ஆடும் கூத்து

ஆடும் கூத்து (Aadum Koothu) 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை டி. வி. சந்திரன் இயக்க, நடிகர்கள் சேரன், நவ்யா நாயர், பிரகாஷ் ராஜ், அகில் குமார், சீமான், மனோரமா ஆகியோர் நடித்திருக்கின்றனர். 2005 இல் நடைபெற்ற பல திரைப்பட விழாக்களில் பங்குபற்றிய இத்திரைப்படம், அரங்குகளில் திரையிடப்படவே இல்லை. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பின்னொரு சமயம் திரையிடப்பட்டது. நல்ல விமரிசனங்களைப் பெற்ற இத்திரைப்படம், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றுள்ளது.[1][2]

ஆடும் கூத்து
இயக்கம்டி. வி. சந்திரன்
இசைஐசக் தாமஸ் கொட்டுகப்பள்ளி
நடிப்புநவ்யா நாயர்
சேரன்
பிரகாஷ் ராஜ்
அகில் குமார்
சீமான்
மனோரமா
ஒளிப்பதிவுமது அம்பட்
வெளியீடு2005 (2005)
ஓட்டம்106 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

மணிமேகலா (நவ்யா நாயர்) கல்லூரியில் படிக்கும் ஒரு கிராமத்துப் பெண். பிறர் கண்களுக்குத் தெரியாத காட்சிகள் இவள் கண்களுக்குத் தெரிகின்றன. ஆனால் அவள் சொல்வதை யாரும் நம்புவதில்லை. பின்னர் நடக்கும் நிகழ்ச்சிகள் அவள் கூறுவது உண்மையென உணர்த்துகின்றன. அவ்வாறு நிகழ்ச்சிகள் தோன்றும் போது அவள் பண்ணும் கலாட்டா பெரிதாக இருக்கிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால், அவள் காணும் நிகழ்வுகள், அவளது காதலன் முத்து (ஆரி அர்ஜுனன்) அவளுக்குப் பரிசளித்த வளையலிலிருத்து தோன்றும் ஒரு கற்பனைத் திரையில் ஓடும் திரைப்படக் காட்சிகளாகத் தோன்றுவதுதான். அந்த வளையல் உருக்கிய செல்லுலாய்டால் செய்யப்பட்டது. தெருக்கூத்து ஆடும் ஒரு காதல் சோடியை (சேரன், நவ்யா நாயர்) ஒரு கெட்ட ஜமீந்தார் (பிரகாஷ் ராஜ்) கொடுமைப்படுத்தி அப்பெண்ணின் தலையை மொட்டையடித்து விடுவது போன்ற காட்சிகள் தான் அவள் காண்பது. அவளது திருமண நாளன்றும் அவளுக்கு அக்காட்சிகள் தோன்ற அவள் செய்யும் ஆர்ப்பாட்டத்தால் திருமணம் நின்று விடுகிறது. பின்பு அவளது நிலையைப் புரிந்து கொள்ளும் முத்து அவளோடு சேர்ந்து உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முற்சிக்கிறான்.

அம்முயற்சியில் ஒரு ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் மூலமாக பாதியிலேயே நின்றுபோன ஒரு திரைப்படத்தின் கதை இது என்பது அவர்களுக்குத் தெரியவருகிறது. 1970 களின் பிற்பகுதியில் ஒரு இளம் இயக்குநர் ஞானசேகரன் (சேரன்) இக்கதையைத் திரைப்படமாக்கத் தொடங்கி அது பாதியிலேயே நின்று போகிறது. இந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தான் அப்படத்தில் ஜமீந்தாராக நடித்தவர். ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் தான் இத்திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. அப்படத்தில் நடிக்கும் கதாநாயகி முதலில் தன் தலையை மொட்டையடித்துக் கொள்ள மறுக்கிறாள். ஆனால் திரைப்படம் நன்றாக அமைய அக்காட்சி உண்மையாக இருக்க வேண்டுமென்ற இயக்குனரின் வற்புறுத்தலால் பின் சம்மதிக்கிறாள். அந்த ஜமீந்தாரின் மகன் (சீமான்) திரைப்படம் எடுக்கும் இடத்திற்கு வந்து, மொட்டையடிக்கும் காட்சி தனது தந்தையின் பெயரைக் கெடுத்துவிடும் எனவே அதை எடுக்கக் கூடாது எனத் தடுக்கிறான். ஓய்வுபெற்ற ஆசிரியர் இது திரைப்படக் கற்பனைக் காட்சிதானே எனக்கூறி அவனைச் சமாதானப்படுத்துகிறார். ஆனால் ஜமீந்தாரின் மகன் அடியாட்களுடன் திரும்பி வந்து கலவரம் செய்கிறான். மன உளைச்சலுக்கு ஆளாகும் கதாநாயகி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொள்ள திரைப்படம் நின்றுபோகிறது. ஞானசேகரன் தலைமறைவாகி, ஜமீந்தார் மகனைப் பழிவாங்க தனது புரட்சித் தோழர்களோடு திரும்பி வரும்போது அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்த அச்சூழலில் காவல்துறையால் போலிமோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

மணிமேகலா அதே கிராமத்துக்குச் சென்று இதைப்பற்றி ஒரு ஆவணப் படம் எடுக்கச் செல்வதும் அங்கு நடந்த கதையை நேரில் பார்த்த சாட்சியாக ஒரு தாழ்த்தப்பட்ட இனப்பெண்ணைச் (மனோரமா) சந்திப்பதும் அந்த ஜமீந்தாரின் பேரனை (இவரும் சீமான்) நேர்காணலும் ஆடும் கூத்து திரைக்கதையின் தொடர் நிகழ்ச்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன.

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆடும்_கூத்து&oldid=30496" இருந்து மீள்விக்கப்பட்டது