திருமழுவாடிப் புராணம்
Jump to navigation
Jump to search
திருமழுவாடிப் புராணம் [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப்பிரகாசரால் இயற்றப்பட்டது. திருமழபாடியில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றிய புராணம் இது. மார்க்கண்டேயனுக்காகச் சிவபெருமான் மழுவைத் தாங்கி ஆடிய இடம் ஆதலால் இவ்வூர் மழுவாடி என்னும் பெயரைப் பெற்றுள்ளது. இதன் மருவிய பெயர் மழுவை. இறைவன் பெயர் வயிரத்தூணர். கமலை ஞானப்பிரகாசர் இவ்வூரில் மாசித் திருவிழா கண்டுகொண்டிருந்தபோது அவ்வூர்ப் பெருமகன் உலகநாதன் என்பவர் வேண்டிக்கொண்டபடி இப் புராணம் பாடப்பட்டதாக இந்த நூலிலுள்ள பாயிரப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.
நூல் எட்டுச் சருக்கங்களில் 571 பாடல்களைக் கொண்டுள்ளது. [2]
பாடல் - எடுத்துக்காட்டு [3]
1
- பொங்கு எழில் பரவை தன்பால் புகுந்துறப் படிதல் வேண்டிச்
- சங்கிலித் துவக்கை நீக்கித் தனது அருந் துதிக்கையாலே
- அங்குச பாகன் தன்னை அடைந்து ஏவல் கொண்டு வீறும்
- துங்க முத்தமிழ் மதச் சிந்தூரத்தினைத் துதித்தல் செய்வாம்
2
- பாடல் இன்புறுவன அசுணம், பதி சேர்ந்து
- ஆடல் இன்புறுவன மயில்கள், ஆரையில்
- கூடல் இன்புறுவன அன்றில், கூர்மதுத்
- தேடல் இன்புறுவன சிறை கொள் வண்டினம்
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 79.
- ↑ இந்த நூலின் 34 ஆம் பாயிரப் பாடல் இந்த நூலில் 610 பாடல்கள் இருப்பதாகச் சொல்கிறது
- ↑ பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டது