எருமை வெளியனார் மகனார் கடலனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாக ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது அகநானூறு 72ஆம் பாடலாக உள்ளது. இவரது தந்தையார் எருமை வெளியனார் என்பவரும் ஒரு புலவர். இவரது பாடல்கள் இரண்டு சங்கநூல் தொகுப்பில் உள்ளன. இருவரும் தாம் சொல்லும் கருத்துக்களை உவமைநயத்துடன் சொல்கின்றனர்.
கடலனார் பாடல் தரும் செய்தி
அவன் அவளது வீட்டுக்கு வெளியில் இரவு வேளையில் அவளுக்காகக் காத்திருக்கிறான். அவளும் தோழியும் பேசிக்கொள்கின்றனர். அவன் இரவு வேளையில் பல இடர்பாடுகளைத் தாண்டி அருள்புரியும் நெஞ்சத்தோடு வந்திருக்கிறான். வேல் ஒன்றே துணையாகக் கொண்டு வந்திருப்பவன் கொடியவனும் அல்லன். அவனைத் தந்த நீயும் தவறுடையை அல்லை. அவன் வந்த வழியின் இடர்பாடுகளை எண்ணித் துன்புறுமாறு செய்த யானே தவறுடையேன், என்கிறாள் ஒருத்தி. இதனைச் சொல்பவள் இருவருள் யாராகவேண்டுமானாலும் இருக்கலாம் என்று பொருள்படும்படி பாடல் அமைந்துள்ளது.
வழியில் உள்ள இடர்ப்பாடுகளைக் கூறும்போது காட்டப்படும் உவமைகள்.
- இருளைக் கிழிப்பது போல வானம் மின்னும்.
- புற்றிலிருக்கும் கறையான்களை மேய இரவில் மின்மினிப் பூச்சிகள் புற்றைச் சுற்றிப் பறக்கும். அது கொல்லன் உலைக்களத்தில் காய்ச்சிய இரும்பைத் தட்டும்போது பறக்கும் தீப்பொறிகள் போலத் தோன்றும்.
- கறையானை மேயப் புற்றைத் தோண்டும் கரடி கொல்லன் போலத் தோன்றும்.
வழியின் இடர்ப்பாடு
இப்படிப்பட்ட வழியில் வரும்போது ஆற்றைக் கடக்கவேண்டும். ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கும். எனவே ஆற்றில் நீந்தி வரவேண்டும். அதில் பார்ப்பதற்கே அச்சம் தரும் முதலைகள். ஆற்றைத் தாண்டி வந்தால் கவான் என்னும் மலைவெடிப்புப் பள்ளம். அதில் மூங்கில் காடு. அங்கே உழுவை என்னும் வேங்கைப்புலியின் ஆண், வயிற்றில் குட்டியைச் சுமந்துகொண்டிருக்கும் தன் ஈருயிர்ப் பிணவின் பசியைப் போக்க ஆண்யானையைக் கொல்லும். அங்கே பாம்பு உமிழந்திருக்கும் மணி வெளிச்சத்தில் அந்தக் களிற்றை இழுக்கும். அங்கே உள்ள ஒற்றையடிப் பாதை இரவில் வாள் மின்னுவது போலத் தோன்றும். இப்படிப்பட்ட இடர்பாடுகள் நிறைந்த வழியில் அவன் தன் வேல் ஒன்றை மட்டுமே துணையாகக் கொண்டு வருகிறான்.