இந்திரன் பழி தீர்த்த படலம்

இந்திரன் பழி தீர்த்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் முதல் படலமாகும்.

சுருக்கம்

இப்படலத்தில் தேவலோகத்தின் அரசனான இந்திரனை காணவந்த தேவ குருவான பிரகஸ்பதி, இந்திரன் தேவமகளீர்களுடன் இருப்பதைக் கண்டு சினம்கொண்டு சென்றுவிடுகிறார். அதன் பின் தேவர்கள் மூலம் குரு வந்ததை அறிந்த இந்திரன் அவரைக் காண ஐராவதமாகிய தனது வாகனத்தில் செல்கிறான். குருவைக் காண இயலாத இந்திரன், பிரம்மாவின் ஆலோசனைப்படி அரக்கன் துவஷ்டா என்பவரின் மகனான விஸ்வரூபன் என்பவரை தேவர்களின் குருவாக ஆக்கினார்.

கோபம் கொண்டு சென்றுவி்ட்ட பழைய குருவான பிரகஸ்பதியை சமாதனம் செய்ய இந்திரன் யாகம் செய்ய தீர்மானத்தார். ஆனால் அரக்கர் குலத்தினை சார்ந்தவர் என்பதால் விஸ்வரூபன் அரக்கர்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு மந்திரத்தினை மாற்றி யாகம் செய்தார். இதனை அறிந்த இந்திரன் விஸ்வரூபனை வஜ்ராயுதத்தினால் தாக்கி அழித்தார். ஆனால் துவஷ்டா யாகமொன்றினை செய்து இந்திரை அழிக்க ஒரு அரக்கனை உருவாக்கினார். அவனுக்கு விஸ்வரூபன் என தன் மகன் பெயரையே இட்டார். விஸ்வரூபன் இந்திரனை தாக்கும் பொழுது இந்திரன் மயங்கிவிழுந்தார்.

இந்திரன் இறந்துவிட்டதாக எண்ணிய விஸ்வரூபன் அவ்விடம் விட்டு சென்றார். பின் மயக்கத்திலிருந்து எழுந்த இந்திரன், திருமால் கூறியவாறு ததிசி முனிவருடைய எலும்பினை வஜ்ஜிராயுதமாக பெற்றுக்கொண்டார். அதனைக் கொண்டு விஸ்வரூபனை அழித்தார். அதன் காரணமாக பிரம்மஹத்தி தோசம் எனும் கொலைப் பாவம் இந்திரனை பற்றிக் கொண்டது. அதனை தீர்க்க பூமிக்கு வந்தார்.

கடம்ப வனத்தில் ஒரு லிங்கத்தினையும், குளத்தினையும் கண்டார். அந்த குளம் தாமரைகள் நிறைந்ததாக இருந்தது. அந்தக் குளத்தில் குளித்து, லிங்கத்திற்கு பூசை செய்து தன்னுடைய பிரம்மஹத்தி தோசத்தினை போக்கிக் கொண்டார். உடன் வந்த தேவக்களில் சிற்பியான விஸ்வகர்மாவை அவ்விடத்தில் உள்ள இறைவனுக்காக கோயில் அமைக்க கூறினார். விஸ்வகர்மா லிங்கத்திற்கு எட்டு யானைகள் தாங்கும் விமானத்தினை உருவாக்கினார். இந்திரனும், இந்திரானியும், தேவர்களும் இறைவனை வழிபட்டனர்.

அத்தலத்தில் இருந்த இறைவன் சொக்கநாதன் எனவும், சோமசுந்ததர் என்றும் அழைக்கப்பட்டார். [1]

காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்