வேதநாயகம் பிள்ளை
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வேதநாயகம் பிள்ளை |
---|---|
பிறந்ததிகதி | 11 அக்டோபர் 1826 |
பிறந்தஇடம் | குளத்தூர், திருச்சினாப்பள்ளி மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 21 சூலை 1889 | (அகவை 62)
பணி | கவிஞர், எழுத்தாளர், தமிழறிஞர் |
துணைவர் |
|
மாயூரம் வேதநாயகம் பிள்ளை (Mayavaram Vedanayagam Pillai, (11 அக்டோபர் 1826 - 21 சூலை 1889) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879), புதினம் தமிழில் வெளியான முதல் புதினம் ஆகும்.
வாழ்க்கை
இவரின் தாயார் ஆரோக்கிய மரி-யும் தந்தை சவரிமுத்துப் பிள்ளையும்[1][2] திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்குத் தொடர்வண்டியில் செல்கையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் 11 அக்டோபர் 1826 அன்று வேதநாயகம் பிறந்தார்.[சான்று தேவை]
தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம், தமிழ் மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.[3]
மக்கள் பணி
இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856-இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். மாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
1876-78 சென்னை மாகாணப் பெரும் பஞ்சத்தின்போது தன் சொத்துகள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை எழுதினார்.[3]
இலக்கியப்பணி
அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.[3]
அவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள்
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை,
- இராமலிங்க வள்ளலார்,
- திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர்,
- கோபாலகிருஷ்ண பாரதியார்
ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.
மொழிபெயர்ப்புப் பணி
கி.பி 1805 முதல் கி.பி. 1861-ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை அதாவது 56 ஆண்டுகள் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக 1862-இல் வெளிட்டார் மேலும் 1862, 1863-ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். இவ்வாறு தீர்ப்புகளை முமுதன்முதலில்மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார்.[1]
ஆக்கங்கள்
வேதநாயகம் பிள்ளை ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:
- 1860 - நீதி நூல்
- 1862-இல் சித்தாந்த சங்கிரகம் - உயர்நிலை ஆங்கில சட்டங்களைத் தமிழில் செய்த நூல்
- 1869-இல் பெண்மதி மாலை - பெண்களுக்கு ஏற்ற அற முறைகளைப் பாட்டுகளாலும் உரைநடையாலும் கூறும் நூல்.
- 1873-இல் மூன்று நூல்கள் திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதர் அந்தாதி இவை செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. மத வரலாறு, மற்றும் கடவுள் பால் அவருக்கிருந்த அன்பு இவற்றைப் புலப்படுத்துவது.
- 1879-இல் பிரதாப முதலியார் சரித்திரம் புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- 1878-இல் சர்வ சமய சமரசக் கீர்த்தனை ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
- 1887-இல் சுகுண சுந்தரி புதினம்
- 1889-இல் சத்திய வேத கீர்த்தனை
- பொம்மைக் கலியாணம், பெரியநாயகியம்மன் என்னும் நூல்களும் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.
மறைவு
21 சூலை 1889 அன்று தன் 63-ஆம் அகவையில் காலமானார் வேதநாயகம்.
வழிமரபினர்
1851-இல் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்பாரைத் திருமணம் செய்திருந்தார் வேதநாயகம்.
இவர் கொள்ளுப்பேரன் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆவார்.
உசாத்துணை
கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1963.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை, புலவர் என் வி கலைமணி ,சிவகாமி புக் பப்ளிக்கேஷன்ஸ்
- ↑ "மாயூரம் வேதநாயகம் பிள்ளை 10" (in ta). https://www.hindutamil.in/news/blogs/60951-10.html.
- ↑ 3.0 3.1 3.2 [1]
வெளி இணைப்புகள்
- த இந்து கட்டுரை பரணிடப்பட்டது 2010-09-03 at the வந்தவழி இயந்திரம்