எம். வை. எம். மீஆது

எஸ்.எச். முஹம்மது ஜெமீல் (பிறப்பு: நவம்பர் 21, 1940) ஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், கல்விமானும், ஆய்வாளருமாவார்.

எம். வை. எம். மீஆது
இயற்பெயர்/
அறியும் பெயர்
எஸ்.எச். முஹம்மது ஜெமீல்
பிறந்ததிகதி நவம்பர் 21, 1940
பிறந்தஇடம் சாய்ந்தமருது, கல்முனை
பணியகம் அரசுப்பணி
பெற்றோர் சாகுல் ஹமீத், முக்குலத் உம்மா

வாழ்க்கைக் குறிப்பு

சாகுல் ஹமீத், முக்குலத் உம்மா தம்பதியினரின் புதல்வராக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது எனும் ஊரில் பிறந்த எஸ்.எச். முஹம்மது ஜெமீல் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம், கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி, கொழும்பு சாஹிரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பாடத்தில் சிறப்புப் பட்டமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறை முதுமாணிப் பட்டமும் பெற்றார். அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை டிப்ளோமா பட்டமும், ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை சார் பயிற்சியையும், பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பான கல்வியையும் பெற்றுக் கொண்டார்.

வகித்த பதவிகள்

தொழில் ரீதியாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் போதனாசிரியராகவும், 'அருணாசலம் ஹோல்' உதவி விடுதிக் காப்பாளராகவும் பணியாற்றிய பின்பு படிப்படியாக உயர் பதவிகளை வகிக்கலானார். கல்லூரி ஆசிரியராக, அதிபராக, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபராக, வட்டாரக் கல்வி அதிகாரியாக, பிரதம கல்வி அதிகாரியாக, பரீட்சைத் திணைக்கள உதவி ஆணையாளராக, மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளராக, முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் செயலாளராக, கல்வி, கலாசார விவகாரங்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக, கலாசார, சமய விவகார அமைச்சின் ஆலோசகராக.... இப்படிப் பல்வேறு உயர் பதவிகளை வகித்துத் தற்போது ஓய்வுபெற்றுள்ளார். இவர் சித்தி ஆரிபாவின் கணவராவார். இத்தம்பதியினரின் மகன் முஹம்மது நசீல்.

இலக்கிய ஈடுபாடு

இவரது முதல் ஆக்கம் 'எனது ஊர்' எனும் தலைப்பில் 'தினகரன் ஞாயிறு பாலர் கழகப் பகுதியில்' 1949 இல் வெளிவந்தது. இலக்கியம், வரலாறு, கல்வி, நாட்டுப்புறப் பண்பாட்டியல் எனும் துறைகளிலான ஆய்வு முயற்சிகள் வலுப்பெற்று இன்றுவரை 25 நூல்களை எழுதியுள்ளார். சுமார் 110 ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. 50 நூல்களுக்கான பதிப்புரை, மதிப்புரை, சிறப்புரை வழங்கப்பட்டுள்ளன. வானொலியில் (பிறநாடுகளுட்பட) 130 பேச்சுக்கள், கலந்துரையாடல்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றிலும், தொலைக்காட்சியில் 10 நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். தினகரன், வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, நவமணி, தினக்குரல், மணிக்குரல், அல்இஸ்லாம், ஸாஹிரா, மித்திரன், அல் அரப், வளர்மதி, டெயிலிநியூஸ், ஒப்சேவர், எக்கோனோமிக்ஸ் டைம்ஸ் ஆகிய பத்திரிகை, சஞ்சிகைகளிலும் அவ்வப்போது வெளியிடப்படும் விசேட மலர்களிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் அக்கல்லூரி பல புதிய இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டது. மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்ப்பதற்காக 1976 இல் ஆரம்பிக்கப்பட்ட 'ஸாஹிரா' மாதாந்தப் பத்திரிகை கிரமமாகப் பல ஆண்டுகள் வெளிவந்து, இன்றுவரை இடைக்கிடையேயாவது வந்து கொண்டிருக்கிறது. 1983இல் இவரது ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட 'இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தால்' 1986இல் வெளியிடப்பட்ட 'எழுவான் கதிர்கள்'முக்கியதொரு தொகுப்பாகும். 1990களில் கிழக்கிலேற்பட்ட வன்முறைச் சூழலானது பணியகத்தின் சேவைகளை முடக்கிவிட்டது. இருந்தபோதிலும் 2000ம் ஆண்டுவரை 21நூல்களை அது வெளியிட்டுள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.

முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராகவும் பின்னர் ஆலோசகராகவும் கடமையாற்றிய 11 வருட காலத்தில் இவ்வமைச்சு பெருந்தொகையான நூல்களையும், மலர்களையும் வெளியிட்டதிலும் பலரது நூல்களைப் பதிப்பித்ததிலும் எழுத்தாளர் மற்றும் கலைஞர் ஊக்குவிப்பிலும் பெரும் பங்கு வகித்தார். இவற்றுள் மிக முக்கியமானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினை ஆய்வுசெய்து, ஆவணப்படுத்தி, மாவட்டரீதியான நூல்களை வெளியிட்டமையாகும். இதற்காகப் பல அறிஞர்களின் உதவிகள் பெறப்பட்டன. இவ்வாறு களுத்துறை, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, மாத்தறை, அம்பாறை, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்ட வரலாற்று நூல்கள், 1992-2000 ஆண்டு காலப் பகுதியில் வெளிவந்தன.

எழுதிய நூல்கள்

எஸ்.எச்.எம்.ஜெமீலின் நூல்கள் பின்வருமாறு:

  • எ.எம்.எ.அஸீஸ் அவர்களின் கல்விச் சிந்தனைகளும், பங்களிப்பும் (1980)
  • சேர். ராஸிக் பரீத் அவர்களின் கல்விப்பணி (1984)
  • சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வரலாறு (1989)
  • கல்விச் சிந்தனைகள் (1990)
  • நினைவில் நால்வர் (1993)
  • கலாநிதி ஜாயாவின் கல்விப் பணிகள் (1994)
  • சுவடி ஆற்றுப்படை - முதலாம் பாகம் (1994)
  • சுவடி ஆற்றுப்படை - இரண்டாம் பாகம் (1995)
  • கிராமத்து இதயம் - நாட்டார் பாடல்கள் (1995)
  • இஸ்லாமியக் கல்வி (1996)
  • கல்விச் சிந்தனைகள் - இரண்டாம் பதிப்பு (1996)
  • சுவடி ஆற்றுப்படை - மூன்றாம் பாகம் (1997)
  • கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதின் கல்விப் பணிகள் (1997)
  • காலச் சுவடுகள் (1998)
  • நமது முதுசம் (2000)
  • சுவடி ஆற்றுப்படை - நான்காம் பாகம் (2001)

மொழிபெயர்ப்புகள்

  • பொது நிதியியல் (1966)
  • துவான் புர்ஹானுத்தீன் ஜாயா (1990)

தொகுப்புக்கள், பதிப்புகள்

  • அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் (1992)
  • அல்லாமா எம்.எம். உவைஸ் (1994)
  • அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் (1997)
  • கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் (1998)
  • Islam in Independent Sri Lanka (1998)
  • Sri Lanka Udana (1998)
  • புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் (1999)

விருதுகளும், கௌரவங்களும்

  • இலக்கிய ஆய்வுக்கான சாகித்திய மண்டல விருது (1995)
  • வடக்கு-கிழக்கு மாகாணசபை - இலக்கியப் பரிசு (1995)
  • ஈராக்கில், பக்தாத் நகரில் அரபு நாடுகளின் ஆசிரியர் சம்மேளனம் கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (1980)
  • இந்தியாவில் நடைபெற்ற 6-வது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக மாநாட்டில் 'தமிழ்மாமணி' பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1998)
  • திருச்சி (இந்தியா) M.I.E.T. கல்லூரியில் பொன்னாடை போர்த்தியும், ஞாபகச் சின்னம் வழங்கியும் கௌரவித்தமை (1995)
  • மலேசியா, கோலாலம்பூரில் இயங்கும் கவிதாமாலை இயக்கம் 'தமிழ் அருவி| பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1999)
  • அட்டாளைச்சேனை தேசியமீலாத் விழாவின் போது 'நஜ்முல் உலூம்' பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1997)
  • 'சாமஸ்ரீ' விருது (1999)
  • சிந்தனைவட்டம், மலையக கலை கலாசார ஒன்றியம் இணைந்து கண்டியில் 'இரத்தினதீப' விருது வழங்கிக் கௌரவித்தமை (2000)
  • கொழும்பு தமிழ்ச்சங்கத்தினால் கேடயம் வழங்கி, பொன்னாடை போர்த்திக் கௌரவித்தமை (1999)
  • அம்பாறை மாவட்டக் கரையோர ஊடகவியலாளர் சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (2000)
  • ப்ரிய நிலா கலை, இலக்கிய சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (2001)
  • அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் கௌரவம் (1998)

கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் கௌரவம் (2002)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._வை._எம்._மீஆது&oldid=15274" இருந்து மீள்விக்கப்பட்டது