கூகைக் கோழியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கூகைக் கோழியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 364 எண் கொண்ட பாடலாக உள்ளது.

இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் இவருக்கு இவரது பாடலிலுள்ள 'கூகைக் கோழி' என்னும் பெயரைக்கொண்டு இவருக்குக் கூகைக் கோழியார் என்று பெயர் சூட்டியுள்ளார்.

புறநானூறு 364 பாடல் தரும் செய்தி

  • துறை: பெருங்காஞ்சி

காஞ்சி என்னும் சொல் நிலையாமையைக் குறிக்கும். பெருங்காஞ்சி என்பது பெரிய நிலையாமை அதாவது கையறவைக் குறிக்கும். கையறவு என்பது ஒருவர் காலமான நிலை.

யாருடைய கையறவை இவர் பாடியுள்ளார் என்னுமிடத்திலுள்ள எழுத்து செல்லரித்துப்போய் படிக்க இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.

காலமான அந்த வள்ளல் பாடினி அணிந்துகொள்ள வாடாமல் இருக்கக்கூடிய பொன்மாலைகளைப் பரிசிலாக வழங்கினானாம். பாணர்களுக்குத் தாமரை வழங்கினானாம். அந்தத் தாமரை கேணியில் பூக்காத பூவாம். தீக்கொழுந்து எரிவது போல் இருக்குமாம்.

தீயில் சுட்டெடுத்த ஆட்டுக்கறித் துண்டுகளும், நறவுக் கள்ளும் நாவுக்குச் சுவையாகத் தருவானாம். பெற்றவர்கள் கள்ளை உண்டும், கறியைத் தின்றும் மகிழ்வதோடு மற்றவர்களுக்கு வழங்கியும் மகிழ்வார்களாம். அந்த அளவுக்கு மிகுதியாகத் தருவானாம்.

கிடைந்நதற்கு அரியனவற்றை அவன் உரிமையாக்கித் தருவானாம்.

இவன் இறந்த பின் இவனது உடலை வெளியில் எறியாமல் தாழியில் இட்டுப் புதைத்துவிட்டார்களாம். அதனால் கூகைக்கோழி மனம் தாங்க முடியாமல் அமைதியின்றிப் புழுங்கிற்றாம்.

பழக்கம்

  • ஆட்டுக் கடாவை வெட்டித் தீயிலிட்டுக் கொளுத்திக் கனிந்திருக்கும் பதத்தில் உண்பது வழக்கம்.
  • இறந்தவர்களின் உடல்களை வெட்ட வெளியில் எறிந்து பறவைகளுக்கு இரையாக்கும் வழக்கமும் தமிழ்மக்களிடம் நிலவிவந்தது.
  • இறந்தவர்களைத் தாழியில் இட்டுப் புதைப்பது வழக்கம்.

பழந்தமிழ்

  • கேணி = குளம்
"https://tamilar.wiki/index.php?title=கூகைக்_கோழியார்&oldid=11908" இருந்து மீள்விக்கப்பட்டது