இரத்தினம் சிவலிங்கம்
மாஸ்டர் சிவலிங்கம் | |
---|---|
முழுப்பெயர் | இரத்தினம் சிவலிங்கம் |
பிறப்பு | 28-03-1933 மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு, இலங்கை |
மறைவு | 11-05-2022 (அகவை 89) உப்போடை, கல்லடி, மட்டக்களப்பு |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | கதை சொல்லி, வில்லிசைக் கலைஞர் |
பெற்றோர் | இரத்தினம் செல்லத்தங்கம் |
வாழ்க்கைத் துணை |
மங்கையர்க்கரசி |
மாஸ்டர் சிவலிங்கம் என அழைக்கப்படும் இரத்தினம் சிவலிங்கம் (28 மார்ச் 1933 – 11 மே 2022) ஈழத்தின் சிறுவர் எழுத்தாளரும், பேச்சாளரும் ஆவார். கவிதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள், வில்லுப்பாட்டு, நகைச்சுவைப் பேச்சு, நாடகம் எனப் பல துறைகளிலும் சிறப்புப் பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
மாஸ்டர் சிவலிங்கம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மஞ்சந்தொடுவாய் என்ற ஊரில் இரத்தினம் ஆசிரியருக்கும், செல்லத்தங்கம் என்பவருக்கும் 1933 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாகப் பிறந்தார் சிவலிங்கம். சென் மேரீசு பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். உப்போடை என்ற ஊரில் வசித்து வந்தார். ஐம்பது ஆண்டுகளாக சிறுவர் கதைகள் சொல்லும் பணியையே அவர் தொழிலாகக் கொண்டிருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையில் கதை சொல்லும் கலைஞனாகவும் பணியாற்றியிருந்தார். சென்னை சந்தனு கலைக்கல்லூரியில் ஓராண்டு கார்ட்டூன் கலையும், வில்லிசைக் கலையும் படித்திருக்கிறார்.
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை இவரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று, இலங்கை வானொலியில் சிறுவர் மலர் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த சரவணமுத்து மாமாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். அன்றில் இருந்து இலங்கை வானொலியில் கதை சொல்ல ஆரம்பித்தார். பின்னர் இலங்கைத் தொலைக்காட்சியிலும் இவரது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. கொழும்பில் இருந்து வெளியான தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
மாஸ்டர் சிவலிங்கம் பண்டிதர் பூபாலபிள்ளை என்பவரின் மகள் மங்கையர்க்கரசி என்பவரைத் திருமணம் புரிந்தார்.
வெளியிட்ட நூல்கள்
- பயங்கர இரவு
- அன்பு தந்த பரிசு
- உறைபனித் தாத்தா
- சிறுவர் கதை மலர்
விருதுகள்
- வடகிழக்கு மாகாண சபையின் சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய மண்டலப் பரிசு (1984-1991)
- அன்பு தந்த பரிசு என்ற சிறுவர் இலக்கியத்துக்காக மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2013 தமிழியல் விருதும் ரூ.15,000 பரிசும்[1]
பட்டங்கள்
- நகைச்சுவைக் குமரன் - புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை வழங்கிய பட்டம்
- வில்லிசைச் செல்வன் - வித்துவான் பண்டிதமணி வி. சீ. கந்தையா வழங்கிய பட்டம்
- அருட்கலைத் திலகம் - கிருபானந்த வாரியார் வழங்கியது
- வில்லிசைச் செல்வர் - அமைச்சர் செ. இராசதுரை வழங்கியது
- கலாபூஷணம் - இலங்கை கலாசார அமைச்சு
- கலைக்குரிசில் - மட்டு இந்து சமய அபிவிருத்தி சங்கம்
- சிறுவர் இலக்கியச் செம்மல் - கொழும்பு தமிழ்ச் சங்கம்
மறைவு
மாஸ்டர் சிவலிங்கம் 2022 மே 11 அன்று தனது 89-வது அகவையில் மட்டக்களப்பில் காலமானார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "ராமநாதபுரம் தமிழ்ச் சங்க துணைத் தலைவருக்கு இலங்கையில் தமிழியல் விருது". தினமணி. 24 அக்டோபர் 2013. http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2013/10/24/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81/article1851832.ece?service=print. பார்த்த நாள்: 3 மே 2015.
- ↑ மட்டக்களப்பின் கதைச் சிற்பி மாஸ்டர் சிவலிங்கம் காலமானார் minnal24.com, மே 11, 2022
வெளி இணைப்புகள்
- கிழக்கின் ‘முதுசொம்’மை இழந்தோம்!, செங்கதிரோன், அரங்கம், மே 28, 2022
- வானொலிமாமா மாஸ்டர் சிவலிங்கம் ஐயாவுடன் ஒரு சந்திப்பு, ச.பா.மதன், நவம்பர் 02, 2015