ரகசிய போலீஸ் (1995 திரைப்படம்)
ரகசிய போலீஸ் | |
---|---|
இயக்கம் | ஆர். எஸ். இளவரசன் |
தயாரிப்பு | ஏ. என். சுந்தரேசன் |
கதை | ஆர். எஸ். இளவரசன் பாலகுமாரன் (வசனம்) |
இசை | லட்சுமிகாந்த் - பியாரிலால் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | ஜி. ஜெயச்சந்திரன் |
கலையகம் | ஏ. என். எஸ். பிலிம் இன்டர்நேசனல் |
வெளியீடு | அக்டோபர் 23, 1995 |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரகசிய போலீஸ் (Ragasiya Police) 1995 ஆம் ஆண்டு சரத்குமார் மற்றும் நக்மா நடிப்பில், ஆர். எஸ். இளவரசன் இயக்கத்தில், ஏ. என். சுந்தரேசன் தயாரிப்பில், லட்சுமிகாந்த்-பியாரிலால் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3].
கதைச்சுருக்கம்
முதலமைச்சராக ஆசைப்படும் உள்துறை அமைச்சர் பொன்னுரங்கம் (கவுண்டமணி) அதற்காக மாநிலத்தில் ஒரு பிரச்சனையை உருவாக்கத் திட்டமிடுகிறார். அழகம்பெருமாளின் (ஆனந்த்ராஜ்) மூலம் எதிர்க்கட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து வெடிக்கச்செய்ததில் 22 பேர் இறக்கின்றனர். முதலமைச்சர், (ராதிகா) காவல்துறை இணை ஆணையர் சூரியாவை (சரத்குமார்) இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கிறார்.
சூரியாவும் ராஜியும் (நக்மா) காதலர்கள். முதல்வரைக் கொல்வதற்காக பெருமாள் செய்யும் முயற்சிகளை முறியடிக்கும் சூரியா அதில் படுகாயமடைகிறான். பெருமாளின் ஆலோசனைப்படி பொன்னுரங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சூரியாவை வேறு துறைக்கு மாற்றுகிறான். அந்த வழக்கு ராஜியின் சகோதரன் தினேஷ் வசம் ஒப்படைக்கப்படுகிறது. தினேஷ் அவ்வழக்கை விசாரணையின் போதே கொல்லப்படுகிறான். சூர்யாவின் தாயும் (சங்கீதா) கொல்லப்படுகிறாள். இந்த இரு கொலைகளுக்கும் அமைச்சர் பொன்னுரங்கம்தான் காரணம் என்று முதல்வரிடம் சூர்யாவும் ராஜியும் புகாரளிக்கின்றனர். மேலும் முதல்வரைக் கொல்லவும் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். அரசுமுறைப் பயணமாக சீசெல்சு நாட்டுக்கு செல்வதால் உடனடியாக பொன்னுரங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறும் முதல்வர் சூர்யாவைத் தன் மெய்காப்பாளராக நியமித்துத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.
சீசெல்சு நாட்டில் முதல்வரைக் கொல்லும் திட்டத்துடன் வரும் பெருமாளைக் கைது செய்கிறார் சூர்யா. பெருமாள் கைது செய்யப்பட்டதை அறிந்த பொன்னுரங்கம் தற்கொலை செய்துகொள்கிறார்.
நடிகர்கள்
- சரத்குமார் - சூர்யா
- நக்மா - ராஜி
- ராதிகா - தமிழக முதல்வர்
- ஆனந்தராஜ் - அழகம் பெருமாள்
- கவுண்டமணி - பொன்னுரங்கம்
- தேவன் - தினேஷ்
- செந்தில் - ஹரிச்சந்திரன்
- வினு சக்ரவர்த்தி - தர்மராஜ்
- சங்கீதா - சூர்யாவின் தாய்
- விசித்ரா - எழிலரசி
- எஸ். என். லட்சுமி
- மகாநதி சங்கர்
- ஆர். என். சுதர்சன்
- ஆர். என். கிருஷ்ண பிரசாத்
- ஜோதி மீனா
- கவிதா ஸ்ரீ
- பிந்தியா
- முத்துக்குமார்
- கிருஷ்ணமூர்த்தி
- ரவிராஜ்
- ஓ. ஏ. கே. சுந்தர்
இசை
படத்தின் இசையமைப்பாளர் லட்சுமிகாந்த் - பியாரிலால். பாடலாசிரியர் வாலி[4].
வ. எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | ஏன் ஏன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கவிதா கிருஷ்ணமூர்த்தி | 6:03 |
2 | மயில் தோகை | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:17 |
3 | மன்மதன் | சித்ரா, கவிதா கிருஷ்ணமூர்த்தி | 5:22 |
4 | கண் இமைக்காமல் | மனோ, சுவர்ணலதா | 3:59 |
5 | கண் இமைக்காமல் (மீண்டும்) | மனோ, சுவர்ணலதா | 3:59 |
6 | ஈச்சங்காற்று | கவிதா கிருஷ்ணமூர்த்தி | 6:17 |
மேற்கோள்கள்
- ↑ "ரகசிய போலீஸ்". http://spicyonion.com/movie/ragasiya-police/.
- ↑ "ரகசிய போலீஸ்" இம் மூலத்தில் இருந்து 2010-09-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100916210556/http://www.jointscene.com/movies/Kollywood/Ragasiya_Police/7999.
- ↑ "ரகசிய போலீஸ்". https://groups.google.com/d/msg/soc.culture.tamil/fwLpyN6aWTk/R4FfCjmQ3AsJ.
- ↑ "பாடல்கள்". http://www.hummaa.com/music/album/ragasiya-police/24159.