துரைசாமி சைமன் லூர்துசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மேதகு
துரைசாமி சைமன் லூர்துசாமி
கீழைத் திருச்சபைகள் பேராயத்தின் முன்னாள் தலைவர்
சபைகத்தோலிக்க திருச்சபை
பிற பதவிகள்-
  • சொசுசா லிபியாவின் பட்டம் சார்ந்த ஆயர் (Titular Bishop) (1962–1964)
  • பெங்களூரின் துணை ஆயர் (1962–1964)
  • பிலிப்பியின் பட்டம் சார்ந்த ஆயர்(1964–1968)
  • பெங்களூரின் இணை ஆயர் (1964-1968)
  • பெங்களூரின் பேராயர் (1968–1971)
  • செயலர், விசுவாசப் பரப்புதல் பேராயம் (1973–1985)
  • சாந்தா மரியா தெல்லே கிராசியே அல்லே ஃபொர்னாச்சி ஃபுவோரி போர்த்தா கவால்லெஜ்ஜேரி-யின் கர்தினால் திருத்தொண்டர் (1985–1996)
  • தலைவர், கீழைமுறை திருச்சபைகளின் பேராயம் (1985–1991)
  • திருத்தொண்டர்கள் அணியின் முதல் கர்தினால் (1993–1996)
  • சாந்தா மரியா தெல்லே கிராசியே அல்லே ஃபொர்னாச்சி ஃபுவோரி போர்த்தா கவால்லெஜ்ஜேரி-யின் கர்தினால் குரு (29-Jan-1996 -)
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு21 திசம்பர் 1951
அகுஸ்தீன் சிமோன் கோலாஸ்-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு22 ஆகஸ்டு 1962
அம்புரோஸ் இராயப்பன்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது25 மே 1985
கர்தினால் குழாம் அணிகுருக்கள் அணி
பிற தகவல்கள்
பிறப்பு(1924-02-05)5 பெப்ரவரி 1924
கல்லேரி,
தென் ஆற்காடு மாவட்டம்,
மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது
விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு2 சூன் 2014(2014-06-02) (அகவை 90)
உரோம், லாசியோ, இத்தாலி
கல்லறைதூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுச்சேரி
11°55′59″N 79°49′50″E / 11.93299°N 79.83055°E / 11.93299; 79.83055
குடியுரிமைஇந்தியர்
சமயம்கத்தோலிக்க திருச்சபை
இல்லம்உரோமை, இத்தாலி
படித்த இடம்புனித பேதுரு பெரிய குருமடம், பெங்கலூர்
இலயோலாக் கல்லூரி, சென்னை
திருத்தந்தை அர்பன் பல்கலைக்கழகம், உரோமை
குறிக்கோளுரைஇலத்தீன்: Ædificare domum Dei
கடவுளின் வீட்டைக் கட்ட
கையொப்பம்துரைசாமி சைமன் லூர்துசாமி-இன் கையொப்பம்

கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி (Duraisamy Simon Cardinal Lourdusamy, பெப்ரவரி 5, 1924 - ஜூன் 2, 2014) கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த ஓர் இந்தியக் கர்தினால். இவர் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நான்காம் கர்தினால் ஆவார். தமிழ்நாட்டிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்தவர் இவர் ஒருவரே. ஆசியா கண்டத்திலேயே திருத்தந்தையின் திருப்பீடத்தின் கீழ் வரும் உரோமைச் செயலகத்தில் (Roman Curia) பணியாற்றிய முதலாமவர் ஆவார்.

மேதகு லூர்துசாமி உரோமை நகரில் அமைந்துள்ள திருத்தந்தை ஆட்சியான திருப்பீடத்தின் முதன்மை உறுப்பினருள் ஒருவர். 1985 ஆம் ஆண்டு கர்தினாலாக நியமனம் பெற்ற இவர் திருப்பீடத்தின் கீழ் வரும் ஆட்சித்துறைகளில் ஒன்றாகிய கீழைத் திருச்சபைகள் பேராயத்தின் தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இறையியல் துறையில் வல்லுனரான துரைசாமி சைமன் அமலோற்பவதாசு (1932-1990) இவருடைய தம்பி ஆவார். கர்தினால் லூர்துசாமி பல்லாண்டுகள் கத்தோலிக்க திருச்சபையில் பல நிலைகளில் சிறப்பான பணியாற்றி, சாதனைகள் பல புரிந்தவர்.

வாழ்க்கை

இன்றைய தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தாண்டவசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லேரி எனும் சிற்றூரில் 5 பிப்ரவரி 1924 அன்று பிறந்தார் லூர்துசாமி . திண்டிவனத்திலும் கடலூரிலும் பள்ளிப் படிப்பை முடித்தபின் பெங்களூரு புனித பேதுரு இறையியல் கல்லூரியில் மெய்யியலும் இறையியலும் பயின்றார். 1951ஆம் ஆண்டு, திசம்பர் 21ஆம் நாள் புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் குருவாக திண்டிவனத்தில் திருநிலைப்பாடு பெற்றார். அவரைத் திருநிலைப்படுத்தியவர் அப்போது புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிய மேதகு ஆகஸ்து சிமியோன் கோலாசு என்பவராவார். இவர் பாரிசு மறைபரப்புக் கழகம் (Paris Foreign Missions Society) என்னும் அமைப்பின் உறுப்பினர் ஆவார்.

குருத்துவத் திருநிலைப்பாடு பெற்றபின், லூர்துசாமி தமது மறைமாவட்ட ஆவணக் காப்பாளராகவும், அத்திப்பாக்கம் பங்குத் தளத்தில் துணைக் குருவாகவும் சில மாதங்கள் பணியாற்றினார். பின்னர் சென்னையிலுள்ள இலயோலாக் கல்லூரியில் 1952-1953 ஆண்டுகளில் கல்வி பயின்றார். திருச்சபைச் சட்டத் துறையில் (Canon Law) தேர்ச்சிபெறும் வண்ணம் உரோமையில் அமைந்துள்ள திருத்தந்தை அர்பன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயின்று அத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார் (1953-1956).

தாயகம் திரும்பி, 1956இலிருந்து 1962 வரை தம் மறைமாவட்டப் பேராயர் இராயப்பன் அம்புரோசு என்பவருக்குத் தனிச் செயலராகவும் அதே காலத்தில் சர்வ வியாபி வார இதழின் ஆசிரியராகவும், புதுச்சேரி கத்தோலிக்க பேராலயத்தில் இசைக் குழுத் தலைவராகவும் பணியாற்றினார்.

கர்தினால் லூர்துசாமி அவர்கள் தமிழ், இலத்தீன், ஆங்கிலம், கன்னடம், இத்தாலிய மொழி, பிரஞ்சு, ஜெர்மன், எசுப்பானியம், போர்த்துகீசியம், டச்சு மற்றும் ஸ்வீடிஷ் உட்பட பல மொழிகளில் புலமை பெற்றவராக திகழ்ந்தார்.

கிறிஸ்து கற்பித்த செபம் கற்பிக்கப்பட்ட இடத்திலுள்ள கோவிலில் (எருசலேம் நகர்) , தமிழ் மொழியில் இச்செபம் அடங்கிய கற்பலகை கர்தினால் லூர்துசாமியின் முயற்சியால் 1983-ஆம் ஆண்டு வைக்கப்பட்டது.

ஆயர் திருநிலைப்பாடு

திருத்தந்தை (பாப்பரசர்) 6ஆம் பவுல் (Pope Paul VI) லூர்துசாமியை சூலை 2, 1962ஆம் ஆண்டு பெங்களூரு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமித்தார். அதே ஆண்டு ஆகத்து 22 அன்று அவருக்கு ஆயர் திருநிலைப்பாடு வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் அப்போது புதுவை-கடலூர் பேராயராக இருந்த இராயப்பன் அம்புரோசு ஆவார். அவரோடு இணைந்து திருநிலைப்பாடு வழங்கியவர்கள் ஆயர் இராசரத்தினம் சுந்தரமும் ஆயர் தானியேல் அருள்சாமியும் ஆவர்.

உரோமை நகரில் நிகழ்ந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் (1962-1965) கலந்துகொண்டு ஆயர் லூர்துசாமி சிறப்பான பங்களித்தார். நவம்பர் 9, 1964 அன்று பெங்களூருவின் இணைப் பேராயராகப் பொறுப்பேற்றார். சனவரி 11, 1968ஆம் ஆண்டு பெங்களூரு பேராயர் தாமசு பொத்தகாமுரிக்கு அடுத்த பேராயராக அம்மறைமாவட்டத்தின் பதவிப் பொறுப்பை ஏற்றார்.

1971ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாள் பேராயர் லூர்துசாமி இந்தியாவை விட்டு உரோமை மைய ஆட்சித்துறையில் பணியாற்ற அழைக்கப்பட்டார். முதலில் மறைபரப்புப் பணிப் பேராயத்தில் இணைச்செயலராகவும், 1973, பெப்ரவரி 26இலிருந்து அதே பேராயத்தின் செயலராகவும் பணிபுரிந்தார். அதே காலத்தில் திருத்தந்தை அர்பன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.

கர்தினால் பதவி

திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் பேராயர் லூர்துசாமியை 1985, மே 25ஆம் நாள் கர்தினால் பதவிக்கு உயர்த்தினார். அதே ஆண்டு அக்டோபர் 30ஆம் நாளிலிருந்து 1991 மே 24 வரை அவர் கீழைத் திருச்சபைகள் பேராயம் என்னும் ஆட்சித்துறை அமைப்பின் தலைவராகப் பணிபுரிந்தார்.

1997ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் நாள் அன்னை தெரேசாவின் (1910-1997) அடக்கச் சடங்கில் கலந்துகொள்ள தம் சிறப்புத் தூதுவராக கர்தினால் லூர்துசாமியை அனுப்பிவைத்தார் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்.

இறப்பும் அடக்கமும்

கர்தினால் லூர்துசாமியின் கல்லறை

ஜூன் 2, 2014 காலை உரோம் நகரில் கர்தினால் சைமன் லூர்துசாமி காலமானார்.[1] இவர் பிறந்த புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் அந்தோனி ஆனந்தராயர் அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தந்தி அனுப்பினார்.

வத்திக்கானின் புனித பேதுரு பேராயலத்தில், ஜூன் 5ம் தேதி வியாழனன்று இறுதித் திருப்பலியும், வழிபாடும் நடைபெற்றன.[2] கர்தினால் குழு முதல்வர் மேமிகு. ஆஞ்சலோ சொதானோவின் தலைமையின் நல்லடக்க திருப்பலியும், திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிசு அவர்கள் அவ்வழிபாட்டின் இறுதிச் செபங்களைச் சொன்னார்.

அதன் பின்னர் இவரின் உடல் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு ஜூன் 7 மற்றும் 8ஆம் தேதி பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பிறகு இந்தியா, நேபாளத்திற்கான திருப்பீடத் தூதர் மேமிகு. சால்வதோர் பென்னாக்கியோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இறுதித்திருப்பலிக்கு பின்னர் 9ம் தேதி புதுச்சேரி தூய அமலோற்பவ அன்னை பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "தமிழகத்தின் கர்தினால், சைமன் லூர்துசாமி அவர்கள் இறையடி சேர்ந்தார்". வத்திக்கான் வானொலி. 2 சூன் 2014. http://ta.radiovaticana.va/news/2014/06/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/in3-804235. பார்த்த நாள்: 4 சூன் 2014. 
  2. "இறைவனடி சேர்ந்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களுக்கு ஜூன் 5 வத்திக்கானில் இறுதித் திருப்பலி". வத்திக்கான் வானொலி. http://ta.radiovaticana.va/news/2014/06/03/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_5/in3-804449. பார்த்த நாள்: 4 சூன் 2014. 

வெளியிணைப்புகள்

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
ஹெயிலே மரியம் கசாய்
— பட்டம் சார்ந்தது —
சொசுசா லிபியாவின் ஆயர்
2 ஜூலை 1962 - 9 நவம்பர் 1964
பின்னர்
குயிடோ அட்டிலியோ பெரிவிடாலி
முன்னர்
லியோனே ஜியோவானி பதிஸ்தா நிகிரிஸ்
— பட்டம் சார்ந்தது —
பிலிப்பீயின் பேராயர்
9 நவம்பர் 1964 - 11 ஜனவரி 1968
காலியாக உள்ளது
முன்னர்
தாமஸ் போதாகமுரி
பெங்களூருவின் பேராயர்
11 ஜனவரி 1968 – 30 ஏப்ரல் 1971
பின்னர்
பாகியம் ஆரோக்கியசாமி
முன்னர்
பெர்னார்டின் கான்டின்
செயலர், விசுவாசப் பரப்புதல் பேராயம்
19 டிசம்பர் 1975 – 30 அக்டோபர் 1985
பின்னர்
யோசே தாமஸ் சன்சேஸ்
முன்னர்
வால்டைஸ்லா ரூபின்
தலைவர், கீழைமுறை திருச்சபைகளின் பேராயம்
30 அக்டோபர் 1985 – 24 மே 1991
பின்னர்
அசிலி சில்வெஸ்டிரினி
முன்னர்
அரெலியோ சபாதினி
திருத்தொண்டர்கள் அணியின் முதல் கர்தினால்
5 ஏப்ரல் 1993 – 29 ஜனவரி 1996
பின்னர்
இடுவார்டோ மடினிஸ் சோமாலோ