ஊரன் அடிகள்
ஊரன் அடிகள் (22 மே 1933 – 13 சூலை 2022) சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அற நிறுவனக் காவலர் முதலிய பன்முகச் சிறப்புப் படைத்தவர்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஊரன் அடிகள் |
---|---|
பிறப்புபெயர் | குப்புசாமி |
பிறந்ததிகதி | 22 மே 1933 |
பிறந்தஇடம் | திருச்சிராப்பள்ளி |
இறப்பு | சூலை 13, 2022 | (அகவை 89)
அறியப்படுவது | சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர் |
பெற்றோர் | இராமசாமிப் பிள்ளை, நாகரத்தினம் அம்மாள் |
வாழ்க்கைக் குறிப்பு
திருச்சிராப்பள்ளி சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் ஊரன் அடிகள் பிறந்தார். 1955 முதல் பன்னிரண்டு ஆண்டுகாலம் திருவரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியாற்றினார். தமது இருபத்திரண்டாம் வயதில் "சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்" நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். துறவு மேற்கொண்டார். 23.5.1968 அன்று வடலூரே இவரது வாழ்விடமாக மாறியது. 1970 ஆம் ஆண்டு முதலாக வடலூரில் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலராக தமது பணியைத் துவக்கி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக அருந் தொண்டாற்றியவர்.
எழுதிய நூல்கள்
நூல்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். அவற்றில் சில வருமாறு:
சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்
- வடலூர் வரலாறு, 1967
- இராமலிங்கரும் தமிழும், 1967
- பாடல்பெற்ற திருத்தலத்து இறைவன் இறைவி போற்றித் திருப்பெயர்கள்,1969
- புள்ளிருக்கு வேளூரில் வள்ளலார், 1969
- இராமலிங்க அடிகளின் சிதம்பர அனுபவங்கள், 1969
- இராமலிங்க அடிகள் வரலாறு (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்), 1971
- வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களின் வரலாறு, 1972
- இராமலிங்க அடிகளின் வரலாறு, கொள்கைகள், பாடல்கள், 1973
- இராமலிங்க அடிகள் – ஒரு கையேடு (இராமலிங்க அடிகள் சித்தி நூற்றாண்டு விழா மலர்), 1974
- வள்ளலார் மறைந்தது எப்படி ? (சாகாக்கலை ஆராய்ச்சி), 1976
- வள்ளலார் கண்ட முருகன், 1978
- வள்ளலார் வாக்கில் ஓங்காரமும் பஞ்சாக்கரமும், 1979
- வள்ளுவரும் வள்ளலாரும், 1980
- வடலூர் ஓர் அறிமுகம், 1982
- சைவ ஆதீனங்கள், 2002
- வீர சைவ ஆதீனங்கள், 2009
பதிப்பித்த நூல்கள்
- இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள் – ச.மு. கந்தசாமி பிள்ளை, 1970
- இராமலிங்க சுவாமிகள் சரிதம் (செய்யுள்) – பண்டிதை அசலாம்பிகை அம்மையார், 1970
- திரு அருட்பா ஆறு திருமுறைகளும் சேர்ந்தது, 1972
- திரு அருட்பா (உரைநடைப்பகுதி), 1978
- திரு அருட்பாத் திரட்டு, 1982
- வள்ளுவரும் வள்ளலாரும், 2006
- திருமூலரும் வள்ளலாரும், 2006
- சம்பந்தரும் வள்ளலாரும், 2006
- அப்பரும் வள்ளலாரும், 2006
- சுந்தரரும் வள்ளலாரும், 2006
- தாயுமானவரும் வள்ளலாரும், 2006
- வள்ளலாரும் காந்தி அடிகளும், 2006
திருஅருட்பா ஆறு திருமுறைகளையும் நன்கு ஆராய்ந்து கால முறைப்படி பகுத்து செம்மைப்படுத்தியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, திரு அருட்பா திரட்டு ஆகியவற்றைச் செம்பதிப்புகளாகப் பதிப்பித்து வெளியிட்டார். தமிழகத்தின் பல்கலைக்கழகங்களாகிய அண்ணாமலை, சென்னை, அழகப்பா முதலியவைகளில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பல ஆற்றியுள்ளார்.
சைவ சித்தாந்த பெருமன்றத்தில் இவர் வள்ளலார் தொடர்பாக ஆற்றிய உரைத் தொடர் நூல் வடிவம் கண்டுள்ளது. இமயம் முதல் குமரி வரை பலமுறை யாத்திரை செய்துள்ள ஊரன் அடிகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ், பிரான்ஸ், பிரித்தானியா, ஜெர்மனி, குவைத், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தவர். தமிழகத் துறவியர் பேரவையின் துணைத் தலைவராக விளங்குகின்றார்.
மறைவு
ஊரன் அடிகளார் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2022 சூலை 13 நள்ளிரவில் தனது 89-ஆவது அகவையில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
- ↑ வள்ளலார் பெருந்தொண்டர் தவத்திரு ஊரன் அடிகள் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் பரணிடப்பட்டது 2022-07-14 at the வந்தவழி இயந்திரம், தினகரன், சூலை 14 2022