மாமல்லபுரம் இரதக் கோயில்கள்
மாமல்லபுரம் இரதக் கோயில்கள் | |||||
---|---|---|---|---|---|
"பஞ்ச இரதங்கள்", "மாமல்லபுரம்" அல்லது "மாமல்லபுரம் பஞ்ச இரதங்கள்" யுனெக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |||||
மாமல்லபுரம் பஞ்ச இரதங்கள் (கி.மு 630–638) | |||||
|
பல்லவர் காலத்தில் துறைமுக நகரமாக இருந்த மாமல்லபுரம், திராவிடக் கட்டிடக்கலையைப் பொறுத்தவரை ஒரு முக்கிய இடமாகும். பல்லவர் கட்டிடக்கலைக்கும், ஆரம்ப காலத் திராவிடக் கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கே அமைந்துள்ள ஏராளமான பல்லவர் கட்டிடங்களுள் இரதக் கோயில்கள் எனப்படும் ஒற்றைக் கற்றளிகளும் இடம் பெறுகின்றன.
இவை நிலத்திலிருந்து துருத்திக்கொண்டிருந்த பெரிய பாறைகளைச் செதுக்கி அமைக்கப் பட்ட ஒரே வரிசையில் அமைந்துள்ளக் கோயில்களாகும். இவற்றைப் பஞ்ச பாண்டவர் இரதங்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் முதன்மைப் பாத்திரங்களான தருமர், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதை ஆகியோரின் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன. பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது இரதங்களோ அல்ல.[1]
இரதக் கோயில் விபரங்கள்
இரதக் கோயில்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கடவுள்களுக்காக அமைக்கப்பட்டவை. அத்துடன், இவை திராவிடக் கட்டிடக்கலையின் வெவ்வேறு வகைகளைக் காட்டுவனவாக உள்ளன.
தர்ம இரதம் (சிவன் கோயில்)
இவற்றுள் பெரியது சிவனுக்கு உரிய கோயிலாகும். ஆதிதளம் என அழைக்கப்படும் நிலத் தளத்துடன் சேர்த்து இக் கோயில் மூன்று தளங்கள் கொண்டது. நிலத் தளம் முற்றுப் பெறாத நிலையில் உள்ளது. இதன் மேல் தளங்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. எனினும் மேல் தளங்களுக்குச் செல்வதற்கு முறையான படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை.
வீம இரதம் (திருமால் கோயில்)
வீம இரதம் எனப்படுவது, திருமாலுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும். இது நீண்ட செவ்வக வடிவான தள அமைப்பைக் கொண்டுள்ளது. இத் தள அமைப்பு, இதன் மேற் காணப்படும் நீண்ட சாலை விமான அமைப்புக்குப் பொருத்தமாக உள்ளது. இவ்விடத்தில் காணப்படும் தர்மராஜ இரதம், அருச்சுனன் இரதம் போலன்றி இக்கோயிலில் சிற்பங்கள் எதுவும் காணப்படாமை குறிப்பிடத் தக்கது.
அர்ச்சுன இரதம் (முருகன் கோயில்)
அருச்சுன இரதம் எக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இது முருகக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது எனக் கருதப்பட்டாலும், இதை இன்னொரு சிவன் கோயிலாக அடையாளம் காண்போரும் உளர்.
திரௌபதை இரதம் (கொற்றவைக் கோயில்)
சிறு குடில் ஒன்றின் அமைப்பை ஒத்துக் காணப்படும் இக்கோயில் கொற்றவைக்கு உரியதாகும்.
நகுல சகாதேவ இரதம் (இந்திரன் கோயில்)
இது இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகக் கருதப் படுகின்றது. இது சிற்ப நூல்களில் கஜபிருஷ்டம் (யானையின் பின்பகுதி) எனக் குறிப்பிடப்படும் அமைப்பிலான விமானத்தைக் கொண்டுள்ளது. இவ்வகை விமானத்தைத் தமிழில் தூங்கானை விமானம் என்பர். இக்கோயிலிலும் சிற்பங்கள் இல்லை என்பதுடன் கட்டிடம் முற்றுப்பெறாத நிலையிலேயே காணப்படுகின்றது.
கட்டிடக்கலை அடிப்படையில் இக் கோயில்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் வழக்கிலிருந்த வெவ்வேறு கட்டிட வகைகளைப் பின்பற்றி அமைந்திருப்பது இவற்றின் ஒரு சிறப்பாகும்.
குறிப்புகள்
- ↑ காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக்.63.
வெளியிணைப்புக்கள்
- Mahabalipuram – The Workshop of Pallavas – Part III in Indian History of Archiecture பரணிடப்பட்டது 2013-12-25 at the வந்தவழி இயந்திரம்
- Pancha Rathas, Mamallapuram Arhaeological Survey of India
- Archaeological Survey of India
- Dravidian Temple Architecture
Coordinates: 12°36′32″N 80°11′23″E / 12.60889°N 80.18972°E