உதயம் (மாத சஞ்சிகை)
உதயம் இலங்கையில் 1954 முதல் 56 வரை வெளியான ஒரு மாதிகை.
நோக்கம்
இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே தமிழ் பண்பாடு, கலாசாரம் முதலியவைகளைப் பரப்புவதற்கும், காலத்திற்கேற்ப புதிய கருத்துக்களைப் படைத்து தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் இலக்கிய சஞ்சிகைகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் வெளிவந்த மாத சஞ்சிகையே உதயம்.
ஆசிரியர்
இதன் ஆசிரியர் வை. அநவரத விநாயகமூர்த்தி. முதல் இதழ் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ஜயவருஷம், சித்திரை மாதம்) வெளிவந்தது. 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் இச்சஞ்சிகை வெளிவந்தது.
தமிழ் இலக்கிய வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இலக்கியம், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவைகள், பாலர் மன்றம், மாதர் பகுதி முதலிய பல்வேறு அம்சங்களைக் கொண்டு வெளிவந்த 'உதயம்' சஞ்சிகை 'இரண்டு ஆண்டு மலர்களை'யும் வெளியிட்டது.
கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி என்று பல போட்டிகளை நடத்தி இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து பரிசில்களையும் வழங்கி கௌரவித்தது. சிற்பி சரவணபவன், கச்சாயில் இரத்தினம், கே. டானியல் போன்ற சிறுகதை எழுத்தாளர்களும் , செ. வேலாயுதபிள்ளை, வன்னியூர் வேலன் போன்ற கவிஞர்களும் பரிசு பெற்று உற்சாகமடைந்து பெரும் எழுத்தாளர் ஆனானோரில் சிலராவர்.
உதயத்தில் எழுதியவர்கள்
வித்துவான் பண்டிதர் கா. பொ. இரத்தினம், வித்துவான் க.கி. நடராஜன், வித்துவான் எப். எக்ஸ். சி. நடராசா, வை. சுப்ரமணியசிவம், லஷ்மி வேலுப்பிள்ளை, வை. ஆநவரத விநாயக மூர்த்தி, செ. வேலாயுதபிள்ளை, மஹாகவி, முருகையன், கி. வா. ஜகந்நாதன், பரமஹம்ஸதாசன், நாவற்குழியூர் நடராசன், சில்லையூர் செல்வராசன், ஈழத்துச் சோமு, அ. ந. கந்தசாமி, கச்சாயில் இரத்தினம், தாழையடி சபாரத்தினம், கே. டானியல், பேராசிரியர் க. கைலாசபதி என்று பலர் எழுதினர்.
சித்திரங்கள்
இலங்கையின் சித்திரக் கலைஞர்களான சி. சிவஞானசுந்தரம், அம்பிகைபாகன் ஆகியோர் உதயத்தின் இலக்கியப் பணியில் இணைந்து பணியாற்றினர்.
கருத்துகள்
உதயம் பற்றி சில பத்திரிகைகளின் கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன.
- சேய் நாடாகிய இலங்கையிலிருந்து வெளியாகும் உதயம் (மாதப் பத்திரிகை) தமிழ் இலக்கிய வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டிலிருந்து வருகிறது. வித்துவான் பண்டிதர்
- க.பொ. இரத்தினம் எம்.ஏ, பி.ஓ.எல். அளிக்கும் இலக்கிய விருந்தில் வள்ளல் பாரியைப் பற்றிய கட்டுரை சுவைமிகு தமிழில் தீட்டப்பட்டு இலக்கிய மணம் வீசுகிறது. - கல்கி (இதழ்) 1954.08.15
- தமிழ் வருடப் பிறப்பிலிருந்து உதயம் வெளிவரத் தொடங்கியுள்ளது. முதல் இதழில் ஸ்ரீ பி.கோதண்டராமன், திரு. கா.பொ. இரத்தினம், ஸ்ரீ.வை அநவரத விநாயக மூர்த்தி முதலியோர் நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளனர். - விந்தியா (பம்பாய்) - ஜுலை 1954 -
- இலங்கையிலிருந்து வெளிவந்த மலர்களில் ஒரு தனி ஸ்தானத்தை உதயம் ஆண்டு மலர் பெறுகின்றது. - வீரகேசரி (கொழும்பு) -1955.09.11
- இணுவை மூர்த்தி அவர்களின் இடையறாத முயற்சியால் வத்தளை என்ற இடத்திலிருந்து கடந்த ஓராண்டு காலமாக திங்கள் தோறும் உதயமாகி வந்து கொண்டிருக்கும் உதயத்தின் ஆண்டு மலரைப் பார்த்ததும் தமிழர்களின் இதயங்களில் நீங்காத ஓர் இடத்தை 'உதயம்' பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை புலப்படுகிறது. - சுதந்திரன் (கொழும்பு) 1955.07.10