எனக்குள் ஒருவன் (2015 திரைப்படம்)

எனக்குள் ஒருவன் (Enakkul Oruvan (English: A Man Within Me) என்பது 2015 ஆண்டைய இந்திய தமிழ் மனோதத்துவ திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரசாத் இராமர் இயக்க, சி. வி. குமார் தயாரித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் 2013 ஆண்டு கன்னடத்தில் பவன் குமார் இயக்கத்தில் வெளிவந்த லூசியா படத்தின் மறு ஆக்கம் ஆகும். இந்தப் படத்தில் சித்தார்த் மற்றும் தீபா சன்னிதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2015 மார்ச் 6, அன்று வெளியிடப்பட்டது. தெலுங்கு மொழியில் நாலொ ஒக்கடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

எனக்குள் ஒருவன்
இயக்கம்பிரசாத் ராமர்
தயாரிப்புசி. வி. குமார்
கதைபவன் குமார்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புசித்தார்த்
தீபா சன்னிதி
சிருஷ்டி டங்கே
ஒளிப்பதிவுகோபி அமர்நாத்
படத்தொகுப்புலியோ ஜான் பவுல்
கலையகம்திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்
விநியோகம்வை நொட் ஸ்டூடியோஸ்
ரேடியன்ஸ் மீடியா குரூப்ஸ்
அபி டிசிஎஸ் ஸ்டுடியோஸ்
டிரீம் பேக்டரி
வெளியீடு6 மார்ச்சு 2015 (2015-03-06)
ஓட்டம்136நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

சென்னையில் ஒரு பழமையான திரையரங்கை நடத்திவருகிறார் துரையண்ணன் (ஆடுகளம் நரேன்). இந்நத் திரையரங்கில் வேலை பார்ப்பார்க்கும் சுமாரான தோற்றமுடைய ஏழைத் தொழிலாளி விக்னேஷ் (சித்தார்த்). தன் நண்பர்களுடன் தங்கியுள்ள விக்னேஷ் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார். விக்னேசுக்கு தூக்கம் வராத‍து மட்டும் பிரச்சனை அல்ல எப்படியாவது பெரிய ஆளாகவேண்டும் என்ற மன ஏக்கமும் பிரச்சனையாக உள்ளது. இதனால் இரவில் தேனீர் கடைக்குச் செல்லும் விக்னேசுக்கு ஒருவர் அறிமுகமாகிறார். அவர் விக்னேசுக்கு ஜான் விஜையை அறிமுகப்படுத்துகிறார். அவருக்கு விஜய் மூலமாக லூசியா என்னும் மாத்திரை கிடைக்கிறது. இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் நல்ல தூக்கம்வரும், அதோடு நிஜத்தில் நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அதேபோல வாழ்வதாக கனவு வரும். தூங்கி விழித்த‍தும் உண்மையான வாழ்க்கைக்குத் திரும்பவேண்டிவரும். மீண்டும் தூங்கும்போது கனவில் நேற்றைய கனவின் தொடர்ச்சி வரும் என ஜான் கூறுகிறார். அந்த அதிசய மாத்திரையை உண்டு கனவில் பிரபலமான நடிகர் விக்னேஷாக வலம் வருகிறார். விக்னேஷின் நிஜவாழ்கையில் வருபவர்கள் கனவிலும் வருகின்றனர். திரையரங்கில் வேலை பார்க்கும் விக்னேஷுக்குக் காதல் வருகிறது. நிஜத்தில் சித்தார்த் காதலிக்கும் தீபா சன்னிதியே, கனவிலும் காதலியாக வருகிறார். யதார்த்தக் காதலில், சில பிரச்னைகள்; கனவுக் காதலிலும் சில பிரச்னைகள்.

இப்படிப் பல விதங்களில் ஒன்றுபோலவும் சில நுட்பமான வித்தியாசங்களுடனும் பயணிக்கும் இந்தக் கனவு நனவுப் பயணங்கள் ஒரு கட்டத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. இந்த மாய விளையாட்டு இறுதியில் என்னவாகிறது என்பதே மீதிக்கதை.

தயாரிப்பு

2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்னடத் திரைப்படமான லூசியாவின் (2013) தமிழ் மறு ஆக்க உரிமையை தயாரிப்பாளர் சி. வி. குமார் அவரது தொழில்நுட்பக் குழுவினரின் பரிந்துரையை ஏற்று வாங்கினார்.[1] மூலப் படத்தின் இயக்குனரான பவன் குமார், படத்தின் முன் தயாரிப்புப் பணிகளைச் செய்தார், மேலும் புதிய இயக்குனர் திரைக்கதையை புரிந்துகொள்ளவும் உதவினார். படத்தின் முன்னணி பாத்திரத்தில் நடிக்க நடிகர் பாபி சிம்ஹாவுடன் தயாரிப்புக் குழு துவக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் இறுதியில் அவர் கைவிடப்பட்டார்.[2] திசம்பர் மாதத் துவக்கத்தில், சி. வி. குமார் இந்த படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடிப்பதற்கு சித்தார்த்திடம் ஓப்புதல் பெற்றார். அதே சமயம் பீட்சாவின் இணை எழுத்தாளரான பிரசாத் ராமர் இப்படத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[3][4]

திரைப்படத்தின் முதன்மைப் படப்பிடிப்பு 2014 பெப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கியது [5] மற்றும் கன்னட நடிகை தீபா சன்னிதி முன்னணி பெண் பாத்திரத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.[6] பெங்களூரைச் சேர்ந்த அமித் பார்கவ் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்க கையெழுத்திட்டார்.[7] 2014 செப்டம்பரில், லூசியா என்ற பெயரில் தொடங்கப்பட்ட படமானது, 1984 ஆண்டு வெளியான படமான எனக்குள் ஒருவன் படத்தின் பெயரே இடப்பட்டது.[8][9]

வெளியீடு

படத்தின் செயற்கைகோள் உரிமையானது ஜீ தமிழ் அலைவரிசைக்கு விற்கப்பட்டது.[10]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்