எம். எஸ். திரௌபதி

எம். எஸ். திரௌபதி தமிழ்த் திரைப்பட, மேடை நாடக நடிகையாவார். இவர் தனது எட்டு வயதில் ஸ்ரீ பால சண்முகானந்த சபா எனும் நாடகக் குழுவில் நடிகையாகச் சேர்ந்து தனது கலையுலகப் பங்களிப்பினை ஆரம்பித்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

 
குமாஸ்தாவின் பெண் திரைப்படத்தில் எம். வி. ராஜம்மா மற்றும் எம். எஸ். திரௌபதி

எம். எஸ். திரௌபதி தமிழ்நாடு மேட்டுப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தை சின்னசாமி செட்டியார் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த கன்னட தேவாங்கச் செட்டியார் மரபைச் சேர்ந்தவர். இவருடன் கூடப் பிறந்தவர்கள் நால்வர். மேல்நாட்டுத் துணிகள் மலிவான விலைக்குக் கிடைத்து வந்த காலம், இதனால் பல குடும்பங்கள் வறுமையில் வாழ வேண்டியிருந்தது. அந்த நிலையிலேயே திரௌபதியின் குடும்பமும் இருந்தது.[2]

திரௌபதிக்கு இளமையிலேயே இசையில் நாட்டம் அதிகமிருந்ததால், குப்புசாமி பாகவதர் என்பவரிடம் கருநாடக இசை பயின்றார். 1938 ஆம் ஆண்டில் டி. கே. எஸ் சகோதரர்களின் மதுரை பால சண்முகானந்த சபா நாடகக் குழு திருப்பூர் கெஜலட்சுமி அரங்கில் முகாமிட்டு நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தனர். அந்நாடகக் குழுவில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் ராஜநாயகம் என்பவரின் சிபாரிசில் திரௌபதி தனது பத்தாவது வயதில் அந்நாடகக் குழுவில் சேர்ந்தார்.[2] இக்குழுவில் சில மாதங்கள் பயிற்சி எடுத்த பின்னர் மேடையில் தோன்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. முதலில் இவர் சிறிய வேடங்களில் தோன்றி நடித்தார். அதன் பின்னர் 'சதி அனுசூயா'வில் சரசுவதியாகவும், 'அபிமன்யு சுந்தரி'யில் சுந்தரி வேடத்திலும், 'பம்பாய் மெயி'லில் நாகரத்தினமாகவும் நடித்துப் புகழ் பெற்றார். 'சம்பூர்ண ராமாயணம்' நாடகத்தில் மாயா சூர்ப்பனகையாகத் தோன்றி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். தொடர்ந்து 'முள்ளில் ரோஜா', ஜீவாவின் 'உயிரோவியம்' போன்ற பல நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்.[2]

திரைப்படங்களில் நடிப்பு

பி. என். ராவின் இயக்கத்தில் டி. கே. எஸ். சகோதரர்கள் மூர்த்தி பிக்சர்சின் கூட்டுத் தயாரிப்பில் வெளியான குமாஸ்தாவின் பெண் (1941) திரைப்படத்தில் குமாஸ்தாவின் இரண்டாம் பெண் சரசாவாக முதன் முதலில் நடித்தார். டிகேஎஸ் சகோதரர்களும் சேலம் சண்முகா பிலிம்சும் இணைந்து தயாரித்த பில்ஹணனில் (1948) கதாநாயகி யாமினியாகத் தோன்றி நடித்தார்.[2]

குடும்பம்

திரௌபதி 1942 ஆம் ஆண்டில் தனது தாய்மாமன் பெரியசாமி என்பவரை திருமணம் புரிந்து கொண்டார். பெரியசாமி டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் ஒப்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.[2]

நடித்த திரைப்படங்களின் பட்டியல்

  1. குமாஸ்தாவின் பெண் (1941)
  2. பில்ஹணன் (1948)
  3. வாழ்க்கை (1949)
  4. திகம்பர சாமியார் (1950)[3]
  5. அந்தமான் கைதி (1952) - ஏழை பணிப்பெண் கதைப்பாத்திரத்தில் நடித்தார்.[4]
  6. வேலைக்காரன் (1952)
  7. பசியின் கொடுமை (1952)
  8. உலகம் (1953)
  9. உலகம் (1953)
  10. இன்ஸ்பெக்டர் (1953)
  11. புதுயுகம் (1954)
  12. ரத்த பாசம் (1954) - துயரங்களை அனுபவிக்கும் மனைவி கதைப்பாத்திரத்தில் நடித்தார்.[5]
  13. ஆரவல்லி (1957)
  14. சௌபாக்கியவதி (1957)
  15. அதிசயப் பெண் (1959)

மேற்கோள்கள்

  1. டி. கே. சண்முகம் (1967). "நாடகக் கலை". நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லிமிடெட். http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0394.html. பார்த்த நாள்: 11 அக்டோபர் 2016. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 வி. ராமராவ் (மே 1949). "எம். எஸ். திரௌபதி". பேசும் படம்: பக்: 18-31. 
  3. ராண்டார் கை (31 அக்டோபர் 2008). "Digambara Saamiyar 1950". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Digambara-Saamiyar-1950/article3023505.ece. பார்த்த நாள்: 11 அக்டோபர் 2016. 
  4. ராண்டார் கை (15 மே 2009). "Andhaman Kaithi 1952". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/andhaman-kaithi-1952/article3021487.ece. பார்த்த நாள்: 11 அக்டோபர் 2016. 
  5. ராண்டார் கை (13 ஏப்ரல் 2013). "Rattha Paasam 1954". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/rattha-paasam-1954/article4614031.ece. பார்த்த நாள்: 11 அக்டோபர் 2016. 

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._எஸ்._திரௌபதி&oldid=22467" இருந்து மீள்விக்கப்பட்டது