சாந்தி சச்சிதானந்தம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சாந்தி சச்சிதானந்தம் |
---|---|
பிறந்ததிகதி | ஆகத்து 14, 1958 |
பிறந்தஇடம் | ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | 27-08-2015 (அகவை 57) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | மொறட்டுவ பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | அரசியல் விமரிசகர், பெண்ணியவாதி, சமூக ஆரவலர் |
பெற்றோர் | வல்லிபுரம் சச்சிதானந்தம், ஞானரத்தினம் |
துணைவர் | மனோ ராஜசிங்கம் (இ. 2009) |
பிள்ளைகள் | அக்சயன், மைத்ரேயி, ஆரண்யா |
சாந்தி சச்சிதானந்தம் (Shanthi Sachithanandam, 14 ஆகத்து 1958 - 27 ஆகத்து 2015) இலங்கைத் தமிழ் அரசியல் விமர்சகரும், சமூக ஆர்வலரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பெண்ணியல் வாதியுமாவார்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம், ஈச்சமோட்டையில் 1958 ஆம் ஆண்டில் பிறந்த சாந்தி சச்சிதானந்தம், கொழும்பு புனித பிரிஜெட் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவர். இவரது தந்தை வல்லிபுரம் சச்சிதானந்தம் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினர். 1970 நாடாளுமன்றத் தேர்தலில் நல்லூர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டவர். மனோரஞ்சன் ராஜசிங்கம் (இறப்பு: 2009) என்பவரைத் திருமணம் புரிந்த சாந்தி சச்சிதானந்தத்திற்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
பணி
சாந்தி சச்சிதானந்தம் ஐக்கிய நாடுகள் அவையில் பணியாற்றியவர். விழுது மேம்பாட்டு மையம் என்ற அரச சார்பற்ற சமூக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பணியாற்றினார். 2012 சனவரி 23 அன்று கொழும்பில் உள்ள விழுதுகள் நிறுவனத்தின் அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. மட்டக்களப்பில் "மன்று" என்ற அரச சார்பற்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் சமூக அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டார். ஆங்கிலத்திலும், தமிழிலும் பல அரசியல், சமூக ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இருக்கிறம் என்ற மாத இதழை வெளியிட்டு வந்தார்.
அரசியலில்
சாந்தி சச்சிதானந்தம் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் உரிமைகள் கட்சியின் சார்பில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
வெளியிட்ட நூல்கள்
- சரிநிகர் சமானமாக… முரண்நிலைகளை உருமாற்றும் முறைவழிகளை ஆண்களும் பெண்களும் சமானமாக முன்னெடுக்கும் ஆற்றல்களை மேம்படுத்தல். கைநூல் 2 - கொழும்பு: விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், 2004
- பெண்களின் சுவடுகளில் - சென்னை, மார்ச் 1989
- வறுமையின் பிரபுக்கள் (கட்டுரைத் தொகுப்பு, 2003)
மறைவு
நீண்டகாலம் சுகவீனமுற்றிருந்த சாந்தி சச்சிதானந்தம் 2015 ஆகத்து 27 இல் கொழும்பில் காலமானார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Shanthi Sachithanandam – Visionary Of Social Change & Beautiful Human Being Visakha Tillekeratne, கொழும்பு டெலிகிராப், ஆகத்து 29, 2015
- 1958 பிறப்புகள்
- 2015 இறப்புகள்
- ஈழத்து எழுத்தாளர்கள்
- யாழ்ப்பாணத்து நபர்கள்
- இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்
- பெண்ணியவாதிகள்
- பெண் சமூகவியலாளர்கள்
- இலங்கைத் தமிழ்ப் பெண்கள்
- இலங்கைத் தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்
- இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
- தமிழ்ப் பெண் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
- புற்றுநோயால் இறந்தவர்கள்