இல. நடராசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இல. நடராசன் (1919 – 15 சனவரி 1939[1]) என்பவர் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சரான இராசாசி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக ஆக்கியதை எதிர்த்து, 1937இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் முதன்முதலாக உயிர்விட்ட போராளி ஆவார்.[2]

குடும்பம்

சென்னை ஜார்ஜ் டவுன், போர்த்துகீசு தெருவைச் சேர்ந்த கே. இலட்சுமணன், குப்பம்மாள் என்கிற ஆதிதிராவிட மரபு பெற்றோருக்குப் பிறந்தவர் நடராசன். இவர் வீட்டிற்கு ஒரே மகன், திருமணம் ஆகாதவர்.[3] இவரும் இவரது தந்தையும் தச்சு வேலை செய்துவந்தனர்.

இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம்

கட்டாய இந்தித் திணிப்பைக் கண்டு கொதித்த நடராசன், 1938 திசம்பர் 05 அன்று சென்னை சௌகார் பேட்டையில் இருந்த இந்து தியாலஜிகல் உயர்நிலைப்பள்ளி முன்பு இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மறியலில் கலந்துகொண்டார்.

சிறைத்தண்டனை

மறியலில் ஈடுபட்டதற்காக கைதான நடராசனுக்கு 1938 திசம்பர் 5ஆம் நாள் ஆறுமாத கடுங்காவலும், 50 ரூபாய் அபராதமும் விதிக்கப்படது. சிறையில் இவருக்கு 'சி' (கடைசி) வகுப்பு வழங்கப்பட்டது. சிறையில் இருந்தபோது மூன்றுவாரத்துக்குள் நடராசனின் கீழுதட்டில் கொப்புளம் கிளம்பியதால் திசம்பர் 26 அன்று சிறை மருத்துமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப் பெற்றார். அடுத்த நாள் கொப்புளம் வெடித்து 102 டிகிரி காய்ச்சலும், தலையின் இடது பக்கம் வீங்கிச் சிவந்தது. கடும் வலியும் ஏற்பட்டது. 28, 29 ஆகிய நாட்களில் காய்ச்சல் தொடர்ந்தது. வலது தொடையிலும், இடது காலிலும் புதிதாக வீக்கம் தோன்றி, தோல் மென்மையாக ஆனது. 30ஆம் தேதி காய்ச்சல் சற்று தணிந்தாலும் முகம் முழுவதும் வீங்கி உதடு, முன்னங் கழுத்து போன்றவை வீங்கிவிட்டன. இதைத் தொடர்ந்து இது சாதாரண உடல் கோளாறு அல்ல என்று உணர்ந்த சிறை மருத்துவர்கள் அருகில் இருந்த பொது மருத்துவமனைக்கு நடராசனை மாற்றினர். நடராசனுக்கு வந்த ‘cellulitis complicated with septicaemia and pyaemia’ என்ற நோய், ‘pyaemic abscesses in the brain’ ஆகவும் மாறியது (அதாவது கடுமையான சீழ் கொண்ட நோய்த்தொற்று ரத்தத்தில் கலந்து, மூளையையும் பாதித்துவிட்டது). பொது மருத்துவமனையில் சேர்க்கபட்ட இரு வாரங்கள் கழித்து 1939 சனவரி 14 அன்று நடராசன் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[4] மன்னிப்புக் கடிதத்தை அளித்தால் விடுதலைசெய்வதாக அரசு கூறியபோது அதற்கு நடராசன் மறுத்துவிட்டார்.[5]

மரணம்

தண்டனைக் கைதியாகவே 1939 சனவரி 15 அன்று பிற்பகல் 2 மணிக்கு காலமானார். இவரது உடல் 16ஆம் தேதி சென்னை மூலக்கொத்தளம் சுடு காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய இறுதி ஊர்வலத்திக்கு 10000கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஆல்பெர்ட் ஜேசுதாசன் தலைமையில், அண்ணாதுரை, அ. பொன்னம்பலம், கு. மு. அண்ணல் தங்கோ, டாக்டர் தருமாம்பாள், காஞ்சி பரவஸ்து ராஜகோபாலாச்சாரி, நாராயணி அம்மை மற்றும் பலர் இறந்த நடராசனின் நெஞ்சத் திண்மையைப் பாராட்டினர் .[5] [6]

விளைவு

மொழிக்கான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு கைதியாக இருந்த போதே ஒருவர் இறந்தது அதுவே முதல் முறை. அந்தவகையில் மொழிப் போராட்டத்தில் முதல் தியாகி நடராசன். நடராசனின் மரணம் சூழலை உணர்வு பூர்வமாக்கிவிட்டது போராட்டத்தை மேலெடுத்துச்செல்ல இம்மரணம் அடிக்கல்லானது. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையவே, இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணையை 1940 பெப்ரவரி 21 அன்று அரசு திரும்பப் பெற்றது.[7]

இவர்களின் நினைவைப் போற்றும்வகையில் சென்னையில் தமிழக அரசு அரசுக் கட்டடம் ஒன்றிற்கு தாளமுத்து நடராசன் மாளிகை என்று பெயர் சூட்டியுள்ளது.[8]

இதனையும் காண்க

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

மேற்கோள்கள்

  1. "ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும்?" (in ta). https://www.hindutamil.in/news/opinion/columns/30296-.html. 
  2. "உலக வரலாற்றில் ஒரு மொழிப் போர்". தி இந்து (தமிழ் ). 25 சனவரி 2015. http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/article6820832.ece. பார்த்த நாள்: 25 ஏப்ரல் 2016. 
  3. https://worldtamilforum.com/historical_facts/thalamuthu-natarajan/
  4. "நடராசன் புகழுடம்பு எய்திய கதை" (in ta). https://www.hindutamil.in/news/opinion/columns/762614-anti-hindi-struggle.html. 
  5. 5.0 5.1 "தமிழன் தொடுத்த போர்" நூல் ஆசிரியர் மா. இளஞ்செழியன், அத்தியாயம் 9.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2021-08-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210803053013/https://tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0008643_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf. 
  7. வாலாசா வல்லவன் (9 சூன் 2017). "திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -50". கட்டுரை (கீற்று). http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-june17/33249-50. பார்த்த நாள்: 11 சூன் 2017. 
  8. தி இந்து தமிழ் 24.1.2015 மொழிப்போர்;வரலாறு வரிசையிலும் இருக்கிறது கட்டுரை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இல._நடராசன்&oldid=27378" இருந்து மீள்விக்கப்பட்டது