட. 'நான் சைவ உணவுமுறைக்கு எதிரானவன்' என்று ஒரு குரல் கடவுளிடமிருந்து வந்தால் கூட 'என்னவாயினும் சரி, சைவ உணவுமுறையை நான் ஆதரவாக நிற்பேன்!' என்று நான் முழங்குவேன். இந்த விஷயத்தில் நான் அவ்வளவு உறுதியாக இருக்கிறேன்."

அரசியல் பார்வை

சிங்கர் தன்னை ஒரு "பழமைவாதி" என்று அழைத்துக் கொண்டார். மேலும் "எல்லா நேரங்களிலும் வெகுஜனங்களைப் புகழ்ந்து பேசுவதன் மூலம் மட்டுமே எதையும் சாதித்துவிட முடியும் என்று நம்புபவனல்ல நான்" என்று கூறினார்.[6] அவரது இத்திஷ் படைப்புகளிலும் பத்திரிகைகளிலும் அவரது பழமைவாதப் பக்கம் மிகவும் தெளிவாகக் காணமுடியும். அங்கு அவர் மார்க்சிய சமூக அரசியல் கருத்தாக்கங்களை வெளிப்படையாக எதிர்ப்பவராக இருந்தார்.[7][8]:137–138

வெளி இணைப்புகள்

  1. "Isaac Bashevis Singer (1904–1991)", History of Vegetarianism, IVU, archived from the original on December 22, 2008, பார்க்கப்பட்ட நாள் February 18, 2009.
  2. Singer, Isaac Bashevis (1972). Enemies, a Love Story. Noonday Press. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0374515220.
  3. Singer, Isaac Bashevis (1972). Enemies, a Love Story. Noonday Press. p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0374515220.
  4. Singer 1982, ப. 271.
  5. Patterson, Charles (2002). Eternal Treblinka: Our Treatment of Animals and the Holocaust. New York: Lantern Books, pp. 181–188.
  6. Burgin, Richard; Singer, Isaac Bashevis (Spring 1980), "A Conversation with Isaac Bashevis Singer", Chicago Review, 31 (4): 57, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/25304019, JSTOR 25304019
  7. "Singer, Isaac Bashevis", The YIVO Encyclopedia of Jews in Eastern Europe.
  8. Hadda, Janet (1997), Isaac Bashevis Singer: A Life, New York: Oxford University Press
"https://tamilar.wiki/index.php?title=ஐசக்_பாஷவிஸ்_சிங்கர்&oldid=19496" இருந்து மீள்விக்கப்பட்டது