இரா. முத்தரசன்
இரா. முத்தரசன் (பிறப்பு: சனவரி 18 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்திய பொதுவுமைக் கட்சியின் தமிழ்நாட்டின் மாநிலச் செயலாளரும் ஆவார்.[1]
இரா. முத்தரசன் | |
---|---|
பிறப்பு | முத்தரசன் சனவரி 18, 1950 திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | அரசியல்வாதி |
அறியப்படுவது | இந்திய பொதுவுடமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி |
பெற்றோர் | இராமசாமி, மாரிமுத்து |
வாழ்க்கை
இவர் தமிழகத்தின், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள அலிவலம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரின் தந்தை இராமசாமி, தாய் மாரிமுத்து, உடன்பிறந்தோர் அக்கா, அண்ணன், தம்பி, இரண்டு தங்கைகள் ஆகியோர் ஆவர். இவர் ஊரில் பள்ளிக்கூடம் இல்லாத காரணத்தால், கிராமத்துக் கணக்குப்பிள்ளை வீட்டில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிக்கத் தொடங்கினார்.[2] ஊருக்கு ஒற்றை ஆசிரியருடன் பள்ளிக்கூடம் துவக்கப்பட்ட பின், அதில் உரிய வயதைக் கடந்த நிலையில் சேர்க்கப்பட்டார். பின் 1965 இல் ஆலத்தம்பாடி ஜானகி அண்ணி உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பில் சேர்ந்தார். அந்த ஆண்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் எங்கும் தீவிரமடைந்தது. மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில், முத்தரசன் உள்ளிட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்.[2]
பள்ளிப் பருவத்திலேயே சமூக அக்கறையுடன் செயல்பட்ட முத்தரசன் அலிவலம் இந்திய பொதுவுடமைக் கட்சியின் கிளைச் செயலாளரான கோவிந்தராசு என்பவரின் கவனத்தை ஈர்த்தார். அவர் பொதுவுடமை இதழான ஜனசக்தியை, முத்தரசனிடம் கொடுத்து படிக்கவைத்து அவருக்கு பொதுவுடமைக் கருத்தில் நாட்டத்தை உண்டாக்கினார்.[2]
கட்சிப் பணியில்
எட்டாம் வகுப்போடு படிப்பை விட்டார் முத்தரசன். இதன்பிறகு திருத்துறைப்பூண்டியில், இந்திய பொதுவுடமைக் கட்சியின் பகுதிக் குழு அலுவலகத்தில் முத்தரசனை அழைத்துச்சென்று கோவிந்தராசனால் சேர்க்கப்பட்டார். அங்கு அலுவலகத்தில் தலைவர்களுக்கு உதவியாக இருந்தார். அதன்பிறகு கட்சியில் பல பொறுப்புகளை வகித்து, மக்கள் சார்ந்த பல போராட்டங்களில் ஈடுபட்டு, படிப்படியாக உயர்ந்து மாநிலப் பொதுச்செயலாளராக உயர்ந்தார். தேர்தலில் ஒரேயொரு முறை மட்டும் போட்டியிட்டுள்ளார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தார்.[2]
வகித்த பொறுப்புகள்
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின், திருத்துறைப்பூண்டி ஒன்றியத் துணைத் தலைவர்
- 1970இல் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக் குழுச் செயலாளர்
- 1984இல் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
- 1997இல் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகத் தேர்வானார். தொடர்ந்து 17 ஆண்டு காலம் அந்தப் பொறுப்பில் அவர் நீடித்தார்.
- 2015இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
- ↑ "இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக இரா.முத்தரசன் தேர்வு". தி இந்து. பெப்ரவரி 28, 2016. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/article6946008.ece. பார்த்த நாள்: 21 ஏப்ரல் 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "உருவானார் முத்தரசன்". தி இந்து. 21 ஏப்ரல் 2016. http://m.tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article8502637.ece. பார்த்த நாள்: 21 ஏப்ரல் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]