எல். ஆர். ஈசுவரி

எல். ஆர். ஈசுவரி (பிறப்பு: திசம்பர் 7, 1939) என்பவர் தமிழ்நாட்டின் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.[சான்று தேவை]

எல். ஆர். ஈசுவரி
LR Eswari.png
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்லூர்துமேரி இராஜேஸ்வரி
பிறப்பு7 திசம்பர் 1939 (1939-12-07) (அகவை 84)
சென்னை, தமிழ்நாடு
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1954-இன்று

வாழ்க்கைச் சுருக்கம்

பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகிய பெற்றோருக்கு சென்னையில் பிறந்தார் லூர்து மேரி ஈசுவரி. இவரது தாயார் எம். ஆர். நிர்மலா, ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் "லூர்துமேரி ராஜேஸ்வரி". எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு.

திரையுலகில்

மனோகரா (1954) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் "இன்ப நாளிலே இதயம் பாடுதே" என்ற பாடலை ஜிக்கி குழுவினர் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார்.[1] அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார். முதன் முதலில் தனியாகப் பாடும் சந்தர்ப்பம் நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) திரைப்படத்துக்காக கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே அவரே தான் இவரே என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதல் பாடலாகும்.

1961 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய வாராயோ தோழி வாராயோ என்ற பாடல் இவருக்கு பரவலான புகழைத் தேடித் தந்த பாடல். இது இன்றும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும். "எலந்தைப் பழம்", முத்துக்குளிக்க வாரியளா, தட்டட்டும் கை தழுவட்டும், நதியே மதுவானால், பத்து பதினாறு முத்தம் முத்தம், பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, குடிமகனே பெரும் குடிமகனே, அதிசய உலகம் ரகசிய இதயம் போன்ற பாடல்கள் இவருக்குப் பரவலான புகழைத் தேடித்தந்த ஏனைய பாடல்கள்.

மேற்கோள்கள்

உசாத்துணை

  • வானொலி மஞ்சரி, நவம்பர் 1999, கொழும்பு
"https://tamilar.wiki/index.php?title=எல்._ஆர்._ஈசுவரி&oldid=8757" இருந்து மீள்விக்கப்பட்டது