எம். எஸ். உதயமூர்த்தி
எம். எஸ். உதயமூர்த்தி என்னும் மயிலாடுதுறை சி. உதயமூர்த்தி (85 அகவைகள், இறப்பு: சனவரி 21, 2013)[1] தமிழக எழுத்தாளரும், தொழிலதிபரும், மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார். ‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை எழுதியவர். 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய பின், இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர். இவர் எழுதிய "என்னைச் செதுக்கிய எண்ணங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ்க்கலைகள், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறது.
பிறப்பு
இவர் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் கிராமத்தில் பிறந்தார்.
கல்வி
மயிலாடுதுறையில் பள்ளிப்படிப்பை முடித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேதியியலில் பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வேதியியலில் மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
பணி
சீர்காழி சபாநாயகர் உயர்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கும்பகோணம் கல்லூரியிலும் கிண்டி பொறியியல் கல்லூரியிலும் வேதியியல் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அமெரிக்காவில் உள்ள மவுண்ட் செனாரியோ கல்லூரி, மின்னசோட்டா, ஐடகோ பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன்பின்னர் விஸ்கான்சினில் உள்ள உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தலைமை நிர்வாகியாக நான்காண்டுகள் பணியாற்றினார்.
தொழில் முனைவு
1982ஆம் ஆண்டில் பார்க்கிளே கெமிக்கல்ஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். அதனை 1987ஆம் ஆண்டில் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியா திரும்பினார்.
குடும்பம்
இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவியும் சித்தார்த்தன்,அசோகன்,ஆகிய மகன்களும் கமலா என்ற மகளும் உள்ளனர்.
மக்கள் சக்தி இயக்கம்
1987ஆம் ஆண்டில் மக்கள் சக்தி இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
எழுதிய நூல்கள்
- எண்ணங்கள் (சனவரி 1976)
- மனம் பிரார்த்தனை மந்திரம்
- தலைவன் ஒரு சிந்தனை
- உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்
- பிரச்சனைகளுக்கு முடிவு காண்பது எப்படி?
- ஆத்ம தரிசனம்
- தட்டுங்கள் திறக்கப்படும்
- நாடு எங்கே செல்கிறது?
- நீதான் தம்பி முதலமைச்சர்
- சிந்தனை தொழில் செல்வம்
- மனித உறவுகள்
- நெஞ்சமே அஞ்சாதே நீ
- தன்னம்பிக்கையும் உயர்தர்ம நெறிகளும்
- ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்
- வெற்றிக்கு முதற்படி
- உலகால் அறியப்படாத ரகசியம்
- சாதனைக்கோர் பாதை
- சொந்தக் காலில் நில்
- வெற்றி மனோபாவம்
- கிழக்கே சூரியன் உதிக்கின்றான் (நீள்கதை); மணியன் மாத இதழ்
விருதுகள்
- கம்பன் புகழ் விருது, 2003 வழங்கியது: கொழும்புக் கம்பன் கழகம், இலங்கை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி? டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி