இ. இரத்தினம்

இ. இரத்தினம்
E. Rathinam.jpg
முழுப்பெயர் இளையதம்பி
இரத்தினம்
பிறப்பு 17-08-1916
பிறந்த இடம் இணுவில்,
யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது கலைஞர்,
எழுத்தாளர்,
மொழிபெயர்ப்பாளர்
மறைவு 21-03-1981
தொழில் மொழிபெயர்ப்பாளர்
பெற்றோர் இளையதம்பி,
இராசம்மா
வாழ்க்கைத் ஞானம்,
துணை இரத்தினம்

இ. இரத்தினம் (17 ஆகத்து 1916 - 21 மார்ச் 1981) ஈழத்துத் தமிழறிஞரும், மொழிபெயர்ப்பாளரும், கவிஞரும், கலைஞரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

இ. இரத்தினம் 1916 ஆகத்து 17 இல் யாழ்ப்பாணம், இணுவிலில் இளையதம்பி, இராசம்மா ஆகியோருக்குப் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். படிக்கும் போதே பொது வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மெட்ரிகுலேசன் படிப்பு முடிந்த பின்னர் இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறிதுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1937 இல் அரசப் பொது எழுத்தர் சேவை சோதனையில் தேர்ச்சி பெற்று கொழும்பு வருமான வரி அலுவலகத்தில் பணியில் அமர்ந்தார். பணியில் இருந்தவாறே தனிப்பட்ட முறையில் உயர்கல்வி கற்றார். இலண்டன் பல்கலைக்கழக இடைத்தர சோதனையில் தமிழ், சமற்கிருதம், மெய்யியல் பாடங்களை எடுத்து சித்தியடைந்தார். தொடர்ந்து தமிழ், பொருளாதாரம், மெய்யியல் ஆகிய பாடங்கள் படித்து இளங்கலைப் பட்டமும் பெற்றார்.[2]

வருமானவரித் திணைக்களத்தில் இருந்து குடிமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்திற்கு மாற்றம் பெற்றார். 1955 இல் சுயமொழித் திணைக்களத்தில் சேர்ந்தார். இங்கு பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். இத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கலைச்சொல்லாக்கப் பணிகளிலும் இவர் பெரும் பங்களித்துள்ளார். 1973 இல் அரச சேவையில் இருந்து இளைப்பாறினாலும், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கலைச்சொல்லாக்கக் குழுவில் தொடர்ந்து பணியாற்றினார். அதன் பின்னர் மார்க என்ற கல்விசார் நிறுவனத்தில் பகுதி நேர அலுவலராகச் சேர்ந்து சிறுவர்களுக்கான அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்யும் பணியில் 1981 இல் மார்ச் 21 இல் இறக்கும் வரை ஈடுபட்டிருந்தார்.[2]

கலைத்துறை

இரத்தினம் கவிதை, நாடகம், இசை நாடகம், நாட்டிய நாடகம் ஆகியவற்றில் பங்காற்றியுள்ளார். இவரது உரைச்சித்திரங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. பத்திரிகைகளில் இவரது கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்தன.[3] கவிஞர் முருகையனுடன் இணைந்து 'நோக்கு' என்ற பா ஏடு ஒன்றை மும்மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட்டு வந்தார்.[2] ஆஸ்கார் வைல்டு எழுதிய Duchess of Padwa கதையைத் தமிழில் பதியூர் ராணி என்ற பெயரில் இரத்தினம் எழுதிய நாடகத்தை சானா (சண்முகநாதன்) 1960 இல் நாடகமாகத் தயாரித்து மேடையேற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

ஆயுள்வேதக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய மருத்துவர் சாம்பசிவ ஐயரின் மகள் ஞானகலாம்பிகை என்பவரைக் காதலித்து 1952 இல் புரட்சித் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகன், கண்ணன் எனும் இரண்டு புதல்வர்கள் உள்ளனர்.[2] மனைவி திருமதி ஞானம் இரத்தினம் (இறப்பு: 26 மார்ச் 2022) இலங்கை வானொலி, தேசிய சேவையின் தமிழ்ப்பிரிவுத் தலைவராகவும், பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயல், நாடகப் பிரிவின் கட்டுப்பாட்டாளராகவும், பின்னர் தமிழ்ச்சேவை ஒன்றுக்குப் பொறுப்பான மேலதிக இயக்குநராகவும் பதவியில் இருந்தார். இலங்கையில் தேசிய தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பயிற்சிபெற்று, ரூபவாகினியின் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பான இயக்குநராகப் பணியாற்றினார்.[1][3]

வெளிவந்த நூல்கள்

  • புலவர் போற்றிசை - இவரது ஆசான் புலவர் சிவன் கருணாலய பாண்டியனாரின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட பாவாரம்
  • சத்திய விஞ்ஞானம் (சிவன் பாண்டியனாருடன் இணைந்து)
  • முருகவேள்
  • கவிதை நேரங்கள்
  • நாட்டிய அரங்கு - 12 நாட்டிய நாடகங்களின் தொகுப்பு
  • நாடக அரங்கு - 3 நாடகங்களின் தொகுப்பு:
    • மேகலையின் விசிறி - ஆஸ்கார் உவைல்டு எழுதிய "Lady Windermere's Fan" எனும் நாடகத்தின் மொழிபெயர்ப்பு
    • மன்னன் ஈடிபசு - சோபக்கிளீசு எழுதிய நாடகத்தின் தமிழாக்கம்.
    • ஒத்தெல்லோ (வானொலி நாடகம்)
  • பகவத் கீதை
"https://tamilar.wiki/index.php?title=இ._இரத்தினம்&oldid=2449" இருந்து மீள்விக்கப்பட்டது