எஸ். பி. எல். தனலட்சுமி
எஸ். பி. எல். தனலட்சுமி | |
---|---|
பிறப்பு | தஞ்சாவூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
தொழில் | திரைப்பட நடிகை, கருநாடக இசைப் பாடகி |
நடிப்புக் காலம் | 1935–1950கள் |
உறவினர் | டி. ஆர். ராஜகுமாரி[1] |
எஸ். பி. எல். தனலட்சுமி பழம்பெரும் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
தனலட்சுமி தஞ்சாவூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். தாயார் பெயர் சங்கீதம் குஜலாம்பாள். இவருக்கு ஐந்தாவதும், கடைசியாகவும் பிறந்தவர் தனலட்சுமி. உமையாள்புரம் கல்யாணராம ஐயரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார்.[2] வீணை வாசிக்கவும் கற்றுக் கொண்டார். கதாகாலட்சேபமும் செய்து வந்தார்.[2] தனலட்சுமி நடிகை டி. ஆர். ராஜகுமாரியின் சித்தி ஆவார்.[1]
1935 சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட நெசனல் மூவிடோன் கலையகத்தின் முதல் படமான பார்வதி கல்யாணம் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர்களைத் தேடி அதன் நிறுவனர் மாணிக்கம் செட்டியார் தஞ்சாவூர் வந்த போது, தமது படத்தில் பார்வதியாக நடிக்க தனலட்சுமியைத் தேர்ந்தெடுத்தார். 1936 இல் இத்திரைப்படம் வெளிவந்தது.[2] அதனைத் தொடர்ந்து பி. கே. ராஜா சாண்டோவின் இயக்கத்தில் வசந்தசேனா படத்தில் நடித்தார். அதன் பின்னர் சௌபாக்கியவதி (1939) திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நடித்த காளமேகம் படத்தில் மோகனாங்கியாகவும், தேச பக்தி படத்தில் கலாவதி என்ற பாத்திரத்திலும் நடித்தார். ஆனாலும் இவ்விரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை.[2]
பிரபாவதி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் இவர் இந்தி மெட்டில் இவர் பாடிய ஜெகதாம்பிகையே என்ற பாடல் அப்போது பிரபலமாக இருந்தது.[2]
இவருடைய சகோதரிகள் தமயந்தி, ராஜகுமாரி ஆகியோரும் சில திரைப்படங்களில் நடித்தனர். தமயந்தியுடன் இணைந்து மேடை இசைக்கச்சேரிகளில் பாடி வந்தார்.[2]
நடித்த சில திரைப்படங்கள்
- பார்வதி கல்யாணம் (1936)
- வசந்தசேனா (1936)
- சௌபாக்கியவதி (1939)
- காளமேகம் (1940)
- தேச பக்தி (1940)
- பிரபாவதி (1944)
- கிருஷ்ண பக்தி (1949)
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 பா. தீனதயாளன் (11 சனவரி 2016). டி.ஆர். ராஜகுமாரி: 1.செக்ஸ் அப்பீல்!. தினமணி. https://www.dinamani.com/junction/kanavukkannigal/2016/jan/09/1.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D-1255893.html.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 கோபால், பி. ஆர். எஸ். (நவம்பர் 1949). நட்சத்திர மாலை. இராயப்பேட்டை, சென்னை: பேசும் படம்.