ஆ. மு. சரிபுத்தீன்

ஆ. மு. சரிபுத்தீன் (A.M. Sherifuddeen ඒ.එම්. ෂරිෆුද්දීන්, மே 4, 1909 - நவம்பர் 16, 2000) ஈழத்துப் புலவர்.

ஆ. மு. சரிபுத்தீன்
இயற்பெயர் ஆ. மு. ஷரிபுத்தீன்
பிறப்பு ஷரிபுத்தீன்
இறப்பு நவம்பர் 16, 2000(2000-11-16) (அகவை 91)
பணி புலவர், ஆசிரியர், நுாலாசிரியர், வட்டாரக் கல்வியதிகாரி
தேசியம் இலங்கைச் சோனகர்
அறியப்படுவது இஸ்லாமிய தமிழ் இலக்கயத்திற்குப் பங்காற்றியவர்
துணைவர் ஆயிஷா
பிள்ளைகள் காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன்

வாழ்க்கைச் சுருக்கம்

ஆ. மு. சரிபுத்தீன் இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மருதமுனை எனும் ஊரைச் சேர்ந்தவர். இவர் மருதமுனை அரசினர் தமிழ்ப் பாடசலையில் கற்று,[1] மாணவ ஆசிரியர் தேர்விலும், ஆசிரியர் தேர்விலும் தேர்ச்சி பெற்று, ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும் கடமையாற்றியதோடு சமாதான நீதவானாகவும் பணியாற்றியுள்ளார்.

சுவாமி விபுலாநந்தரின் மாணவனாக இருந்து பண்டிதத் தமிழ் கற்றவர்.[2] தான் கற்ற தமிழ்மொழியைத் தன்னிடம் கற்ற மாணாக்கருக்கும் சீராகக் கற்றுக்காெடுத்தவர். புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர். புலவர்மணி அவர்களாலேயே ஆ.மு. சரிபுத்தீன் அவர்களும் புலவர்மணி எனும் பட்டம் பெற்றுக்கொண்டார்.

ஆ.மு. சரிபுத்தீன் அவர்கள் சிறந்த கட்டுரையாசிரியராகவும், உரையாசிரியராகவும்[3] இருந்தார். சுவாமி விபுலாந்தர் அவர்களது நினைவு மலர்களில் அவரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அடிகளார் பவள மலரில் சுவாமிகளின் கற்றற் சிறப்பு (1969) என்ற கட்டுரை [2], எழுதியிருந்தார். 2003 ஆண்டு வெளியான, சுவாமி விபுலாநந்தர் நினைவு மலரான விபுலம் எனும் நுாலிலும் சுவாமி விபுலாநந்தர் பதிகம் எனும் தலைப்பில் கவியாக்கம் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியப் பணியின் போது பாடசாலையின் தேவைக்காக மேடை நாடகங்கள் எழுதி நெறிப்படுத்தியதோடு, மரபு சார்ந்த ஓவியக் கலையிலும் வல்லவராகத் திகழ்ந்துள்ளார். இவரால் உரைச் சித்திரமாக வடிவமைக்கப்பட்ட மட்டக்களப்பு நாட்டுக் கவி 1951 மார்கழியில் இலங்கை வானொலி கலையகத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.[சான்று தேவை]

வெண்பாவில் புலவர்மணியை வென்ற ஆ.மு. சரிபுத்தீன்

ஆ.மு. சரிபுத்தீன் அவர்கள் நபிமொழி நாற்பது எனும் வெண்பா நுாலை இயற்றிவிட்டு, அதனை பெரியதம்பிப் பிள்ளை அவர்களின் பார்வைக்கு அனுப்பியிருந்தார். சில நாட்கள் கழித்து, புலவர்மணி அவர்களிடமிருந்து திருமுகம் ஒன்று வந்தது. அதில் ஒரு வெண்பா மாத்திரமே இருந்தது. அதில் அவர், நண்பனே , வெண்பா யாப்பதில் என்னை நீ வென்றுவிட்டாய். எனவே , எனக்களிக்கப்பட்ட புலவர்மணி என்ற பட்டத்தை உனக்கு அளிக்கின்றேன் “ என்ற பொருளில் என வெண்பா எழுதியிருந்தார்.

அந்த வெண்பா இது:

வெண்பாவி லென்னைநீ வென்றாய் ஷரிபுத்தீன்
நண்பாவென் நாம முனக்களித்தேன் - பண்பாளா
வாழி அறபுதமி ழுள்ளளவும் வாழிநீ
வாழி நமதன்பு மலர்ந்து

பின்னர்புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, சரிபுத்தீன் அவர்களது வீட்டுக்குச் சென்று நேரில் அவரைப் பாராட்டி மகிழ்ந்தார். அன்றுமுதல் புலவர் ஆ.மு. ஷரிபுத்தீன், புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் ஆனார்.

கல்விப் பணிகள்

மாணவ ஆசிரியராக (1924) 03 வருடங்களும், உதவி ஆசிரியராக (1927) 15 வருடங்களும், தலைமை ஆசிரியராக (1942) 19 வருடங்களும், சுயபாஷா வட்டாரக் கல்வியதிகாரியாக (1961) 09 வருடங்களுமாக மொத்தம் 42 வருடங்களாக கல்விப் பணியாற்றி[1] பல ஆசிரியர்களைத் தோற்றுவித்தவர்.

இலக்கியப் பணிகள்

  • சீறா பதுறுப் பாடல் உரை - க.பொ.த சா.த வகுப்புக்கான நுால் (1952)
  • நபிமொழி நாற்பது - வெண்பா நுால் (1967) சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நுால்.
  • வீராங்கனை ஸைதா -கவிதை நுால் (1968)
  • இலக்கிய உரை - க.பொ.த சா.த வகுப்புக்கான நுால் (1972)
  • புதுகுஷ்ஷாம் காப்பிய உரை - க.பொ.த சா.த வகுப்புக்கான நுால் (1979)
  • இசை வருள் மாலையும் மக்களுக்கு இதோப தேசமும்
  • கனிந்த காதல் - கிராமிய இலக்கியம் (1984)
  • உலகியல் விளக்கம்
  • நம்நாட்டின் நானிலக் காட்சிகள்
  • மருதமுனையின் வரலாறு
  • முதுமொழி வெண்பா
  • சூறாவளிப் படைப்போர்

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • விபுலானந்த அடிகளும் முஸ்லீம்களும்
  • நபிமொழி நாற்பது
  • கலாச்சார சமய, அலுவல்கள் அமைச்சு. முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு - 1974
"https://tamilar.wiki/index.php?title=ஆ._மு._சரிபுத்தீன்&oldid=15234" இருந்து மீள்விக்கப்பட்டது