ஆஹா (திரைப்படம்)
ஆஹா (AAHAA!) என்ற படம் இராஜீவ் கிருஷ்ணா, சுலேகா ஆகியோர் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1997 ல் வெளிவந்த குடும்பப் பாங்கான தமிழ்த் திரைப்படமாகும். தீபாவளியன்று வெளிவந்து 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.[1] பின்னர் ஆஹா என்ற பெயரிலேயே ஜெகபதி பாபு நடித்து தெலுங்கு மொழியில் வெளிவந்தது.
ஆஹா | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
தயாரிப்பு | ஆர்.மோகன் |
கதை | கிரேசி மோகன்(வசனம்) |
திரைக்கதை | அனந்து சுரேஷ் கிருஷ்ணா |
இசை | தேவா |
நடிப்பு | இராஜீவ் கிருஷ்ணா சுலேகா ரகுவரன் விஜயகுமார் பானுப்பிரியா ஸ்ரீவித்யா சுகன்யா |
ஒளிப்பதிவு | எஸ். சரவணன்]] |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | ஷோகன் பிலிம்ஸ் லிமிடெட் |
விநியோகம் | ஏ. பி. இன்டர்நேஷனல் |
வெளியீடு | 30 அக்டோபர் 1997 |
ஓட்டம் | 162 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை சுருக்கம்
பரசுராமன் என்ற பெரிய பணக்காரர் (விஜயகுமார்) மனைவி பட்டம்மாள் (ஸ்ரீவித்யா) மூத்த மகன் ரகுராமன் (ரகுவரன்) மற்றும் இளைய மகன் ஸ்ரீராம்(ராஜீவ் கிருஷ்ணா) ஆகியோருடன் வசித்து வருகிறார். அவருக்கு மாற்றுத் திறனாளியான ஒரு மகளும் உண்டு. ரகு மிகுந்த பொறுப்பானவன். தனது தந்தையின் வியாபாரத்தை உடனிருந்து கவனித்து வருகிறார். ஆனால் ஸ்ரீராமோ விளையாட்டுத்தனமாகவே இருக்கிறான். ஸ்ரீராமின் இத்தகைய போக்கினை பரசுராமன் மிகவும் வெறுக்கிறார். மேலும் அவனது பொறுப்பற்ற நடத்தைக்காக அவர் அடிக்கடி திட்டிவருகிறார். ரகுவின் மனைவி ராஜேஸ்வரி (பானுப்பிரியா) ,குடும்ப உறுப்பினர்களிடம் மிகவும் அன்பாகவும் நெருக்கமாக இருக்கிறார். ஸ்ரீராம் கணேசன் தில்லி கணேஷ் என்ற சமையல்காரரின் மகள் ஜானகி மீது (சுலேகா) காதலில் விழுகிறான். ஸ்ரீராம் தனது காதலைப்பற்றி தந்தை பரசுராமனிடம் கூறுவதற்காக ராஜேஸ்வரியின் உதவியை நாடுகின்றான்.
கணேசன் தன்னைவிட சமூக அந்தஸ்த்தில் குறைவாக இருப்பதால் மகனின் காதலை பரசுராமன் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையே ஒரு நாள், ஸ்ரீராம் ரகுவைப் பின்பற்றியபோது கீதாவுடனான (சுகன்யா)அவரது உறவைப் பற்றி தெரிந்து கொள்கிறான். ஸ்ரீராம் அவர்களது தகாத உறவெனக் கருதி கோபமடைகிறான். ஆனால் ரகு, கல்லூரி நாட்களில் கீதாவும் அவனும் காதல் கொண்டிருந்தனர் என்ற பழங்கதையை சொல்கிறார். தான் காதலித்து வரும் சமயத்தில் கீதா ரகுவிடம் எவ்வித தகவலும் சொல்லாமல் எங்கேயோ சென்று விடுகிறார். இதற்கிடையே சில வருடங்கள் கழித்து ரகுவிற்கு ராஜேஸ்வரியுடன் திருமணம் நடைபெறுகிறது. ஒருநாள் கீதாவிடமிருந்து தன்னை சந்திக்குமாறு தொலைபேசியில் அழைக்கிறார். அந்த சந்திப்பில் கீதா தனக்கு மூளையில் ஒரு கட்டி ஏற்பட்டு தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார். ரகுவிடமிருந்து தான் விலகி இருக்க முடிவு செய்ததற்கு இதுதான் காரணமென்றும், தான் கடைசி நாட்களை சந்திக்கும்போது, ரகு தன்னுடனேயே இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார். இதை ரகுவும் ஒப்புக்கொள்கிறார்.
ஸ்ரீராம் கீதாவின் நிலைமையை புரிந்து கொள்கிறான். மேலும் கீதாவுடன் நட்புடன் இருக்கிறான். ஒரு நாள், கீதாவின் நிலை தீவிரமாகிறது. ரகு ஒரு வியாபாரக் கூட்டத்திற்கு சென்று இருப்பதால் ஸ்ரீராம் கீதாவை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறான். கீதா மருத்துவமனையில் இறந்துவிடுகிறார். ஸ்ரீராம், கீதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, அவனது தந்தை பரசுராமன் ஸ்ரீராம் இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதை தவறாக புரிந்து கொண்டு அவனை திட்டுகிறார். ஸ்ரீராம் தந்தையின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் தனது சகோதரனின் திருமண வாழ்க்கையை எவ்வித பாதிப்புக்கும் உள்ளாக்க விரும்பவில்லை. தான் இல்லாத போது கீதாவின் மரணத்திற்குப் பின் எல்லா சடங்குகளையும் செய்ததற்காக ஸ்ரீராமுக்கு ரகு நன்றி கூறுகிறான்.
பரசுராமனின் மகளின் திருமணம் நடத்தப்படவுள்ள நிலையில், ரகு ஒரு வணிகக் கூட்டத்திற்கு திருமணத்திற்கு முதல் நாளில் சிதம்பரத்திற்கு பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ரகு பயணிக்கும் ஒரு புகைவண்டி விபத்துக்குள்ளாகிய தகவல் ஸ்ரீராமிற்குத் தெரிய வருகிறது. புகைவண்டி நிலையத்திற்கு நேரில் வந்த ஸ்ரீராம் அந்த புகைவண்டியில் பயணம் செய்தோர் பட்டியலில் ரகுவின் பெயரைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான். தனது சகோதரியின் திருமணத்தை ரத்து செய்ய விரும்பாத ஸ்ரீராம் தனது குடும்பத்திற்கு நடந்த சம்பவத்தைப் பற்றி தெரிவிக்காமல் தகவலை மறைத்து மற்றவர்களின் முன்னால் மகிழ்ச்சியாக இருக்கிறான். இதற்கிடையில், அனைவருமே திருமணத்திற்கு ரகுவின் வரவை எதிர்பார்க்கும் சூழலில் ரகுவின் கூட்டம் நீட்டிக்கப்பட்டதால் அவர் திருமணத்திற்கு வரமுடியாமல் போனதாக ஸ்ரீராம் பொய் சொல்கிறான். இதற்கிடையே பரசுராமனின் மகள் திருமணம் நடந்து முடிந்தவுடன் ஸ்ரீராம் ரகுவின் மரணம் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கிறான்.இதைக் கேட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்..
அனைவருக்கும் ஆச்சரியமாக, அப்போது ரகு திடீரென்று திருமண மண்டபத்திற்கு உயிருடன் திரும்பி வருகிறார். ரகுவுக்கு ஏற்பட்ட புகைவண்டி விபத்து பற்றி ஸ்ரீராம் கேட்கிறார். ரகு, கடைசி நிமிடத்தில் ரயிலில் ஏறத் தவறிவிட்டதாகவும், இறுதி நேரத்தில் தான் ஒரு காரை எடுத்துக்கொண்டு, கூட்டத்திற்கு சென்றதாகவும் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பியதாகவும் தெரிவிக்கிறார். மேலும் தான் கூட்டங்களில் கவனமாக இருந்ததால் அவர்களிடம் இதைப் பற்றி கூற இயலவில்லை என தெரிவித்து அனைவரிட்மும் அவர் மன்னிப்பு கோருகிறார். ஸ்ரீராம் தனது சகோதரியிடம் அன்பு செலுத்துபவராகவும், பாசம் கொண்டவராகவும் இருப்பதால் அவளது திருமணத்தை ரத்து செய்ய விரும்பாத காரணத்தை அறிந்த பரசுராமன் ஸ்ரீராமை பாராட்டைத் தொடங்குகிறார். இதற்கிடையில் ரகு, கீதாவுடனான தனது உறவைப் பற்றிய உண்மையைத் தெரிவிக்கிறார். மேலும் ஸ்ரீராம் மற்றும் கீதாவிற்குள் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்துகிறார். கீதாவைப் பற்றிய உண்மையை மறைத்து வைத்ததற்காக ராஜேஸ்வரியிடம் ரகு மன்னிப்பு கேட்கிறார். இறுதியில், ஸ்ரீராம் ஜானகியை திருமணம் செய்துகொள்கிறார்.
நடிகர்கள்
- ஸ்ரீராமாக இராஜீவ் கிருஷ்ணா
- ஜானகியாக சுலேகா
- பரசுராமனாக விஜயகுமார்
- ரகுராமனாக ரகுவரன்
- கணேசனாக டெல்லி கணேஷ்
- ராஜேஸ்வரியாக பானுப்பிரியா
- லட்சுமியாக ராதா பாய்
- பட்டம்மாளாக ஸ்ரீவித்யா
- கீதாவாக சுகன்யா
- பம்பாய் ஞானம்
- வையாபுரி
- மோகன் ராமன்
- தாமு
- கிருஷ்ணா
- அஜயாக மகேந்திரன்
தயாரிப்பு
இப்படத்திற்குப் பின்னர் நடிகை பானுபிரியாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அறிமுக நடிகர்கள் இராஜீவ் கிருஷ்ணா மற்றும் சுலேகா ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
ஒலிப்பதிவு
இசையமைப்பாளர் தேவாவின் இசையில் இப்படம் வெளிவந்தது. இப்படத்தில் இடம் பெற்ற "முதன்முதலில்" என்ற பாடல் 1992 ம் வருடம் இந்தி மொழியில் வெளிவந்த தீவானா என்ற படத்தின் தழுவலாக இருந்தது.
மேற்கோள்கள்
- ↑ "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!" இம் மூலத்தில் இருந்து 2012-03-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120310090813/http://www.cinesouth.com/cgi-bin/filmography/filmography.cgi?name=aahaa.
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 31 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090331005748/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html.